பக்கத்தான்: நஜிப்பிற்கு ஓர் இறுதிச் சந்தர்ப்பம்

தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்படவிருக்கும் நாடாளுமன்ற சிறப்புக்குழுவை புறக்கணிப்பதா இல்லையா என்பது குறித்து முடிவெடுப்பதற்கு முன்பு தேர்தல் சீர்திருத்திங்கள் மீது பிரதமரும் தேர்தல் ஆணையமும் கொண்டுள்ள ஈடுபாட்டை நிரூபிப்பதற்கு அவர்களுக்கு பக்கத்தான் இன்று ஓர் இறுதிச் சந்தர்ப்பத்தை வழங்கியது.

அது பற்றிய இறுதி முடிவு அக்டோபர் மாத வாக்கில் எடுக்கப்படும் என்று நாடாளுமன்ற எதிரணியின் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார்.

“புறக்கணிப்பதற்கான முடிவை நாங்கள் இன்னும் எடுக்கவில்லை. ஆனால் அரசாங்கம் அதன் ஈடுபாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்பதை நாங்கள் தெளிவுபடுத்துகிறோம். தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். பிரதமர் நாடாளுமன்ற சிறப்புக்குழு தேவையான நடவடிக்கைகளை எடுத்தப் பிறகுதான் தேர்தல் நடத்தப்படும் என்பதற்கான உத்தரவாதத்தை அளித்து தாம் கூறியபடி நடந்துகொள்வார் என்பதைத் திட்டவட்டமாக வெளிப்படுத்த வேண்டும்.

“ரமதானுக்குப் பிறகு, இது குறித்து சிந்திப்பதற்கு நமக்கு சில வாரங்கள் இருக்கின்றன. அடுத்த மாத வாக்கில் ஓர் இறுதி முடிவு எடுப்போம்”, என்று அன்வார் கூறினார்.

குழுவுக்கு ஷரீர் சாமாட் தலைவர்?

இதனிடையே, ஜொகூர் பாரு நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஷரீர் சமாட் நாடாளுமன்ற சிறப்புக்குழுவின் தலைவராக நியமிக்கப்படுவதற்கு அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது என்று இன்று மாலை சைனா பிரஸ் சில வட்டாரங்களை மேற்கோள் காட்டி அதன் இணையதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

அச்செய்தியின்படி, பிரதமர் நஜிப்தான் ஷரீரின் பெயரை முன்மொழிந்தார். முன்னாள் அமைச்சரும் தற்போது நாடாளுமன்ற பின்னிருக்கை உறுப்பினருமான ஷரீருக்கு இப்பொறுப்பை செவ்வனே ஆற்றுவதற்கான அனுபவம் இருப்பதாக அவர் கூறினார்.

TAGS: