ஷாரிக்- பிரேம்ராஜ் என்ற பெயரில் குண்டுவெடிப்பு நடத்த சதி

கர்நாடக போலீசாரால் தேடப்பட்டு வந்த தீவிரவாதி ஷாரிக், தமிழகத்துக்கு தப்பி வந்துள்ளார். இங்கு கோவையில் 3 நாட்கள் தங்கியிருந்தார்.

பின்னர் மதுரை, நாகர்கோவில், கேரளா போன்ற இடங்களுக்கு சென்று விட்டு செப்டம்பர் மாத இறுதியில் தான் மீண்டும் கர்நாடகாவுக்குள் நுழைந்துள்ளார். தன்னை யாரும் அடையாளம் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதில் ஷாரிக் மிகவும் கவனமாக இருந்துள்ளார். அதனால் தனது செல்போன் வாட்ஸ்-அப் டி.பி.யில் ஆதியோகி சிவன் படம் ஒன்றை வைத்து, அதில் பிரேம்ராஜ் என்ற பெயரை பதிவிட்டுள்ளார்.

கோவை மாவட்டம் வெள்ளிங்கிரி மலையடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் தான் இந்த ஆதியோகி சிவன் சிலை உள்ளது. அந்த ஆதியோகி சிலையை தான், ஷாரிக் தனது வாட்ஸ்-அப்பில் வைத்திருந்தார்.

அவரது செல்போனை யார் தொடர்பு கொண்டாலும் தனது மதம் அடையாளம் தெரியாதபடி மாற்று மதத்தைச் சேர்ந்தவன் என்று தெரியும்படி வைத்து உலா வந்திருக்கிறார்.

குக்கர் வெடிகுண்டு வெடித்ததும் மைசூர் சைபர் கிரைம் போலீசார் ஷாரிக்கின் செல்போனை ஆய்வு செய்ததில் வாட்ஸ்-அப்பில் ஆதியோகி சிவன் படமும், பெயர் பிரேம்ராஜ் என்று இருந்ததையும் கண்டுபிடித்துள்ளனர். பெயர் மாற்றம் செய்யும் நோக்கில் தான் அவ்வாறு ஆதியோகி படத்தை வைத்திருந்தாரா அல்லது வேறு எதாவது சதி செயலுக்கு திட்டமிட்டு அவ்வாறு படத்தை வைத்திருந்தாரா என்பது பற்றி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

 

-mm