மத-இனவாத அரசியலையும் மீறி பிறந்துள்ளது பொற்காலம்

இராகவன் கருப்பையா – தமது 40 ஆண்டுகால அரசியல் பயணத்தில் 2 முறை அநியாயமாக வஞ்சிக்கப்படு சிறை சென்ற போராட்டவாதியான அன்வார் இப்ராஹிம் மலேசியாவின் 10ஆவது பிரதமராக அரியணை அமர்ந்தது நாட்டின் பொற்காலத்திற்கு ஒரு திறவுகோலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாஸ் கட்சி ஆட்சி அமைத்து அட்டகாசம் புரிவதைத் தடுக்கும் பொருட்டு பாரிசானை அரவணைத்துள்ளார் அன்வார்.

அன்வாரின் கரடு முரடான அரசியல் பயணத்தை சற்றுத் திருப்பிப் பார்ப்போமேயானால், ‘வைதேகி காத்திருந்தால்’ திரையில் இடம்பெற்ற ‘காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி, பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி’, எனும் பாடல்தான் நம் நினைவுக்கு வருகிறது.

கடந்த 1982ஆம் ஆண்டில் தீவிர அரசியலில் நுழைந்த அன்வாரை விட வேறொரு அரசியல் போராட்டவாதி இந்நாட்டில் பிறந்திருக்க வாய்ப்பில்லை.

தமது பல்கலைக் கழகக் காலத்திலேயே ஒரு முன்னணி மாணவர் தலைவராக வலம் வந்த அவருடைய போராட்ட உணர்வு அப்போதே அதிக அளவில் துளிர்விடத் தொடங்கியது.

கடந்த 1968ஆம் ஆண்டிலிருந்து 1971ஆம் ஆண்டு வரையில் மலாயா பல்கலைக் கழகத்தில் மாணவராக இருந்த சமயத்தில் மலாய் மொழிக் கழகத்திற்கும் தேசிய முஸ்லிம் மாணவர்கள் சங்கத்திற்கும் தலைவராக பொறுப்பேற்றிருந்தார் அன்வார்.

அந்தக் காலக் கட்டத்தில் கெடா மாநிலத்தின் ஒரு சில பகுதிகளில் பல குடும்பங்கள் பட்டினியால் வாடிய சம்பவங்களை முன்னிருத்தி அரசாங்கத்திற்கு எதிராக நாடு தழுவிய நிலையில் ஏற்பாடு செய்யப்பட்ட மாணவர் ஆர்ப்பாட்டங்களுக்கு அவர் தலைமையேற்றார். அப்போது கல்வியமைச்சராக இருந்த மகாதீர், ஆர்ப்பாட்டங்களை முறியடிக்கும் பொட்டு அன்வாரை சிறையில் அடைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் சுமார் 11 வருஷங்கள் கழித்து 1982ஆம் ஆண்டில் பிரதமராக இருந்த மகாதீரே அவரை அம்னோவிற்குள் அழைத்து வந்தது வரலாறு.

‘அபிம்’ எனும் மலேசிய முஸ்லிம் இளைஞர் இயக்கத்தின் துடிப்பு மிக்கத் தலைவராக இருந்த அன்வாரை தனது வசம் இழுப்பதற்கு பாஸ் கட்சி வலை வீசிய சமயத்தில் மகாதீர் முந்திக் கொண்டார்.

ஆதே ஆண்டில் நடைபெற்ற நாட்டின் 6ஆவது பொதுத் தேர்தலில் அவருக்கு பினேங்கின் பெர்மாத்தாங் பாவ் தொகுதியை வழங்கி வெற்றிபெறச் செய்து, மின்னல் வேகத்தில் அவரை அமைச்சராகவும் நியமித்தார்.

ஏறத்தாழ 10 ஆண்டுகளிலேயே கிடுகிடுவென துணைப் பிரதமர் பதவி வரையில் உயர்ந்த அன்வாரின் வளர்ச்சியை அச்சமயத்தில் மகாதீராலேயே கட்டுப்படுத்த இயலவில்லை.

கடந்த 1998ஆம் ஆண்டில் அவர் மீது ஊழல் மற்றும் ஓரினப் புணர்சிக் குற்றங்களைச் சுமத்தி அவருடைய அரசியல் வாழ்க்கையை ஒரு முடிவுக்குக் கொண்டுவரும் திட்டத்தில் அவரை சிறையில் அடைத்தார் மகாதீர்.

தடுப்புக் காவலில் இருந்த போது அப்போதையக் காவல்படைத் தலைவராக இருந்த ரஹிம் நோரால் கடுமையாகத் தாக்கப்பட்ட அன்வார், ஒரு காது, கண்கள் உள்பட முகத்தில் பலத்தக் காயங்களுடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

ஊடகவியலாளர்களுக்குப் பிறகு விளக்கமளித்த மகாதீர், சொந்தமாகவே அன்வார் தாக்கிக் கொண்டார் என அறிவிலித்தனமாகக் கூறி கேலிக்கூத்தானது தற்போதையத் தலைமுறையினருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

சமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலையான அன்வார் சற்றும் மனம் தளராமல் புதிய உத்வேகத்துடன் தமது அரசியல் பயணத்தை மீண்டும் தொடர்ந்தார்.

