ம.இ.கா. தோல்விக்கு தகுதியற்ற வேட்பாளர்களும் ஒரு காரணம்

இராகவன் கருப்பையா – கடந்த சனிக்கிழமை நடைபெற்ற நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலில் ம.இ.கா. அடைந்த படு தோல்வி எல்லாருமே எதிர்பார்த்த ஒன்றுதான். இதில் அதிர்ச்சியடையவோ ஆச்சரியப்படவோ ஒன்றுமில்லை.

இந்தியர்களின் ஆதரவு தங்கள் வசம் மறுபடியும் திரும்பியுள்ளது என அக்கட்சியினர் வீணே தம்பட்டம் ஆடித்துத் திரிந்த போதிலும் கடந்த காலங்களை விட இப்போது மேலும் அதிகமானோர் விலகிச் சென்றுள்ளனர் என்பதுவே உண்மை.

மலாய்க்காரர் அல்லாதாருக்கு எதிரான மதவாத, இனவாத அலை இத்தேர்தலில் பெரும் பங்காற்றியுள்ள போதிலும் ம.இ.கா. தலைமைத்துவம் தனது வேட்பாளர் நியமனத்தில் தவறு இழைத்துவிட்டதைப் போல் தெரிகிறது.

கடந்த 14ஆவது பொதுத் தேர்தலைப் போலவே இம்முறையும் அக்கட்சி போட்டியிட்ட 10 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றியடைந்துள்ளது.

நாட்டின் மேற்குக் கறை மாநிலங்களில் நிறையத் தொகுதிகளில் இந்தியர்களின் வாக்குகள்தான் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் என்பது காலங்காலமாகவே கணிக்கப்பட்டு வந்த ஒரு விடயம்தான்.

எனவே ம.இ.கா. தனது அகங்காரத்தையும் அடாவடித்தனத்தையும் கொஞ்சம் குறைத்து கொண்டு அடிதட்டு மக்களுடன் இணக்கப் போக்கை கடைபிடித்திருக்க வேண்டும் என்பது மட்டுமின்றி, தகுதியான வேட்பாளர்களைத் தேர்வு செய்திருந்தால் சற்று அதிகமானத் தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க முடியும் என்பதே பொதுவானக் கருத்தாகும்.

ஆண்டாண்டு காலமாக கட்சிக்காக விசுவாசத்தோடு உழைத்தவர்களும், சேவையாளர்களும், சிறந்த கல்வியறிவுப் பெற்றவர்களும் இருக்கையில் ‘வான்குடை’ வேட்பாளர்களையும் ஏற்கெனவே வாக்காளர்களால் ஒதுக்கப்பட்டவர்களையும் களமிறக்கியது அக்கட்சி செய்த பெரியத் தவறாகும்.

குறிப்பாக தலைநகர் பத்து தொகுதியில் போட்டியிட்ட கோகிலன் பிள்ளை ம.இ.கா.வுக்குப் புதியவர். சுமார் 28 ஆண்டுகளாக கெராக்கான் கட்சியின் உறுப்பினராக இருந்த அவர் அக்கட்சியின் செணட்டராகவும் நாட்டின் வெளியுறவுத்துறை துணையமைச்சராகவும் இருந்திருக்கிறார்.

எனினும், ம.இ.கா.வின் நியமன உதவித் தலைவரான அவர் கட்சியைப் பொறுத்த வரையில் ‘வான்குடை’ வேட்பாளர் என்றுதான் சொல்ல வேண்டும். கடந்த 2013ஆம் ஆண்டில் நடைபெற்ற 13ஆவது பொதுத் தேர்தலில் கெராக்கான் சார்பில் பூச்சோங் சொகுதியில் போட்டியிட்டு தோல்வி கண்டவர்.

அதே போல ஜொகூரின் செகாமாட் தொகுதியில் போட்டியிட்ட ராமசாமியும் ஒரு ‘வான்குடை’ வேட்பாளர்தான். அரசியல் வட்டாரத்தில் நிறைய பேருக்கு அவரை யாரென்றே தெரியாது. ஒரு செல்வந்தரான அந்தத் தொழிலதிபர் எக்காலக் கட்டத்திலும் களமிறங்கி அடிதட்டு மக்களுக்கு உதவியதாக சரித்திரமே கிடையாது.

