பாகிஸ்தான் மசூதியில் தற்கொலைப் படை தாக்குதல் – குண்டுவெடிப்பில் 63 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள மசூதியில் தற்கொலைப் படை தீவிரவாதி நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் 63 பேர் உயிரிழந்தனர். 150-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்கவா மாகாணத் தலைநகர் பெஷாவரில் பாதுகாப்பு மிகுந்த போலீஸ் லைன் பகுதி உள்ளது. இங்குள்ள மசூதியில் நேற்று மதியம் முஸ்ஸிம்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் மசூதி கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதனால், அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. காவல் துறையினரும், மீட்பு படையினரும் விரைந்து வந்து, மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

இடிபாடுகளில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டன. குண்டுவெடிப்பில் காயம் அடைந்தவர்கள், இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

குண்டுவெடிப்பில் 63 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 150-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில், சிகிச்சை பெற்று வருகின்றனர். பெஷாவர் நகரின் லேடி ரீடிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 23 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

 

 

-th