இந்தியர்களுக்காக போரட தனித்துவம் கொண்ட பிரதிநிதி இல்லை

இராகவன் கருப்பையா – இனவாத அடிப்படையில் நாடு தொடர்ந்து இயங்குவதால், தமிழ்ப்பபள்ளி, சமயம், கோயில் இப்படி தமிழர் சார்ந்த சமூக, கல்வி மற்றும் பொருளாதார சிக்கல் போன்றவை குறித்த கொள்கை  விவாதங்களுக்கு தகுந்த பிரதிநிதி  உரிமையை  நிலைநாட்டும் தன்மையுடன் போராட்ட உணர்வையும் கொண்டிருக்க வேண்டும்.

தாய்க் கட்சி என்று கூறிக் கொள்ளும் ம.இ.கா.விலும் கூட அதன் பரிவுமிக்க ஆரம்பகாலத் தலைவரான சம்பந்தனைத் தவிர வேறொரு உருப்படியானத் தலைவரை இதுவரையில் பார்க்க முடியவில்லை.

அதே போல எதிரணியில் இருந்த பட்டு, கர்ப்பால் சிங் மற்றும் டேவிட் போன்ற தலைவர்களுக்குப் பிறகு மற்ற எவருக்குமே நம் இனத்தை வழிநடத்திச் செல்லக்கூடிய துணிச்சலான தலைமைத்துவ ஆற்றல் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

காலங்காலமாக ம.இ.கா.வினால் வழங்க இயலாதத் தலைமைத்தவத்தை எதிர்கட்சிகளின் கூட்டணியில் உள்ள இந்தியத் தலைவர்கள் நமக்கு வழங்குவார்கள் என்று நம்பி வாக்களித்த நமக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து 22 மாதங்களுக்கு பக்காத்தான் கூட்டணி ஆட்சி நடத்திய போது இதனை நாம் மிகத் தெளிவாக முதல் முறையாக உணர்ந்தோம்.

அந்த ஆட்சி கவிழ்ந்த போது, காலப் பற்றாக்குறையினால்தான் நமக்கு இந்நிலை ஏற்பட்டது என அரசியல்வாதிகள் அப்போது நமக்கு காரணம் காட்டி சமாதானப்படுத்த முற்பட்டனர். நாம் என்ன ஒன்றும் அறியாத பச்சைக் குழந்தைகளா? இதெல்லாமே வெறும் சாக்கு போக்குதான் என்று தெரிந்தும் நம் சமூகமும் வேறு வழியின்றி அதனை ஏற்றுக் கொண்டது.

இப்போது 4 ஆண்டுகள் கழித்து ‘பழையக் குருடி கதவைத் திறடி’ எனும் நிலைக்கு நாம் திரும்பியுள்ளது மிகவும் வேதனைக்குரிய ஒன்றாக உள்ளது.

இவ்வாரம் அரசாங்கத்தில் நடந்த ஒரு சம்பவம் நம் இதயங்களை கசக்கிப் பிழிவதைப் போல் உள்ளதை எந்த இந்தியத் தலைவராவது உணர்ந்துள்ளாரா என்று தெரியவில்லை.

தேர்தல் முடிந்து ஒரு மாதம் கடந்து விட்ட நிலையில் நம் சமூகம் இன்னமும் திக்கற்றுதான் தடுமாறிக் கொண்டிருக்கிறது என்பது ஒரு புறமிருக்க, அதி முக்கியமானத் துறையான தேசியக் கல்வி ஆலோசனை மன்றத்திற்கு ஒரு தமிழர் கூட நியமிக்கப்படாதது ஒட்டு மொத்த சமூகத்தையும் சினத்திற்குள்ளாக்கியுள்ளது.

எட்டு பேர் கொண்ட அக்குழுவில் இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் வகையில் மஹிண்டர் சிங் எனும் ஒரு சீக்கியர் நியமிக்கப்படுள்ளார்.

ஒரு தேசியக் கல்வி ஆலோசனை மன்றத்தில், தமிழ்ப்பள்ளிகளின் விவகாரத்தைக் கவனித்துக் கொள்ள சீக்கியர் ஒருவர் நியமனம் பெற்றுள்ளதானது நாடு தழுவிய நிலையில் பெரும் அதிருப்தி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் தற்போது 527 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அப்பள்ளிகளைச் சூழ்ந்துள்ள எண்ணற்றப் பிரச்சினைகளை எந்த அளவுக்கு ஒரு சீக்கியர் புரிந்து கொண்டு தக்க நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்ற ஐயமும் நம்முள் எழுந்துள்ளது.

இருதயக் கோளாறை எதிர்நோக்கியுள்ள நோயாளி ஒருவருக்கு சிகிச்சையளிக்க ஒரு பல் மருத்துவரை அனுப்புவதற்கு ஒப்பாக இருக்கிறது கல்வியமைச்சின் நடவடிக்கை என நம் சமூகத்தினர் உவமைக்காட்டி கொதிப்படைந்துள்ளனர்.

ஆற்றல் மிக்க ஏறாளமான கல்விமான்களும் தமிழார்வலர்களும் நம்மிடையே இருக்க, மழைக்குக் கூட தமிழ்ப்பள்ளி பக்கம் ஒதுங்காத ஒருவரை நியமித்திருப்பது, தமிழ்ப்பள்ளிகளை மரண பாதாளத்துக்குள் தள்ளுவதற்கு ஒப்பான செயல் என்று பலர் குமுறுகின்றனர்.

இந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்க அரசாங்கத்தில் ஒரு நாதி கூட இல்லாத நிலையில் நம் சமூகம் இப்போது பரிதவித்து நிற்கிறது. நமக்கென உருப்படியான ஒரு தலைமைத்துவம் இருந்தால் இந்நிலை ஏற்படுமா?

ஒரே இந்திய அமைச்சராக இருப்பவர் கூட ஏனோ தானோ என்றுதான் இருக்கிறார். இம்மாதத் தொடக்கத்தில் அவர் அறிவித்ததைப் போல ஒரு முறையான நடவடிக்கைக் குழு அமையும் வரையில் குறைந்த பட்சம் இடைக்காலத்திற்காவது தலைமைத்துவப் பொறுப்பை தன்னிச்சையாக அவர் ஏற்கலாம் அல்லவா? பிரதமர் கோபித்துக் கொள்ளவா போகிறார்?

பஹாங், சபாய் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காமாச்சி துரைராஜு மட்டுமே இதுகுறித்து உக்கிரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். எந்தக் கூட்டணி ஆட்சிக்கு வந்தாலும் நம் சமூகத்திற்கு இதே அவலம்தானா என்று அவர் கடுமையாகச் சாடினார்.

இதர எல்லா இந்தியப் பிரதிநிதிகளும் ஏன் மவுன விரதம் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அரசாங்கத்தைக் கேள்வி கேட்டால் கிடைக்க வேண்டிய ஏதாவது கிடைக்காமல் போகக் கூடும் எனும் அச்சமோ! அல்லது கிடைத்த பதவியும் பறி போகும் என்ற பயமா?