இருபத்திரண்டு மாதங்களில் நாட்டைக் காப்பாற்றியது நம்பிக்கை கூட்டணி      

   கி.சீலதாஸ் –       என்  நண்பர்  சொன்ன  ஒரு  சம்பவத்தை   உங்களோடு  பகிர்ந்து  கொள்வேன்.  ஒருவர்  பிரமாண்டமான  வீட்டைக்  கட்டினார்.  வீட்டின்  அழகை,  அதன்  சுற்றுப்புறத்தைப்  பார்ப்பவர்கள்  அனைவரும்: “ஆகா…  ஓகோ…”  என்று   புகழ்ந்தனர்.  அந்த  வீட்டைச்  சுற்றி  ஆழமான  வாய்க்கால்   போடப்பட்டிருந்தது.  கடும்  மழைக்காலத்தின்போது  மழை  வெள்ளம்  வீட்டின்  முன்னும்  பின்னும்  தேங்கிவிடுவதைத்  தடுப்பதற்காக  கட்டப்பட்ட வாய்க்காலாகும். ஆழமானதாக இருந்தபோதிலும்   கண்களுக்குப்  படாதபடி  நன்றாகச்  சிமிட்டி – அதாவது  சிமெண்ட் –  போட்டு  மூடிவிட்டார்   வீட்டின்  உரிமையாளர்.  வாய்க்கால்  இருந்ததை  யாரும் காண முடியாது. மழைக்காலங்களிலும்  சரி  அல்லது  சாதாரணமான நாட்களில்  அந்தக்  கால்வாயில்  மண்டிக்கிடக்கும்  குப்பைகளை  கண்களுக்குப்  படாமல்  இருப்பதற்காகவே  இந்த  ஏற்பாடு.

பல ஆண்டுகளுக்குப்  பிறகு  எங்கிருந்தோ  துர்நாற்றம்  எழுந்து  வீட்டில்  குடியிருப்போர்க்கு  அடிக்கடி  நோய் ஏற்படுத்தியது. வீட்டின்  உரிமையாளர்  அதன்  மூலத்தைக்  கண்டுபிடிக்க  முயன்றார்.  ஒன்றும்  தென்படவில்லை.   பிறகு  ஒருவர்  வந்து  வீட்டையும்  சுற்று  புறத்தையும்  பார்வையிட்டு:  ஒருவேளை  கால்வாயிலிருந்து  இந்த  துர்நாற்றம்  வருவதற்கு  வாய்ப்பு  உண்டு  என்று  அறிவித்தார்.  வீட்டின்  உரிமையாளர்  ஒரு  திறமை  வாய்ந்த   கால்வாய்  சுத்தம்  செய்யும்  நிறுவனத்தோடு  தொடர்பு  கொண்டு  விவரத்தைத்  தெரிவித்தார்.  அந்த   நிறுவன  உரிமையாளரும்  அந்த  வேலையை  உடனே  தொடங்க  ஒப்புக்கொண்டர்.  கால்வாயை  சுத்தம்  செய்து  முடிக்க  எவ்வளவு  நாளாகும்  என்ற  வீட்டு  உரிமையாளரின்  கேள்விக்கு,   “ஏறக்குறைய  ஒரு  கிழமை  பிடிக்கும்”  என்றார்.

ஒரு  கிழமை  அல்ல  இரண்டு  கிழமைகள்,  மூன்று  கிழமைகள்  என்றபடி  சுமார்  ஆறு  கிழமைகள்  ஓடிவிட்டப்  போதிலும்   கால்வாயைச்  சுத்தம்  செய்யும்  பணி   முடிந்தபாடில்லை.  வீட்டின்  உரிமையாளருக்குக்  கோபம்,  ஏமாற்றம்.  சொன்னபடி  ஒரு  கிழமைக்குள்  வாய்க்காலைச்  சுத்தம்  செய்யும்  வேலை   தொடர்ந்து  கொண்டிருப்பதே  அவரின்  கோபத்திற்கும்,  ஏமாற்றத்திற்குமானக்  காரணம்.  ஆறு  கிழைமைகளுக்குப்  பிறகு  வீட்டு  உரிமையாளர்,   “இதென்ன  ஒரு   கிழமையில்   வேலை  முடிந்துவிடும் என்றீர்கள்,  இப்போது ஆறு  கிழமைகளுக்கு  மேலாகிவிட்டது   நீங்கள்  சொன்னது  ஒன்று  இப்பொழுது  நடப்பது  ஒன்று”  என்றுரைத்தார்

வாய்க்கால் சுத்தம்  செய்பவர்,  வீட்டு  உரிமையாளரிடம்,  “இந்த  வாய்க்காலைச் சுத்தப்படுத்தி எத்தனை  காலம் இருக்கும்?”  என   வினவினார்.

