ஹாடி அவாங், முகைதீன் யாசின் கூட்டணியின் தாக்கத்தை நாடு தாங்காது

  கி.சீலதாஸ் – நாடாளுமன்றத்தைக் கலைத்து பதினைந்தாம் பொதுத் தேர்தல் நடத்துவதற்கு ஏதுவாக மாமன்னருக்கு ஆலோசனை நல்க வேண்டுமெனத் தேசிய முன்னணியை வழிநடத்தும் அம்னோ வற்புறுத்தியது. அன்றையப் பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி கூட அம்னோவுக்குச் சாதகமான சூழ்நிலை ஏற்பட்டுவிட்டால் பொதுத் தேர்தல் நடத்துவதற்குத் தயார் என்று சொன்னார்.

அதுமட்டுமல்ல, பொதுத் தேர்தலுக்கு அம்னோ தயாராகிவிட்டது எனத் உறுதியானதும் அதை நடத்தத் தயார் எனவும் இஸ்மாயில் சப்ரி குறிப்பிட்டிருந்தார். அதோடு நின்றாரா இஸ்மாயில் சப்ரி? இல்லை!

தம் கட்சி வெற்றி பெறும் என்ற போதை தலைக்கு ஏறிவிட்ட நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்துவதற்குத் துணையாக இரு தோட்டாக்களைத் தந்ததாகவும் குறிப்பிட்டார். அவை எப்படிப்பட்டவை? டான் ஶ்ரீ தோமி தாமஸின் நூலில் குறிப்பிட்ட சில கருத்துக்கள் விசாரணைக்கு உகந்தவை. எனவே, இரகசியமாக விசாரித்துத் தயாரிக்கப்பட்டு பொது மக்களின் பார்வையிலிருந்து மறைத்து வைக்கப்பட்டிருக்கும் அறிக்கையை வெளிப்படுத்துவதாகும்.

இதன்வழி தேர்தல் பிரச்சாரத்தின்போது அதை ஒரு பிரச்சினையாகப் பயன்படுத்த உதவும் என்ற நப்பாசையின் வலிமை மிகுந்து இருந்ததைக் கண்டோம்.

பதினைந்தாம் பொதுத் தேர்தல் உடனடியாக நடத்தினால் வெற்றி தேசிய முன்னணிக்கே என்ற நம்பிக்கை மிகுந்து இருந்தது. இதற்குக் காரணம் நடந்து முடிந்த இரண்டு மாநிலத் தேர்தல்களில் (மலாக்கா, ஜொகூர்) தேசிய முன்னணி பெற்ற அமோக வெற்றி நாடாளுமன்றப் பொதுத் தேர்தலிலும் பிரதிபலிக்கும் என்று நம்பினர் தேசிய முன்னணி தலைவர்களும், அன்றையப் பிரதமர் இஸ்மாயில் சப்ரியும்.

பதினைந்தாம் பொதுத் தேர்தலைப் பற்றி உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாட்டு தேர்தல் சோதிடர்கள், அரசியல் விற்பனர்கள் யாவரும் தேசிய முன்னணி வெற்றி பெற்று நடுவண் ஆட்சியை அமைக்கும் என்று ஒரு சேர சொன்னார்கள்.

இந்த நாட்டு தேர்தல் முறையில் பழுது ஏதாகிலும் அல்லது மோசடி ஏதாவது நடக்கிறதா என்பதை அறிய வந்த வெளிநாட்டவர்களும் உண்டு. அவர்களும் தேசிய முன்னணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார்கள்.

கடந்த அக்டோபர் 23ஆம் தேதி, மலேசியகினி அகப்பக்கத்தில் பதினைந்தாம் பொதுத் தேர்தல் தேசிய முன்னணிக்குக் கடுமையான பரீட்சை என்ற தலைப்பில் என் கருத்தை வெளியிட்டிருந்தேன்.

இரண்டு மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களில் தேசிய முன்னணி கண்ட வெற்றி பதினைந்தாம் பொதுத் தேர்தலில் காண முடியும் என்கின்ற அதன் நம்பிக்கை ஈடேறாது என்று கூறியிருந்தேன். தேசிய முன்னணியின் தோல்விக்கான காரணத்தையும் குறிப்பிட்டிருந்தேன்.

19.11.2022 மக்களின் தீர்ப்பானது தேசிய முன்னணியின் கணக்கு தவறானது என வெளிப்பட்டது. பெரும்பான்மையான மாநிலங்களில் குறிப்பாக கிழக்கு மலேசிய மாநிலங்களான பாஹாங், கெடா, திரங்கானு, கிளந்தான், பெர்லீஸ் ஆகியவற்றில் தான் ஶ்ரீ முகைதீன் யாசின் கண்ட தேசிய கூட்டணி (பெரிகத்தான் நேஷனல்) வியப்பளிக்கும் வகையில் வெற்றி கண்டுள்ளது.

