குஜராத்தில் பாஜக வெற்றி: குடும்ப ஆட்சிக்கு எதிரான மக்களின் கோபத்தை காட்டுகிறது- பிரதமர் மோடி

குஜராத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் ஆளும் பா.ஜனதா 156 இடங்களில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

இதன் மூலம் மாநிலத்தில் தொடர்ந்து 7-வது முறையாக ஆட்சியை பிடித்து, குஜராத் மாநிலம் பா.ஜனதாவின் கோட்டை என நிரூபித்து இருக்கிறது. இந்த வெற்றியை நாடு முழுவதும் பா.ஜனதா தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து பிரதமர் மோடி நேற்று டெல்லியில் பா.ஜனதா தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பா.ஜனதாவுக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

குஜராத்தில் 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தபோதும், பா.ஜனதா மீது மக்கள் தொடர்ந்து பொழிந்து வரும் அன்பின் காரணமாக மாநிலத்தில் அனைத்து சாதனைகளும் முறியடித்து வரலாறு படைக்கப்பட்டு இருக்கிறது. குடும்ப ஆட்சி மற்றும் அதிகரிக்கும் ஊழல் மீதான மக்களின் கோபத்தையே இந்த வெற்றி காட்டுகிறது.

ஏழை, நடுத்தர மக்களுக்கு அனைத்து வசதிகளையும் விரைவாக எடுத்துச்சென்றதால் மக்கள் பா.ஜனதாவுக்கு வாக்களித்து உள்ளனர். இமாசல பிரதேசத்திலும் பா.ஜனதாவுக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அங்கு வெற்றி பெற்றுள்ள கட்சியை விட ஒரு சதவீத வாக்குகளே நமக்கு குறைந்திருக்கிறது. மக்களுக்கு தலை வணங்குகிறேன். அவர்களின் ஆசீர்வாதம் மகத்தானது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

 

-mm