வாரிசு

நடிகர்கள்:விஜய், ரஷ்மிகா மந்தனா, சரத்குமார்

இயக்கம்: வம்சி பைடிபல்லி

போட்டி மிகுந்த கார்பரேட் உலக பின்னணியில் ஒரு குடும்பம், அப்பா, மகன்கள், சகோதரர்களிடையே சண்டை, போட்டி பொறாமை கொண்ட எதிரிகள், பாசமான அம்மா, ஜாலியான ரொமான்ஸ், கலக்கலான பாடல்கள், மாஸ் காட்சிகள் எனப் படத்தைக் கொண்டு சென்றிருக்கிறார் வம்சி.

தொழில் அதிபரான ராஜேந்திரனுக்கு (சரத்குமார்) ஜெய்(ஸ்ரீகாந்த்), அஜய்(ஷாம்), விஜய்(விஜய்)

என்று மூன்று மகன்கள். தனக்கு அடுத்து தன் இடத்திற்கு வர எந்த மகனுக்குத் தகுதி இருக்கிறது என்பதை பார்க்க ஜெய்யையும், அஜய்யையும் மோதவிட்டுப் பார்க்கிறார் அப்பா. முதல் இரண்டு மகன்களுக்கும் சேர்மன் நாற்காலிமீது கண். அதனால் அப்பா சொல்லும்படி எல்லாம் நடக்கிறார்கள்.

மூன்றாவது மகன் விஜய்க்கு தன் அப்பாவின் வழி பிடிக்காமல் தள்ளியே இருக்கிறார். தன் கடைசி நாட்களை எண்ணுவதை அறிந்த ராஜேந்திரன் விஜய்யை தன் வாரிசாகத் தேர்வு செய்கிறார். இது பிடிக்காமல் ஜெய்யும், அஜய்யும் கோபம் அடைந்து எதிரி ஜெயபிரகாஷுடன்(பிரகாஷ் ராஜ்) கைக்கோர்த்துவிடுகிறார்கள். தான் நல்ல வாரிசு என்பதை நிரூபித்து, குடும்பத்தை ஒன்று சேர்ப்பாரா விஜய் என்பதே கதை.

வாரிசு படத்தின் துவக்கம் சரியில்லை. செக்கச் சிவந்த வானம் படத்தைப் பார்ப்பது போன்று இருந்தது. கதையின் துவக்கத்தில் ராஜேந்திரன், விஜய்க்கு இடையே ஏற்படும் பிரச்சனை கவரவில்லை. இடைவேளை கூடப் பெரிதாகச் சுவாரஸ்யமாக இல்லை.

இரண்டாம் பாதியில் தான் படம் வேகம் எடுக்கிறது. முதல் பாதியில் மொக்கை போட்டதற்கும் சேர்த்து இரண்டாம் பாதியில் விறுவிறுப்பு இருக்கிறது. காமெடி, சென்டிமென்ட், ஹீரோயிசம் என ரசிகர்களைக் கவர்கிறார் வம்சி.

சிரிக்க வைக்கிறார். ஃபீல் செய்து அழவும் வைக்கிறார் இயக்குநர். குடும்பம், உறவுகள் தான் கதையின் மையமே. காதல் டிராக் படத்திற்கு கைக்கொடுக்கவில்லை. வில்லன்களும் விஜய் ரேஞ்சுக்கு இல்லை. விஜய் என்கிற ஒரே ஆளை நம்பி படத்தை ஓட்டியிருக்கிறார் வம்சி.

தன் பொறுப்பை உணர்ந்து படத்தைத் தன் தோளில் தாங்கியிருக்கிறார் விஜய்.