இந்தக் கூட்டணி இஸ்லாமியக் கட்சியான டான் ஶ்ரீ ஹாடி அவாங் தலைமையில் இயங்கும் பாஸ் கட்சியை உள்ளடக்கியதாகும். ஆகமொத்தத்தில், பதினைந்தாம் பொதுத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டுமெனக் கடுமையாக வற்புறுத்திய தேசிய முன்னணியும், அதற்கு ஒப்புதல் நல்கிய முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரியும் போட்டக் கணக்கு தவறானது என்பதைத் தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்தின. எதிரியை வீழ்த்த தயாரிக்கப்பட்ட கண்ணியில் தானே விழுந்த கதையாயிற்று.

தேசிய முன்னணியின் படுமோசமான தோல்வியானது இதுவரை அதன் வரலாற்றில் காணாத ஒன்று எனலாம். நூற்றிருபது தொகுதிகளில் போட்டியிட்ட அம்னோ (தேசிய முன்னணி) முப்பது தொகுதிகளைக் கைப்பற்றி நான்காம் இடத்தில் நிற்கிறது. இதில் விசித்திரம் மலேசியர்களைத் துயரில் ஆழ்த்தும் முடிவுகள் என்னவெனில் பாஸ் கட்சி நாற்பத்தொன்பது தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. டான் ஶ்ரீ முகைதீன் யாசின் தலைமையில் இயங்கும் பெர்சத்து இருபத்து நான்கு தொகுதிகளில் வெற்றி கண்டுள்ளது.

பாஸ் கட்சியும், பெர்சத்துவும் தீவிர இன, சமய வேறுபாடுகளைப் போற்றி அரசியல் நடத்துபவை. பாஸ் கட்சி தமது இன, சமய கொள்கையை ஒருபோதும் விட்டுக்கொடுக்காது, அதே சமயத்தில் இனவாத அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் அது தனது கவனத்தைச் செலுத்துகிறது.

இந்தப் போக்கு பல்லின மக்கள் வாழும் மலேசியாவுக்கு உகந்தது அல்ல. முகைதீன் யாசின் தமது அரசியல் லாபத்திற்காக இல்லாததும் பொல்லாததையும் அவிழ்த்து விடுவதில் வல்லவர் என்பது தெளிவாகிவிட்டது. இவ்விரு கட்சிகளும் இணைந்து எழுபத்திரண்டு தொகுதிகளைக் கைபற்றியது மட்டுமல்ல பெர்லீஸ், கிளந்தான், திரங்கானு, கெடா ஆகிய மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி கண்டிருப்பது மலேசியாவின் எதிர்காலத்திற்கான பயணம் எந்தத் திசையை நோக்கிப் போகிறது என்பதைச் சிந்திக்க வேண்டியுள்ளது.

ஒரே இனம், ஒரே சமயம் என்கின்ற தேசியக் கொள்கை ஃபாசிஸம் தத்துவத்திற்கு இடமளிக்கும் இன, சமய ஒற்றுமை, நல்லிணக்கம், புரிந்துணர்வு, பரஸ்பர நம்பிக்கை யாவையும் அழித்துவிடும்.

மலேசியாவில் மலேசியர்கள் தங்களின் சொந்த அடையாளங்களை இழந்து வாழ வேண்டுமா என்ற கேள்வி எழுந்து காலங்கள் பல கடந்துவிட்டன. ஆனால், அதைச் சரியாகப் புரிந்து கொள்ளாதவர்களின் கையில்தான் அரசியல் இருந்தது. அதிகாரம் சிக்கி மக்களைப் பரிதாப நிலைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதை எளிதில் மறக்க முடியாது. பதினைந்தாம் பொதுத் தேர்தலில் ஒரு புது நம்பிக்கையை ஏற்படுத்திய போதிலும் பெர்சத்து, பாஸ் இணைப்பு நாட்டு ஒற்றுமைக்கு உலை வைக்கும் தரத்தைக் கொண்டிருக்கிறது.

இன, சமய அரசியல் மலேசியாவுக்கு ஒருபோதும் பொருந்தாது. இதை உணர்ந்து செயல்பட வேண்டிய காலம் வந்துவிட்டது. ஹாடி அவாங், முகைதீன் யாசின் கூட்டணி இந்நாட்டைப் பாழ்நிலைக்குக் கொண்டு செல்லும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

அவர்களுக்கு இப்பொழுது கிடைத்திருக்கும் ஆதரவு தேசிய முன்னணி மீதான சினத்தை வெளிப்படுத்துகிறது எனலாம். இதில் திருத்தத்தைக் காண வேண்டிய பொறுப்பு நாடாளுமன்றத்தில் தற்போது பெரும்பான்மை கொண்டிருக்கும் நம்பிக்கை கூட்டணிக்கு உண்டு.

அடுத்து என்ன செய்ய வேண்டும்? தீவிரவாத அரசியலுக்கு வழிவிடாமல் பார்த்துக் கொள்ள புது இயக்கம்; புது அணுகுமுறை தேவை. ஆரோக்கியமான அரசியல், ஊழலற்ற அரசியல், இன சமயப் புரிந்துணர்வை நல்லிணக்கம் அரசியல் உருவாக வேண்டும். இவற்றைக் குறிக்கோளாகக் கொண்டு இயங்குவது நம்பிக்கை கூட்டணி என நம்பலாம். இன, சமய கொள்கைகளுக்கு முக்கியத்துவம் தராத எல்லா இயக்கங்களும் ஒன்றுபட வேண்டிய காலம் இது.