மலேசியாவைக் காப்பாற்ற நம்பிக்கை கூட்டணி தேவை

கி.சீலதாஸ் – தேர்தல் காலங்களில் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் பேச்சுகள், அபிப்பராயங்கள், பழைய தவறுகளை மறைக்கும் முயற்சிகள், விளக்கங்கள் யாவும் தேர்தல் காலத்தின் சர்வசாதாரண அணுகுமுறைகளாகும். தாய்மொழிப் பள்ளிக்கூடங்கள் ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும்.

தாய்மொழிக் கல்விக்கான பாதுகாப்பைப் பற்றி மலாயாவின் சுதந்திரத்திற்கு முன்பே பேசி ஒரு முடிவு காணப்பட்டது. சீனம், தமிழ் ஆட்சி மொழிகளில் ஒன்றாக இருக்க முடியுமா என்பதில் இருந்தது; மாநிலச் சட்டமன்றங்கள் நாடாளுமன்றம் ஆகியவற்றில் சீனமும், தமிழும் பயன்படுத்த பேச்சுகள் நடந்தன.

சுதந்திரப் பேச்சுவார்த்தையில் முன்னிலை வகித்த அம்னோ தலைவர்கள் துங்கு அப்துல் ரஹ்மான், துன் அப்துல் ரசாக் போன்றோர் தாய்மொழி கல்விகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் தயக்கம் காட்டாவிட்டாலும், அம்னோவில் இருந்த மொழி தீவிரவாதிகள் இந்த அணுகுமுறைக்கு இடம் கொடுப்பதாக இல்லை.

எனவே, தாய்மொழி பள்ளிகளுக்குச் சட்டப்பூர்வமான ஆதரவும், நிதியும் ஒதுக்க ஒப்புக்கொள்ளப்பட்டுக் கொண்டு பிரச்சினைக்குத் தீர்வு காணப்பெற்றது. இதை ஏற்றுக்கொண்டு சீன, இந்தியத் தலைவர்கள் தேசிய மொழி மட்டும் தான் ஆட்சி மொழி என்பதை ஏற்றுக்கொண்டனர்.

அதோடு, மாநிலச் சட்டமன்றங்கள், நாடாளுமன்றம் ஆகியவற்றில் தேசிய மொழியும், ஆங்கிலமும் பயன்படுத்தலும் ஒப்புக்கொள்ளப்பட்டன. இந்தத் திட்டத்தை எல்லோரும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின், அதில் பிரச்சினை கிளப்புவது முறையல்லவே! ஆனால், நடந்தது என்ன?

தாய்மொழிப் பள்ளிக்கூடங்கள் சட்டப்படி பாதுகாப்பு நல்கப்பட்ட போதிலும் அவற்றின் தொடர்ச்சி தேசிய ஒற்றுமை உணர்வை வளர்க்க உதவாது என்ற கருத்தின் அடிப்படையில் அவற்றை முடக்க வேண்டும் எனப் பேசிய முக்கியமானவர்களில் அம்னோவைச் சேர்ந்தவர்கள் அடங்குவர்.

ஒரு காலத்தில் கல்வி அமைச்சராக இருந்த துன் டாக்டர் மகாதீர் முகம்மது கூட தாய்மொழிக் கல்வி தேசிய உணர்வை வளரக்க தடையாக இருக்கிறது என்ற தவறான கருத்தை இன்றளவும் மாற்றிக் கொள்ளவில்லை.

2018ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான அறிக்கையில் தாய்மொழிப் பள்ளிக்கூடங்கள் பாதுகாக்கப்படும் என்று கூறியது. அந்த அறிக்கைக்கு முன்னுரை வழங்கிய மகாதீர் முகம்மது நம்பிக்கை கூட்டணி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் உறுதி அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்றதை மறந்து, பிரதமரானதும் தாய்மொழிப் பள்ளிக்கூடங்கள் தேசிய ஒற்றுமைக்குத் தடையாக இருக்கின்றன என்ற தமது பழைய பல்லவியைப் பாடியதையும் மலேசியர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

அதோடு சமீபத்தில் சில மலாய் மொழி இயக்கங்கள் தாய்மொழிப் பள்ளிகளுக்கு எதிரான தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது நினைவிருக்கலாம். வழக்கில் வாதாடிய அரசு தரப்பு வழக்குரைஞர் தமது வாதத் தொகுப்பில் தாய்மொழிப் பள்ளிகள் சட்டப்படி இயங்குகின்றன எனக் கூறினார்.

இப்பொழுது பொதுத் தேர்தலில் போட்டியிடும் கைரி ஜமாலுதீன் சீன, தமிழ்ப் பள்ளிகள் இந்நாட்டின் கல்வியின் ஓர் அங்கம் என்று குறிப்பிட்டுள்ளார். வரவேற்க வேண்டிய கூற்று, ஏற்றுக்கொள்ள வேண்டிய உறுதிமொழி, அபிப்ராயம், போற்ற வேண்டிய தெளிவுரை. ஆனால், தேர்தல் காலத்து வாக்குறுதிகள் ஓடும் தண்ணீரில் எழுதப்பட்டது போல் இருக்கும் என்று சொன்னால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

இந்த நாட்டில் தாய்மொழிப் பள்ளிக்கூடங்கள் இயங்குவதற்கு அம்னோ தடையாக இருக்காது. அவற்றின் வளர்ச்சியில் கரிசனம் காட்டும் என்பதை வெளிப்படையாக உறுதி செய்யுமா?

அதோடு, தாய்மொழிப் பள்ளிக்கூடங்கள் குறித்த எவ்வித எதிர்ப்பும் இனிமேலும், (அதாவது அறுபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு) தொடாராது. அவ்வாறு எதிர்ப்பு வெளிப்படுத்துவது சட்டப்படி குற்றமென அம்னோ ஏற்றுக்கொள்ளுமா?

மலேசிய சீனர் சங்கமும் மஇகாவும் இந்தக் கோரிக்கையை முன்வைத்து ஓர் உறுதியான விளக்கத்தைப் பெற முடியுமா? முடியாது! ஏனெனில், “இது தேர்தல் காலப் பேச்சு. தேர்தல் முடிந்தால் போச்சு!”

நம்பிக்கை கூட்டணி இந்தத் தாய்மொழி விஷயத்தில் தெளிவாக இருக்கிறது. அது சகுனிகளைக் கழற்றிவிட்டு நியாயமான, நேர்மையான வழியைக் கடைப்பிடிக்கும் என்று நம்பலாம்.

இந்தக் காலகட்டத்தில் நம் நாட்டைப் பாதுகாக்க நம்பிக்கை கூட்டணி தேவை. அதனால் ஊழலை ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கையை  மக்களிடையே நிலைநிறுத்த முடியும்.