பெர்சே: தேர்தலின்போது பணம் விநியோகிக்கப்படுகிறது

தேர்தலின்போது பிற மதிப்புமிக்க பொருட்களுடன் ரொக்கப் பணமும் கொடுப்பது இன்னும் லஞ்சத்தின் ஒரு வடிவம் என்று தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெர்சே மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இந்த மீறலைக் கட்டுப்படுத்த தேர்தல் குற்றச் சட்டம் 1954 (EOA) மற்றும் அரசியல் நிதிச் சட்டம் (PFA) ஆகியவை விரைவாக அமல்படுத்தப்பட வேண்டும் என்று அது கூறியது.

தேர்தல் முறை மற்றும் செயல்முறையை ஆராய்வதற்காக நிரந்தர நாடாளுமன்ற நிலைக்குழு ஒன்று வரும் பிப்ரவரியில் நடைபெறவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நிறுவப்பட வேண்டும் என்றும் அவர்கள் முன்மொழிந்தனர்.

15வது பொதுத் தேர்தலின்போது வாக்காளர்களுக்குக் கட்சி பணம் விநியோகித்தது ஒரு தொண்டு நடவடிக்கை என்றும், எந்தத் தேர்தல் சட்டங்களையும் மீறவில்லை என்றும் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கின் நிலைப்பாட்டைப் பெர்சே குறிப்பிட்டது.

“மலேசியாவில் அன்னதானம் வழங்குவது நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக மாறியிருந்தாலும், தேர்தல்களின்போது பணம் அல்லது மதிப்புமிக்க எதையும் கொடுப்பது லஞ்சம் கொடுப்பதற்கான தேர்தல் குற்றமாகக் கருதப்படலாம்,” என்று குழு இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வேட்பாளர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகள் மட்டுமே கையூட்டு கொடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளது என்ற ஹாடியின் அறிக்கை தேர்தல் குற்றச் சட்டம் 1954 இன் பிரிவு 10 (லஞ்சம்) உடன் பொருந்தவில்லை என்று அவர்கள் மேற்கோள் காட்டினர்.

பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்

இந்தப் பிரிவின்படி, தேர்தலுக்கு முன்பும், தேர்தலின்போதும் அல்லது அதற்குப் பிறகும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பணம் அல்லது மதிப்புள்ள வேறு எதையும் வழங்குபவர்கள் ஊழல் குற்றத்தைச் செய்ததாகத் தீர்மானிக்கப்படலாம்.

இதன் பொருள் என்னவென்றால், ஒரு நபருக்கு வாக்களிக்க அல்லது வாக்களிப்பதைத் தவிர்க்கத் தேர்தல் காலத்தில் வாக்காளர்களுக்குப் பணம் அல்லது மதிப்புமிக்க எதுவும் கொடுக்கப்பட்டால் அது ஒரு வகையான ஊழலாகும்.

“இந்தச் செயல் நேரடியாகவோ அல்லது மூன்றாம் நபர் மூலமாகவோ செய்யப்பட்டிருந்தாலும் அது லஞ்சம்,” என்று குழு கூறியது.

போலீஸ் மற்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) இந்த விஷயத்தை விசாரிக்க வேண்டும் என்றும், வழக்கு இருந்தால், குற்றவாளிகள் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட வேண்டும் என்றும் பெர்சே வலியுறுத்தியது.