2013ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற 13ஆவது பொதுத் தேர்தலில் அன்வார் தலைமையிலான அப்போதைய பக்காத்தான் ராக்யாட் கூட்டணி 89 தொகுதிகளில் வெற்றி பெற்று 2ஆவது இடத்தைப் பிடித்தது.

எனினும் ஒட்டு மொத்த வாக்காளர்களில் சுமார் 51 விழுக்காட்டினர் பக்காத்தானுக்கு வாக்களித்திருந்ததால் அன்வார் தலைமையில் ஆட்சி அமைவதற்கு கிழக்கு மலேசிய பிரதிநிதிகள் தயாராய் இருந்தனர். செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி ஆட்சி மாறும் என அன்வாரும் நம்பிக்கையோடு வெளிப்படையாகவே அறிவித்துவிட்டார்.

ஆனால் அப்போதும் கூட மகாதீர்தான் சகுனியாக இருந்து அம்முயற்சியைத் தடுத்து நிறுத்தினார். கிழக்கு மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அத்தனைப் பேருக்கும் தனித்தனியாக விஷமத்தனமாகக் கடிதங்களை அனுப்பி அவர்களுடையத் திட்டத்தை முறியடித்தார்.

அன்வாரின் சோதனைகள் அதோடு நின்றுவிடவில்லை. சதிகாரக் கூட்டம் அவரை நிம்மதியாக விட்டபாடில்லை என்றுதான் சொல்ல வேண்டும். கடந்த 2014ஆம் ஆண்டில் பிரதமராகவும் துணைப் பிரதமராகவும் இருந்த நஜிப் – முஹிடின் கூட்டணி அவர் மீது மற்றொரு ஓரினப் புணர்ச்சி வழக்கைத் திணித்து மீண்டும் சிறையிலடைத்தது.

நான்கு ஆண்டுகள் கழித்து பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சியமைத்த போது விடுதலையான அன்வார், பிரதமர் பதவியை நோக்கி பீடு நடை போட்டத் தருணத்தில் மகாதீர் எவ்வாறு அவரை ஏமாற்றித் தடுத்து நிறுத்தினார் என்பது யாவரும் அறிந்த ஒன்றே.

நாட்டின் 8ஆவது பிரதமராவதற்கு அவர் தயாராக இருந்த சமயத்தில் பட்டியலில் இடம்பெறாத முஹிடின் கொல்லைப்புறமாக நுழைந்து அவ்விருக்கையை அவரிடமிருந்து அபகரிக்க வழி வகுத்த மகாதீரின் சதிநாச வேலையால் அன்வாருக்கு ‘கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல்’ போனது.

கடந்த ஆண்டு பிற்பகுதியில் திறமையற்ற முஹிடினின் ஆட்சி கவிழ்ந்த போது அம்னோவின் ஆதரவோடு 9ஆவது பிரதமராவதற்கு அன்வார் தயாரானார். ஆனால் கடைசி நேரத்தில் அம்னோ காலை வாரியதால் அந்த முயற்சியும் தோல்வியில் முடிய, கொஞ்சமும் தகுதியில்லாத சப்ரி எப்படி உள்ளே புகுந்தார் என்பது நாம் அறிந்த வரலாறு.

தமது வாழ்நாளில் சுற்றியுள்ளவர்களால் இத்தனை முறை வஞ்சிக்கப்பட்டும், முன்னாள் தென் ஆஃப்ரிக்க அதிபர் மண்டேலாவைப் போல ‘நான் யாரையும் பழி வாங்கப் போவதில்லை’ என்று அவர் செய்த அறிவிப்பு அவருடைய ஒப்பற்ற அரசியல் முதிர்ச்சியையே வெளிச்சம் போட்டுக் காட்டியது.

சில தினங்களுக்கு முன் நடந்தேறிய 15ஆவது பொதுத் தேர்தலில் அவர் அமோக வெற்றி பெற்று பிரதமர் நாற்காலியில் அமருவார் என்று எல்லாரும் கணித்திருந்த வேளையில் மதவாதம் கலந்த இனவாத அரசியல் அதற்கும் குறுக்கீடாகப் பாய்ந்தது.

அதையும் தாண்டி ‘சேற்றில் மலர்ந்த செந்தாமறை’யைப் போல வெற்றிகரமாக மேலெழும்பி தற்போது அரியணையில் அமர்ந்துள்ள இந்த போராட்ட வீரர், நாட்டு மக்கள் நீண்ட நாள்களாக ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கும் நல்லாட்சிக்கு வழிக்கொணருவார் என்று நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

கடந்த 1980ஆம் ஆண்டுகள் தொடங்கி பிரதமர் பதவியில் அமரத் திட்டமிட்டுருந்த முன்னாள் துணைப் பிரதமர்களான மூசா ஹீத்தாம், கஃபார் பாபா மற்றும் ரஸாலி ஹம்சா போன்றோர் தங்களுடையக் கனவுகள் திறைவேறாத பட்சத்தில் ஒரு புறம் ஒதுங்கிய வேளையில் ‘விடாக் கண்டனாக’த் தமது இலட்சியத்தை நிறைவேற்றிய அன்வாரின் அரசியல் பயணம் நமக்கெல்லாம் ஒரு உத்வேகத்தைக் கொடுப்பதோடு தன்முனைப்பாகவும் அமையும் என்பதில் கடுகளவும் ஜயமில்லை.