பெர்சத்து: வீட்டுப் பிரச்சினைகளைத் தீர்க்கச் சிங்கப்பூரை நாடுவது நாட்டுக்கு கேவலம்

மலேசியாவில் மலிவு விலையில் வீடுகள் கட்டுவதில் தங்கள் நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்ள சிங்கப்பூர் வீட்டு ஒப்பந்ததாரர்களைக் கொண்டுவரும் திட்டம் நாட்டின் இறையாண்மையையும் பாதுகாப்பையும் மீறும் செயல் என்று பெர்சத்து  உறுப்பினர் ஒருவர் கூறினார்.

பெர்சத்து உச்ச மன்ற உறுப்பினர் ஃபைஸ் நமான்(Faiz Na’aman) மலேசியாவில் உள்ளூர் வீட்டுவசதி திட்டமிடல் வல்லுநர்கள் இல்லையா, அல்லது DAP இன் உள்ளூராட்சி மேம்பாட்டு அமைச்சர் என்கா கோர் மிங்(Nga Kor Ming) இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி நிரலைக் கொண்டிருந்தாரா என்று கேள்வி எழுப்பினார்.

“ஒரு சுதந்திர நாடு அதன் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை எந்த விலையிலும் சமரசம் செய்ய முடியாது. குறிப்பாகக் கொடுக்கப்பட்ட காரணம் அர்த்தமற்றதாக இருக்கும்போது, “என்று ஃபைஸ் இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.

உள்ளாட்சி மேம்பாட்டு அமைச்சர் ங்கா கோர் மிங்

நாட்டின் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு வாரியத்தின் (Housing and Development Board) பிளாட் ஒப்பந்ததாரர்கள் மலிவு விலை வீடுகளைக் கட்டுவது குறித்த தங்கள் அறிவைப் பகிர்ந்து கொள்ள அடுத்த மாதம் தனது அமைச்சகத்தை சந்திக்க சிங்கப்பூர் அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளதாக Ngaவின் சமீபத்திய அறிக்கைக்கு அவர் பதிலளித்தார்.

“இந்த நடவடிக்கை நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை தெளிவாக மீறுவதாகும். ஏனென்றால், சிங்கப்பூர் முகமையின் ஈடுபாடு கட்டிடத் திட்டமிடலை உள்ளடக்கவில்லை, ஆனால் மக்கள்தொகை தொடர்பான முக்கியமான அரசாங்கத் தகவல்களுக்கும் அவர்களுக்கு அணுகல் வழங்கப்படுகிறது என்று நாங்கள் கவலைப்படுகிறோம்”.

“சிங்கப்பூரின் HDB மலேசியாவிற்கு வருவதற்கான அணுகல் வழங்கப்படுவதில் என்ன சிறப்பு இருக்கிறது என்பதுதான் கேள்வி. நம்மிடம் (மலேசியா) கட்டிட திட்டமிடல் வல்லுநர்கள் இல்லையா?” என்று அவர் கேட்டார்.

பெர்சத்து உச்ச கவுன்சில் உறுப்பினர் ஃபைஸ் நாமான்

சிங்கப்பூர் நிபுணர்களை ஈடுபடுத்தும் திட்டத்திற்கு பிரதமர் அன்வார் இப்ராஹிமின் சம்மதம் உள்ளதா என்றும் பைஸ் கேள்வி எழுப்பினார்.

“மேலும், அம்னோ எங்கே? கட்சி  DAP ஆல் மௌனிக்கப்பட்டதா?”

“இந்த முன்முயற்சியின் பின்னணியில் ஒரு பெரிய அரசியல் வடிவமைப்பு இருப்பதாக நான் நம்புகிறேன். DAPநீண்ட காலமாகச் சிங்கப்பூரின் HDB மற்றும் ஹாங்காங்கின்  HKHA (ஹாங்காங் வீட்டுவசதி ஆணையம்) மாதிரிகளைப் பினாங்கிற்குள் கொண்டு வந்துள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம், அங்கு, உள்ளூர்வாசிகள் இப்போது சொத்துக்களை பார்க்க மட்டுமே முடியும், ஆனால் அவற்றை வாங்க முடியாது,” என்று பைஸ் கூறினார்.