“நான்  இந்த  வீட்டில்  குடியேறி  அறுபது  ஆண்டுகள்  இருக்கும்.  ஒருபோதும்  வாய்க்காலைச்  சுத்தம்  செய்ய  வேண்டிய  நிர்பந்தம்   ஏற்படவில்லை”  என்றார்.

“அப்படி   வாருங்கள்  வழிக்கு.   இந்த  ஆழமான  வாய்க்காலுக்கு  அடியில்  எவ்வளவு  குப்பைகள்  இருக்கின்றன  தெரியுமா? பலவிதமான  குப்பைகள்,  போதாததற்கு பெருச்சாளிகள் எண்ணிக்கைக்குக்  குறைவில்லை. இந்த வேலை சாமானியமானது அல்ல. வீட்டின்  உரிமையாளரான  நீங்கள்  அடிக்கடி கால்வாயைச்  சுத்தம்  செய்திருந்தால்  இவ்வளவு பிரச்சினை எழுந்திருக்காது. உங்கள்  வீட்டில்  உள்ளவர்களுக்கும்  நோய், பிணி  நேர்ந்திருக்காது. ஒருவகையில்  தங்களின்  கவனக்குறைவும்  இந்த  நிலைக்குக்  காரணம்  என்றால்  கோபப்படக்கூடாது”.

“ஒரு  வாரத்தில்  முடித்துவிடுவதாகச்  சொன்னீர்களே…!”

“உண்மை.  இவ்வளவு  பாழான  நிலையில்  கால்வாயை  வைத்திருப்பீர்கள்  என்று  நான்  எதிர்பார்க்கவில்லையே…!  நீங்களே  கால்வாயில்  குவிந்து  கிடக்கும்  குப்பைகளுக்கு  காரணம்  எனும்போது,  சுத்தம்  செய்ய  வந்த  என்னை  ஏன்  கடிந்து  கொள்கிறீர்கள்…?”  வீட்டின்  உரிமையாளர்  பதில்  ஏதும்  சொல்லாமல்  போய்விட்டார்.

இந்தச்  சம்பவத்தை   நம்  நாட்டு அரசியல்  நிலையோடு  ஒப்பிட்டு பாருங்கள். 9.5.2018இல்  நடந்த  பொதுத்  தேர்தல்  வழி   ஆட்சி  மாற்றத்தை விரும்பினர் மக்கள்  என்பது  உண்மை.  பொதுத்தேர்தலின்போது  அளிக்கப்பட்ட  வாக்குறுதிகள்  ஏராளம்.   ஊழலை  ஒழித்தாக  வேண்டும்  என்பது  முக்கியமான  வாக்குறுதி.  அதை  கவனிக்க  வேண்டும்.  சில  வாக்குறுதிகளை  நிறைவேற்ற  தாமதமாகலாம்  அல்லது மறுபரிசீலனைச்  செய்ய  நேரிடும்.  அதுமட்டுமல்ல  வாக்குறுதிகளை  நிறைவேற்ற  முடியாமலும்  போகலாம்.  இதெற்கெல்லாம்  என்ன  காரணம்?

நம்பிக்கை கூட்டணி  ஆட்சி  பொறுப்பேற்று  உள்ளே  போன  பிறகுதான்  பழைய  ஆட்சி  காலத்தில்  நடந்த  பற்பல  ஊழல்  நடவடிக்கைகள்,  நம்பிக்கை  மோசடிகள்,  அதிகாரத்  துஷ்பிரயோகம்  போன்றவை  கண்டுபிடிக்கப்பட்டன.  முந்தின  ஆட்சி  ஊழல்  மிகுந்த  ஆட்சி   என்றபோதிலும்   ஊழலின்  அளவு  எத்தகையது  என்பதை  கண்டுபிடிக்க  வேண்டும்.  ஊழல்  செய்பவர்கள்  தங்களின்  நடவடிக்கைகளை  மறைத்து  வைப்பதில்  கவனமாக  இருப்பார்கள்.

