புதிய டோல் கட்டணம் தொடக்கம்: தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது

இராகவன் கருப்பையா – தலைநகருக்கு வெளியே ஷா அலாமையும் டமன்சாராவையும் இணைக்கும் ‘டாஷ்’ எனப்படும் புதிய விரைவு நெடுஞ்சாலையில் டிசம்பர் முதல் தேதியில் இருந்து டோல் கட்டணம் வசூலிக்கப்படும் எனும் அறிவிப்பு மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஒன்றரை மாதங்களாக வாகனமோட்டிகள் இந்த நெடுஞ்சாலையில் இலவசமாகப் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். எனினும் டிசம்பர் மாதத்தில் இருந்து டோல் கட்டணம் வசூலிக்கப்படும் என அப்போதே அறிவிக்கப்பட்டது உண்மைதான்.
ஆனால் 15ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு பக்காத்தான் கூட்டணி ஆட்சியமைத்தால் டோல் கட்டணங்கள் படிப்படியாக நிறுத்தப்படும் என ஜ.செ.க. தலைவர் லிம் குவான் எங் செய்த அறிவிப்பை இப்போது நினைவுக் கூற வேண்டியுள்ளது.
‘ப்லஸ்’ எனப்படும் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் கட்டணங்கள் மட்டும்தான் நிறுத்தப்படும் என்று அவர் சொன்னாரா அல்லது நாட்டில் உள்ள எல்லா டோல் கட்டணச் சாவடிகளும் முடக்கப்படும் என்றாரா எனத் தெளிவாகத் தெரியவில்லை.
‘டாஷ்’ நெடுஞ்சாலை டோல் கட்டண வசூலிப்பை உடனே நிறுத்தினால் சட்ட சிக்கல்கள் எழக்கூடும். இருந்த போதிலும் புதிய அரசாங்கம் இன்னமும் அமையப் பெறாத சூழலில் இந்த டோல் வசூலிப்பு நடவடிக்கைகளை குறைந்த பட்சம் ஒத்தி வைத்திருக்கலாம் என்றே எண்ணத் தோன்றுகிறது.
கடந்த 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற 14ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்பும் இதே போன்ற ஒரு அறிவிப்பு செய்யப்பட்டது. ஆனால் தேர்தலுக்குப் பிறகு வாகனமோட்டிகளுக்கு 18 விழுக்காட்டுக் கழிவு மட்டுமே கிடைத்தது. டோல் கட்டணங்கள் முற்றாக அகற்றப்படவில்லை.
‘தேர்தல் வாக்குறுதிகள் பாறையில் செதுக்கப்படவில்லை, அவை ஒன்றும் பைபல் இல்லை, நாங்கள் ஜெயிப்போம் என்று எதிர்பார்க்கவில்லை, அதனால்தான் அப்படி அறிவித்தோம்’, என்றெல்லாம் அப்போதையப் பிரதமர் மகாதீர் இருமாப்போடு  உளறித் தள்ளியதை மக்கள் இன்னும் மறந்திருக்க வாய்ப்பில்லை.
எனவே அத்தகையச் சூழல் மீண்டும் ஏற்படாமல் இருப்பதை பக்காத்தான் தலைவர்கள் உறுதி செய்வது அவசியமாகும்.
‘நாங்கள் தனியாக ஆட்சியமைக்கவில்லை, பாரிசானும் உடனிருக்கிறது’, போன்ற சாக்குப் போக்கிற்கு எல்லாம் இடமளிக்காமல் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் புதிய அரசாங்கம் உடனடி கவனம் செலுத்த வேண்டும்.
14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு குறுகிய காலம் மட்டுமே பக்காத்தான் ஆட்சி புரிந்தது என்ற போதிலும் வாக்குறுதிகளில் சற்று அதிகமானவற்றை நிறைவேற்றியிருக்கலாம் என்பதே மக்களின் ஆதங்கமாகும்.
அப்போதைய பக்காத்தான் அரசாங்கம் மெத்தனப் போக்கோடு இருந்துவிட்டது என நிறையப் பேர் இன்று வரையிலும் கூட கருதுகின்றனர்.
தற்போதையச் சூழலில் முதன்மை வகிக்கும் மக்களின் அன்றாடச் செலவினச் சுமைகளில் டோல் கட்டணமும் பெட்ரோல் விலையும் அடங்கும்.
எனவே இந்த டோல் கட்டண விவகாரம் மட்டுமின்றி மக்களை நேரடியாகப் பாதிக்கும் இதர விடயங்களையும் புதிய அரசாங்கம் உடனடியாகத் தெளிவுப்படுத்த வேண்டும்.
எந்நேரத்திலும் அமைச்சரவை அறிவிக்கப்படும் எனும் நிலையில் வெகுசன மக்களின் எதிர்பார்ப்பு இதுதான்.