ஆஸ்திரேலியா, கனடாவை தொடர்ந்து வங்காளதேசத்திலும் இந்து கோவில்கள் மீது தாக்குதல்

வங்காளதேசத்தில் 14 இந்து கோவில்களில் தாக்குதல் நடந்துள்ளன. சாமி சிலைகளை பெயர்த்த மர்ம கும்பல் சாலைகளிலும், குளங்களிலும் வீசிச்சென்றன.

சமீப காலமாக வெளிநாடுகளில் இந்துக் கோவில்கள் மீது தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது. ஆண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலியா மற்றும் கனடா நாடுகளில் உள்ள பிரசித்தி பெற்ற இந்து கோவில்களை இலக்காக கொண்டு தாக்குதல்கள் நடந்துள்ளன.

ஆஸ்திரேலியாவில் கடந்த ஜனவரியில் அடுத்தடுத்து 3 கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதுடன், இந்தியாவுக்கு எதிரான வாசகங்களும் கோவில் சுவர்களில் எழுதப்பட்டன. இந்நிலையில், வங்காளதேசத்தில் 14 இந்து கோவில்கள் மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்தி உள்ளது. கடந்த ஞாயிறு அன்று இந்த சம்பவம் நடந்துள்ளது.

தகவலறிந்த போலீசார் சம்பவ பகுதிக்குச் சென்றனர். இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில்கள் மீது தாக்குதல்களை நடத்திய மர்ம நபர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், சிந்தூர்பிந்தி என்ற இடத்தில் இருந்த கோவிலில் 9 சாமி சிலைகளும், பாரியா யூனியனில் காலேஜ்பாரா பகுதியில் உள்ள கோவிலில் 4 சாமி சிலைகளும் மற்றும் சரோல் யூனியனில் ஷாபாஜ்பூர் நாத்பாரா பகுதியில் உள்ள 12 கோவில்களில் 14 சாமி சிலைகளும் சூறையாடப்பட்டன. கடந்த சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை தாக்குதல்கள் நடத்தப்பட்டு இருக்கலாம் என தெரிவித்தனர்.

-mm