நிதி அமைச்சர் அன்வார், அவருக்கு உதவ ஆலோசனைக் குழுவை நியமித்தார்

பிரதமர் அன்வார் இப்ராஹிம் நிதியமைச்சராகத் தனது கடமைகளில் தனக்கு ஆலோசனை வழங்க மேலும் நான்கு தொழில்வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களை நியமித்துள்ளார்.

பெட்ரோனாஸின் ஆலோசகரும் முன்னாள் தலைவருமான ஹசன் மரிக்கான்(Hassan Marican) தலைமையில் ஒரு ஆலோசனைக் குழுவை அவர்கள் அமைப்பார்கள், அவரது நியமனம் ஏற்கனவே கடந்த ஆண்டு டிசம்பரில் அறிவிக்கப்பட்டது.

FVSB  நிர்வாகத் தலைவர் அஹ்மத் ஃபுவாட் முகமட் அலி(Ahmad Fuad Md Ali), சன்வே பல்கலைக்கழக பொருளாதார பேராசிரியர் யெஸ் கிம் லெங்(Yeah Kim Leng), மலாயா பல்கலைக்கழக பொருளாதார பேராசிரியர் ராஜா ரசியா(Rajah Rasiah) மற்றும் சரவாக் எனர்ஜி தலைவர் அமர் அப்துல் ஹமெட் செபாவி(Amar Abdul Hamed Sepawi) ஆகியோர் இந்த அமைப்பின் மற்ற நான்கு உறுப்பினர்களாக உள்ளனர்.

“சிறப்பு ஆலோசனைக் குழு அரசாங்கத்திடமிருந்து எந்தக் கட்டணத்தையும் பெறாது என்ற எனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்,” என்று அன்வார் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தனது அமைச்சரவை அறிவிப்பின்போது, ஹசனும் பல ஆலோசகர்களும் தனது நிதி அமைச்சக இலாகாவில் தனக்கு உதவுவார்கள் என்று அன்வார் கூறினார், ஆனால் அந்த நேரத்தில் மற்ற ஆலோசகர்களின் பெயரைக் குறிப்பிடவில்லை.

பொருளாதாரம் மற்றும் நிதிக்கான மூத்த ஆலோசகராக அன்வார் தனது மகள் நூருல் இஸ்ஸாவை நியமித்ததற்காகக் கடுமையாக விமர்சிக்கப்பட்ட நேரத்தில் இந்தப் புதிய நியமனங்கள் வந்துள்ளன.

தம்புன் எம்.பி தனது முடிவை மீண்டும் மீண்டும் நியாயப்படுத்தியுள்ளார், தனது மகளுக்குத் தேவையான நிபுணத்துவம் மற்றும் அனுபவம் உள்ளது, மேலும் அவரது பதவிக்கு எந்த அதிகாரமும் அல்லது ஊதியமும் இல்லை என்று கூறினார்.

எவ்வாறாயினும், நூருல் இஸ்ஸா புதிதாக உருவாக்கப்பட்ட ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகத் தெரியவில்லை. அன்வாரின் இன்றைய அறிக்கை ஐந்து தொழில் வல்லுநர்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்களை மட்டுமே கொண்டிருக்கும் என்று கூறியது, மேலும் அவரது மகளைக் குழுவில் பட்டியலிடவில்லை.