அவற்றைக் கண்டுபிடிப்பது  எளிதல்ல.  சாதாரண  குற்றச்  செயலைக்  கண்டு  பிடிக்கவே  பலகாலமாகிறது.  பயங்கரமான  ஊழல்கள்  நடந்திருப்பதைக் காணும்போது  ஆழமான  விசாரணை  தேவைப்படும்   அல்லவா?  அதோடு,  ஊழல்  நடக்கிறது  என்பதை தெரிந்தும்  அதை  பொருட்படுத்தாது  ஊழல்வாதிகளுக்கு   ஆளும்  அதிகாரத்தை  தொடர்ந்து  தந்தது  நாட்டுக்  குடிமக்கள்தானே?   அதையும்  கவனத்தில்  கொண்டால்  பொதுமக்களும்  பழைய  ஆட்சியின்  ஊழலை,  அதிகார  துஷ்பிரயோகத்தைக்  கண்டு  கொள்ளாமல்  இருந்ததையும்   நினைவு  கூர்ந்து  பார்க்க  வேண்டிய  கட்டாயம்  ஏற்படுகிறது.

இவை  எல்லாம்  ஒருபுறம்  இருக்க,  புதிய  ஆட்சி  உருப்படியாகச்  செயல்பட  ஒத்துழைப்பை  நல்கினார்களா  ஆளும்  அதிகாரத்தை  இழந்த  முன்னாள்  தலைவர்கள்?  ஜனநாயக  மரபுப்படி  ஒத்துழைத்தார்களா?  கிடையாது. ஒத்துழைக்காவிட்டாலும் போகட்டும் கீழறுப்பு  நடவடிக்கைகளாவது  தவிர்த்திருக்கலாம்  அல்லவா?  புது  ஆட்சியினருக்கு  தொல்லை  தருவதில்தான்  அவர்களின்  கவனம்  மிகுந்திருந்தது.  அதோடு  அரசு  ஊழியர்கள்  ஆட்சியில்  அமர்ந்திருக்கும்  புதிய  கட்சியின்   கொள்கைகளை  அமல்படுத்தத்  தயக்கம்  காட்டினர்.  புது  திட்டங்களை  முடக்குவதில்தான்  கவனமெல்லாம்.  சாமி  வரம்  கொடுத்தாலும்  பூசாரி  வரம்  கொடுக்காது  என்பார்கள்.

அதுபோல,  மக்கள்  மாற்றத்தை  விரும்பிய  போதிலும்  முக்கியப்  பொறுப்பில்  இருக்கும்  அரசு  ஊழியர்கள்  அந்த  மாற்றத்திற்கு  ஏற்காமல், மதிப்பளிக்காமல்  நடந்து  கொண்டதை அன்றைய  பிரதமர்  துன்  டாக்டர்  மகாதீர்  முகம்மது  குறிப்பிட்டுள்ளார்.   அரசு  ஊழியர்களின்  விசுவாசம்  எல்லாம்  ஆட்சி  அதிகாரத்தை  இழந்த  முன்னாள் தலைவர்களிடம்  அடைக்கலம்  புகுந்துவிட்டதை  காணமுடிந்தது.  அரசு  ஊழியர்கள்  மக்களின்  சேவகர்கள்  என்பதை  உணர்ந்தால்தான்  எந்த  ஒரு  மாற்றத்தையும்  கொண்டு  வரமுடியும்.

ஆக,  நம்பிக்கை கூட்டணிக்கு  கொடுக்கப்பட்ட  நெருக்கடிகள்  கொஞ்சம்  நஞ்சம்  அல்ல.  எல்லாவற்றையும்  சமாளிக்க  வேண்டிய  கட்டாயம்  எளிதல்ல.  அரசு  ஊழியர்கள்  நாட்டு  நலனையும்,  மக்கள்  நலனையும்  கருத்தில்  கொண்டு  செயல்பட  வேண்டுமே  அல்லாது  அரசியல்  கட்சி  விசுவாசத்தை  கடமையாகக்  கொண்டிருக்கக்  கூடாது.  அவ்வாறு  நடந்து  கொண்டால்  அதுவும்  ஊழலுக்கு  வழிவிடுமே.

அதிகாரத்தை  இழந்தவர்கள்,  அரசு  ஊழியர்கள்  மேற்கொண்ட  ஜனநாயக  விரோதச்  செயல்கள்  புதிய  ஆளும்  கட்சி  கொடுத்த  வாக்குறுதிகளை  நிறைவேற்றத்  தடையாக  இருந்ததையும்  கவனிக்க  வேண்டும்.

இருபத்திரண்டு மாதங்கள் ஆட்சியில் இருந்த நம்பிக்கை கூட்டணி என்ன செய்தது என்று கேட்பவர்கள் தேசிய முன்னணி செய்த ஊழலை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து நாட்டைக் காப்பாற்றுவதில் செயல்பட்டதை உணர வேண்டும். ஊழல்வாதிகளைச் சட்டத்தின் முன் நிறுத்தப்படாமல் இருந்திருந்தால் நாட்டின் நிலை என்னவாயிருக்கும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.