இராமசாமியின் கருத்து நியாயமானது! அரசியல் ஒத்தூதிகள் வெறும் ஜால்ரா!

இராகவன் கருப்பையா – பொதுச் சேவைத்துறை இந்நாட்டின் இன அமைப்பை பிரதிபலிக்கும் வகையில் பிரதமர் அன்வார் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என பினாங்கு மாநில துணை முதல்வர் இராமசாமி விடுத்த கோரிக்கையில் என்ன தவறு இருக்கிறது?

உள்ளங்கை நெல்லிக்கனிப்போல உள்ள உண்மையைதானே சொன்னார்!

இதில் இனத்துவேசமோ, தீய நோக்கமோ, ஒற்றுமையைக் குழைக்கும் அம்சமோ, மலாய்க்காரர்களின் உரிமைகளைப் பறிக்கும் நோக்கமோ, வேறு எந்த விதமான வில்லங்கமோ இல்லை என்பது மிகத் தெளிவாக உள்ளது.

ஆனால் இராமசாமி ஏதோ உலக மகா குற்றத்தைப் புரிந்துவிட்ட மாதிரி அவர் மேல் சீறிப் பாயும் அரசியல்வாதிகளைப் பார்க்க மிகவும் வியப்பாக இருக்கிறது.

போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லொக் மற்றும் துணைப் பிரதமர் அஹ்மட் ஸாஹிட் போன்ற மூத்த அரசியல்வாதிகளும் கூட இந்த ஜால்ரா கூட்டத்தில் சேர்ந்து கொண்டதுதான் வேடிக்கையான ஒன்று.

தனது சொந்தத் தொகுதியான சிம்பாங் ரெங்காமின் வாக்காளர்களாலும் முன்னைய பக்காத்தான் அரசாங்கத்தாலும் நிராகரிக்கப்பட்ட முன்னாள் கல்வியமைச்சர் மஸ்லி மாலிக்கும் கூட இவ்விவகாரத்தில் ஆதாயம் தேட முணைந்துள்ளார்.

தற்போதைய ஒற்றுமை அரசாங்கத்திற்கு ராமசாமி ஒரு பெரிய பாரம் என்றும் பினாங்கு மாநிலத் துணை முதல்வர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட வேண்டும் எனவும் அவர் மூக்கை நுழைத்துள்ளார்.

நம் நாட்டின் அரசியல்வாதிகளில் பெரும்பாலோர் காலங்காலமாக எந்த ஒரு சிறிய விடயமாக இருந்தாலும் அதற்கு இனவாத, மதவாத சாயம் பூசி ஆதாயம் தேடுவதை புலப்படுத்துவதற்கு இது நல்லதொரு உதாரணம்.

இராமசாமியின் கருத்தைப் போலவே இந்த விவகாரம் தொட்டு ‘ஜி-25’ எனும் முன்னாள் அரசாங்க உயர் அதிகாரிகளைக் கொண்ட அமைப்பின் பேச்சாளர் நூர் ஃபரிடாவும் சரவாக் மாநிலத்தின் பிரதம மந்திரி அபாங் ஜொஹாரியும் ஏற்கெனவே பேசியுள்ளனர். ஆனால் அவர்களைக் கண்டிக்க ஒரு நாதிக்கும் துணிச்சல் இல்லை.

இந்தியர்களைப் பிரநிதிக்கும் ஒரு அரசியல்வாதியின் கருத்தை இப்படி அநாவசியமாக பூதாகரமாக்கி வயிறு கழுவ எண்ணும் அரசியவாதிகள் நம் நாட்டில் ஏராளமாக உள்ளனர்.

இராமசாமி தனது நியாயமானக் கருத்தை வெளியிட்ட போது மவுனமாக இருந்த இவர்கள், “பொதுச் சேவைத்துறையின் இன அமைப்பை ஒரு பிரச்சினையாக தமது நிர்வாகம் கருதவில்லை” என்று அன்வார் நாசூக்காக நழுவிய மறுகணமே ஒத்தூதத் தொடங்கிவிட்டனர்.

ஆளும் கூட்டணியில் இருப்பதை மறந்துவிட்டு எதிரணியில் இருப்பதைப் போல ராமசாமி நடந்து கொள்கிறார் என அந்தோனி லோக் குற்றஞ்சாட்டினார்.

அப்படியென்றால் எதிர் கட்சியாக இருக்கும் போது புலியாகப் பாயலாம், ஆட்சிக்கு வந்தவுடன் பூனையாகப் பதுங்க வேண்டும் என்றா பொருள்படும்? எந்தத் தரப்பில் இருந்தாலும் மக்களின் பிரதிநிதி என்ற வகையில் பிரச்சினைகளுக்கு தீர்வு காணத்தானே வேண்டும்!

இராமசாமி மீது கட்சி தனது சொந்த அணுகுமுறையில் நடவடிக்கை மேற்கொள்ளும் என அந்தோனி லொக் மிரட்டியுள்ளதும் கூட ஏற்புடையதாக இல்லை. அவருடைய தான்தோன்றித்தனத்தையே இது காட்டுகிறது. யாரை சமாதானப்படுத்த இந்த அறிவிப்பு என்று தெரியவில்லை.

தேர்தலுக்கு முன் வீரவசனம் பேசி அல்லும் பகலும் கொக்கரித்த இந்தியப் பிரதிநிகள் இப்போது இடி, மின்னலுக்கு பயந்த புனைகளைப்போல பதுங்கிக் கிடக்கும் வேளையில் இராமசாமி ஒருவர் மட்டுமே சமுதாயத்தின் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கிறார்.

அவருக்கும் வாய்ப் பூட்டு போட நினைத்தால் நம் சமூகத்தின் நிலைதான் என்ன? யார்தான் நமக்காகப் பேசுவது? வாயைத் திறக்கக் கூடாதா? வாய்ந்திறந்தால் இவர்களுக்கு ஏற்றமாதிரிதான் ஜால்ரா போட வேண்டுமா? ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லையே!