கல்வித்துறையின் முன்னாள் துணையமைச்சர் கமலநாதனும் ம.இ.க.வின் மகளிர் தலைவி மோகனாவும் 14ஆவது பொதுத் தேர்தலில் படுதோல்வியடைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டிக்சன் தொகுதியில் போட்டியிட்ட கமலநாதன், அமைச்சில் பணியாற்றிய காலத்தில் மேல்மட்டத்தில் உள்ள தனது நட்புறவுகளுக்கு மட்டுமே உரமிட்டார் என்றும் எளிய மக்களைப் புறக்கணித்தார் எனவும் அபோதே புகார்கள் இருந்தன.

கடந்த 2015ஆம் ஆண்டில் தலைநகர் புக்கிட் பிந்தாங் பகுதியில்  இனக்கலவரத்தைத் தூண்டும் வகையில் அராஜகம் செய்ய முற்பட்ட அம்னோவின் அடாவடிப் பேர்வழியான ஜமால் யூனோஸ் கும்பலுக்கு சிவப்பு சட்டைகளை வாங்கிக் கொடுத்து தனது பெயரைக் கெடுத்துக் கொண்ட அவர், தமிழ்ப் பள்ளிகளையும் கூட சரியாகக் கவனிக்கவில்லை எனும் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருந்தார்.

இப்படிப்பட்ட ஒருவர் மீண்டும் போட்டியிடுவதற்கு ஏன் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எனும அதிருப்தி ம.இ.கா. வட்டாரத்திலேயே நிலவியது குறிப்பிடத்தக்கது.

அதே போல கோல லங்ஙாட் தொகுதியில் போட்டியிட்ட மோகனாவுக்கு கட்சியின் மகளிர் பகுதி தலைவி எனும் நிலைப்பாட்டைத் தவிர வேறு எந்த வகையில் தகுதி உள்ளது எனும் கேள்வியும் எழவேச் செய்கிறது.

கெடாவின் பாடாங் செராய் தொகுதியில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் தேர்தலில் கட்சியின் முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவர் சிவராஜ் போட்டியிடுகிறார்.

கடந்த பொதுத் தேர்தலில் கேமரன் மலையில் அவர் வெற்றிபெற்ற போதிலும் தேர்தல் குற்றங்களுக்காக அவ்வெற்றியை நீதிமன்றம் பிறகு ரத்து செய்தது. அது மட்டுமின்றி கட்சியின் உதவித் தலைவர் தேர்தலிலும் அவர் தோல்வியைத் தழுவினார்.

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் அம்னோ படுதோல்வியடைந்ததைத் தொடர்ந்து அதன் தலைவர் அஹமட் ஸாஹிட் பதவி விலக வேண்டும் என அக்கட்சியைச் சேர்ந்த சிலர்  குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளது தெரிந்ததே.

ஆனால் அவர்களோடு சேர்ந்துக் கொண்டு, ஸாஹிட் பதவி துறக்க வேண்டும் என சிவராஜும் கோஷமிடுவது சற்று அதிகப் பிரசங்கித்தனம் என்றால் அது மிகையில்லை. ‘நானும் பேசிவிட்டேன்’ என்பதற்காக கூட்டத்தோடு கோவிந்தா போடக்கூடாது. துணிச்சல் இருந்தால் தனதுக் கட்சித் தலைவர் விக்னேஸ்வரனைத்தான் அவர் பதவி விலகச் சொல்ல வேண்டும். ம.இ.கா. மட்டும் என்ன, சாதனையா புரிந்துவிட்டது?

இத்தகையச் சூழலில் பாடாங் செராய் தேர்தலில் ஸாஹிட்டின் ஆதரவாளர்கள் எப்படி சிவராஜிற்குப் பிரச்சாரம் செய்வார்கள்? சொந்தமாகவே ‘தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொண்ட கதை’தான் இது!

உதவித் தலைவர் மோகன், துணைத் தலைவர் சரவணனைப் போல கட்சியின் அடிமட்டத்தில் இருந்து வளர்ந்தவர் என்ற போதிலும் ஒவ்வொரு முறையும் பொதுத் தேர்தல்களில் தோல்விகளைத்தான் சந்தித்து வருகிறார்.

ஆக ஆர்வக் கோளாறில் அவசரப்பட்டு வேட்பாளர்களைத் தேர்வு செய்வதை விடுத்து கட்சியின் தலைமைத்துவம் கொஞ்சம் கவனமாக சிந்தித்து செயல்பட்டிருந்தால் குறைந்த பட்சம் இன்னும் ஓரிருத் தொகுதிகளையாவது அவர்கள் வென்றிருக்கக் கூடும்.