புதிய அமைச்சரவையை நாட்டின் நலனை காக்குமா? (பகுதி 1)

இராகவன் இருப்பையா – பெருத்த எதிர்பார்ப்புக்கிடையே பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவித்த அமைச்சரவை நாட்டின் தற்போதைய சூழ்நிலையை அனுசரிக்கும் வகையில் அமைய வேண்டும்.

மலேசிய வரலாற்றில் முதல் முறையாக பல்வேறுக் கூட்டணிகளைக் கொண்டு ஒரு ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும்படியான ஒரு அமைச்சரவையை அமைப்பது சாதாரணமான விடயமில்லை.

புதிய அமைச்சரவையை அன்வார் அறிவிப்பதற்கு ஒரு வாரத்திற்கும் மேலாகிவிட்டது. இதற்கு நியாயமானக் காரணங்கள் உண்டு என்பதை முதலில் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

கடந்த 14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு இருந்த சூழலைப் போன்று இம்முறை இல்லை. அந்தத் தேர்தலில் பக்காத்தான் கூட்டணி தனியாகவே ஆட்சியமைத்தது.

ஆனால் இம்முறை பாரிசான் கூட்டணி, சரவாக்கின் ஜி.பி.எஸ். கூட்டணி, சபாவின் ஜி.ஆர்.எஸ். கூட்டணி, வாரிசான் மற்றும் பி.பி.எம். கட்சிகள், போன்ற பல்வேறு கூட்டணிகளையும் சிறிய கட்சிகளையும் ஒன்றிணைத்து ஒரு ஒற்றுமை அரசாங்கத்தை பக்காத்தான் அமைத்துள்ளது.

ஆகவே மாறுபட்ட வகையில் வெவ்வேறுக் கொள்கைகளையும் சிந்தனைகளையும் கொண்ட அவ்வளவு அணிகளையும் ஒருங்கிணைத்து இணக்கத்திற்குக் கொண்டு வருவது மிகப் பெரிய ஒரு பொறுப்பாகும் என்பதை நாம் உணர வேண்டும்.

2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் முஹிடினும் பிறகு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சப்ரியும் அவசர அவசரமாக அமைச்சரவையை அமைத்த போது தகுதியும் திறமையும் இல்லாதப் பலரை அள்ளிப் போட்டுக் கொண்டு நாட்டை சீர்குலைத்த அநியாயத்தை நாம் இன்னும் மறக்கவில்லை.

எனவே அன்வாரின் தீவிர சிந்தனையில் அமையப்பெற்றுள்ள இந்த புதிய அமைச்சரவை நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயலாற்ற வேண்டும். அது இயலுமா என்று காலம்தான் பதில் சொல்லும்.

அரசியல் விழிப்புணர்ச்சி அதிகரித்துள்ள தற்போதைய சூழ்நிலையில் பொது மக்களும் கழுகுப் பார்வையைக் கொண்டு தங்களுடைய செயல்திறனை கண்காணிப்பார்கள் என்று அந்த புதிய அமைச்சர்களுக்கும் தெரியும்.

அமைச்சரவை நியமனங்கள் குறித்து பல்வேறுக் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பொது மக்கள் பரிமாறி வருகிற போதிலும் 2 முக்கிய அம்சங்களை அன்வார் கருத்தில் கொண்டிருப்பதைப் போல் தெரிகிறது.

முதலாவதாக அரசாங்கத்தின் நிலைத்தன்மை. எண்ணற்ற ஊழல் குற்றங்களை எதிர்நோக்கியிருக்கும் அம்னோ தலைவர் அஹ்மட் ஸாஹிட்டை அமைச்சரவைக்குள் கொண்டு வர வேண்டாம் என பல்வேறுத் தரப்பினர் கேட்டுக் கொண்ட போதிலும் அன்வார் அவரை துணைப் பிரதமராக நியமித்துள்ளார்.

அன்வாரின் கோணத்தில் இருந்து பார்க்கப் போனால் அந்த நியமனம் நியாயமான ஒன்றாகவேப் படுகிறது. தனது கட்சிக்குள்ளேயே குறிப்பிட்ட சிலர் எதிர்ப்புத் தெரிவித்த போதிலும் அவர்கள் அனைவரையும் ஓரளவு ஒருமைப்படுத்தி அம்னோவை இந்தக் கூட்டாட்சிக்கு இணங்கச் செய்தவர் ஸாஹிட்தான்.

எனவே ஸாஹிட்டை முக்கியமானப் பொறுப்பில் அமர்த்தினால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நிலையான ஆட்சியை வழங்க இயலும் என அன்வார் எண்ணியிருகக் கூடும். மேலும் வேறு வழிகளும் இல்லை என்றும் கருதலாம்.

கடந்த 1998ஆம் ஆண்டில் அன்வாரை மகாதீர் சிறையில் அடைத்த போது அவருக்கு ஆதரவாக, உற்றத் தோழனாக இருந்து கூடவே சிறை சென்றவர் ஸாஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் தற்போது எதிர்நோக்கியுள்ள வழக்குகள் ஒரு புறமிருக்க, தமது நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்து கொண்டு, நிலையான ஆட்சியை வழங்குவதற்கு அவர் உறுதுணயாக இருப்பார் என அன்வார் எண்ணியிருக்கக் கூடும்.

திறமையற்ற அமைச்சர்களின் நிலையற்ற அரசாங்கத்தினால் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேல் நாட்டு மக்கள் எந்த அளவுக்கு அவதிப் பட்டார்கள் என்று எல்லாருக்கும் தெரியும்.

இரண்டாவது முக்கிய அம்சம் நாட்டின் பொருளாதாரம். பிரதமராக இருப்பவர் நிதியமைச்சர் பொறுப்பையும வகிக்கக் கூடாது என பரவலாகக் கருத்துக் கூறப்பட்ட போதிலும் அப்பொறுப்பை அன்வார் ஏற்றுள்ளார்.

மிக மோசமாக நலிவடைந்துள்ள நாட்டின் பொருளாதார நிலையை மீட்சி பெறச் செய்வதற்கு தமது அனுபவம் பயனாக அமையும் என்று அவர் எண்ணியிருக்கக் கூடும். அல்லது அவரின் ஊழலற்ற கொள்கையை ஆழப்படுத்தவும், நிதி கசிவை கட்டுப்படுத்தவும் அவர் அதை தனது பொறுப்பில் எடுத்திருக்கலாம்.

கடந்த 90ஆம் ஆண்டுகளில் மகாதீர் ஆட்சியில் துணைப் பிதமராக இருந்த போது நிதியமைச்சின் பொறுப்பையும் அன்வார் மிகத் திறமையாகக் கையாண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(நாளை 2ஆம் பகுதி)