மாநில சபாநாயகராக காமாச்சிக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்

இராகவன் கருப்பையா – பஹாங் மாநிலத்தின் சபாய் தொகுதியில் 2 தவணைகள் சட்மன்ற உறுப்பினராக இருந்த காமாச்சி துரைராஜு எதிர்வரும் கூட்டத் தொடரில் சபாநாயகராக நியமிக்கப்பட வேண்டும்.

இரவு பகல் பாராமல் எந்நேரத்திலும் களமிறங்கி உதவி தேவைப் படுவோருக்கு கரம் கொடுக்கும் சேவைத் திறனைக் கொண்ட அவருக்கு இப்படிப்பட்ட ஒரு நியமனம் சிறப்பானதொரு அங்கீகாரமாக விளங்கும் என்பதில் ஐயமில்லை.

தற்போதைய சூழலில் இப்படியொரு அடித்தளம் இருந்தால்தான் அவருடைய நற்சேவைகள் தங்கு கடையின்றித் தொடருவதற்கு ஏதுவாக இருக்கும்.

ஏறத்தாழ 23 ஆண்டுகளாக   அடிதட்டு மக்களின் உற்றத் தோழியாக விளங்கி வரும் காமாச்சி பஹாங் மாநில ஜ.செ.க.வின் உதவித் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமது பள்ளிப் பருவத்திலேயே சமூக சேவைகளில் ஈடுபாடு காட்டத் தொடங்கிய அவர் முதியவர்களையும் உதவி தேவைப்படுவோரையும் மருத்துவமனை மற்றும் அரசாங்க அலுவலகங்கள் போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்றதன் வழி இயல்பாகவே சேவைத் திறனை வளர்த்துக் கொண்டார்.

நாட்டின் வரலாற்றிலேயே பதவிப்பிரமாணம் செய்யும் போது திருக்குறளை ஒப்பிக்கும் ஒரே அரசியல்வாதி என்ற பெருமையும் அவரையேச் சாரும். தமது இரு தவணைகளிலும் சட்டமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட போது பொருத்தமானக் குரலை மிகத் துணிச்சலாக ஒப்பித்து தேசிய நிலையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியவர் காமாச்சி.

தமிழ், ஆங்கிலம், மலாய், ஆகிய 3 மொழிகளிலும் புலமைப் பெற்றுள்ள அவர் மாநில சட்டமன்றத்தில் எல்லாருடைய நன்மதிப்பையும் பெற்றுள்ளார்.

எப்போதுமே ‘தமிழச்சி காமாச்சி’ என தம்மை அறிமுகப்படுத்திக் கொள்ளும் அவர், சிறந்த சட்டமன்ற உறுப்பினர் எனும் விருதையும் பெற்றுள்ளார்.

கடந்த 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற 14ஆவது பொதுத் தேர்தலுக்கு முன் நடந்த இறுதி சட்டமன்றக் கூட்டத்தில் தமது தொகுதி மக்களின் பிரச்சினைகளை மிகச் சிறப்பான வகையில் தொகுத்து எடுத்துரைத்தமைக்காக அப்போதைய மந்திரி பெசார் அட்னான் அவ்விருதை காமாச்சிக்கு வழங்கி சிறப்பு செய்தார்.

தமிழ்நாட்டில் உலக முத்தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்வில் ‘வேலு நாச்சியார்’ விருது வழங்கி கொரவிக்கப்பட்ட காமாச்சி அவ்விருதைப் பெற்ற முதல் மலேசியப் பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்திலோ மாநில சட்டமன்றத்திற்கோ மக்கள் பிரதிநிதிதான் சபாநாயகராக நியமிக்கப்பட வேண்டும் எனும் கட்டாயம் இல்லை. அப்பொறுப்புக்கு பொருத்தமாக உள்ள யாரும் நியமிக்கப்படலாம்.

கடந்த 2018ஆம் ஆண்டில் பக்காத்தான் ஆட்சியமைத்த போது ஓய்வுபெற்ற நீதிபதியான முஹமட் அரிஃப் நாடாளுமன்ற சபாநாயகராக நியமிக்கப்பட்டார்.

பிறகு 2020ஆம் ஆண்டில் பெரிக்காத்தான் அரசாங்கம் ஒரு சமுக ஆர்வலரான வழக்கறிஞர் அஸஹார் ஹருனை நியமனம் செய்தது.

நாட்டின் 13ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு அமையப் பெற்ற பக்காத்தானின் பேராக் மாநில அரசாங்கம் கவிழ்ந்ததைத் தொடர்ந்து மாநில சட்டமன்ற சபாநாயகராக ம.இ.கா. சார்பில் தங்கேஸ்வரி நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவ்வகையில் பஹாங் மாநிலத்தில் பக்காத்தான் – பாரிசான் கூட்டணி ஆட்சியமைக்கவிருக்கும் இத்தருணத்தில் அதன் சட்டமன்ற சபாநாயகராக நியமனம் பெறுவதற்கு காமாச்சி மிகவும் பொருத்தமானவர் என்பதில் கடுகளவும் ஐயமில்லை.

இம்முறை இந்தியர்களின் பிரதிநிதித்துவம் பல நிலைகளிலும் குறைந்துள்ளதால் குறைந்த பட்சம் சபாநாயகர் பதவியையாவது நமக்கு ஒதுக்குவது குறித்து இரு கூட்டணிகளின் மாநிலத் தலைவர்களும் பரிசீலிக்க வேண்டும்.

சபாநாயகர் பதவி இல்லாவிட்டாலும் குறைந்த பட்சம் துணை சபாநாயகர் பதவியையாவது காமாச்சிக்கு வழங்குவதுதான் அவருடைய சேவைகளுக்கு அங்கீகாரமாக அமையும்.