விடுதலைக்கு பின்னரும் தொடரும் உண்ணாவிரதம் -மயங்கி சரிந்தார் ஜெயக்குமார்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டவர்கள் திருச்சியில் உள்ள இலங்கை தமிழர்களுக்கான முகாமில் தங்களுக்கு வேறொரு அறை ஒதுக்க வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இவர்களில் ஜெயக்குமார் என்பவர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

விடுதலை செய்யப்பட்ட இலங்கை தமிழர்களான முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 4 பேரும் திருச்சியில் உள்ள முகாமில் அடைக்கப்பட்டனர். இந்தநிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் சிறப்பு முகாமில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ஆகியோர் தங்களுக்கு வேறொரு அறை ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

உண்ணாவிரதம்

ஆனால் இதுவரை அறை ஒதுக்கப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை வலியுறுத்தி 2 நாட்களுக்கு முன்பு ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகிய இருவரும் உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினர். இதில் ஜெயக்குமாரின் உடல் சோர்வு ஏற்பட்டு மூச்சு திணறி மயங்கி விழுந்தார். அவர் உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு

திருச்சி அரசு மருத்துவமனையில் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ராபர்ட் பயஸ் சிறப்பு முகாமில் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இதனை அடுத்து மாநகர காவல் துறை துணை ஆணையர் ஸ்ரீதேவி திருச்சி அரசு மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டார்.

இது ஒருபுறம் இருக்க ஏற்கனவே சிறையில் பல்வேறு குற்ற வழக்குகளில் உள்ள இலங்கைத் தமிழர்கள் தங்களை விடுவிக்க கோரி தொடர் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

 

-ibc