தேர்தல் நேர நன்கொடையும் ஊழல்தான் – அன்வார்

தேர்தலின் போது பண பட்டுவாடாவை நன்கொடை என்று முத்திரை குத்தி நியாயப்படுத்தியவர்களை, இது ஊழலின் மற்றொரு வடிவம் என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் சாடியுள்ளார்.

அவர் யாரையும் குறிப்பிடவில்லை என்றாலும், கிழக்கு கடற்கரையில் உள்ள மூன்று தொகுதிகளில் 15வது பொதுத் தேர்தல்முடிவுகளை ரத்து செய்ய தெரெங்கானு அம்னோ தாக்கல் செய்த மனுக்களுக்குப் பதிலளிக்கும் வகையில் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின் பின்னணியில் அவரது கருத்துக்கள் வந்துள்ளன.

அத்தகைய கண்ணோட்டம் நாடு பெரும் இழப்பைச் சந்திக்கும் ஒரு ஊழல் நிறைந்த சமுதாயத்தையே ஏற்படுத்தும்.

நன்கொடை சரிதான், ஆனால் தேர்தலின் போது வாக்குகளைப் பெறுவதற்காக இதுபோன்ற கையூட்டுகள் ஊழலே என்று பினாங்கு முதலமைச்சர் சோவ் கோன் இயோவ் இங்கு நடத்திய சீனப் புத்தாண்டு நிகழ்ச்சியின் உரையாடலில் அவர் கூறினார்.

வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் காணொளியில் சிக்கியவர்கள் வெறும் தொண்டு வேலை செய்வதாக ஹாடி முன்பு கூறியிருந்தார்.

மாராங் எம்.பி., தேர்தல் சட்டங்கள் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்களுக்கு மட்டுமே பண பட்டுவாடா வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.

அவரது கருத்துக்கள் பல்வேறு தரப்பிலிருந்தும் கல்லடிகளை ஈர்த்தது. தேர்தல் குற்றச் சட்டம் 1954 இது போன்ற செயல்களை தெளிவாக தடை செய்துள்ளது.

நேற்று, துணைப் பிரதம மந்திரி அஹ்மத் ஜாஹிட் ஹமிடி, மற்ற கட்சிகள் இதேபோன்ற தந்திரங்களைக் கையாண்டிருந்தால், அவர்களை ஹாடி ஊழல் செய்பவர்கள் என்று முத்திரை குத்தியிருப்பார் என்று குறிப்பிட்டார்.

-FMT