அரசாங்க அலுவலகங்களுக்கு எப்படிதான் உடுத்திச் செல்வது?

இராகவன் கருப்பையா – அலுவல் நிமித்தம் நாம் அரசாங்க அலுவலகங்களுக்குச் செல்லும் போது எவ்வாறான உடைகளணிந்துச் செல்ல வேண்டும் என்பதில் எழுந்துள்ள சர்ச்சை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

கடந்த மாதம் சிலாங்கூர், காஜாங்கில் உள்ள காவல் நிலையத்திலும், இம்மாத மத்தியில் பேராக், கம்பார் மருத்துவமனையிலும், பிறகு ஜொகூர், பாசிர் கூடாங் மாவட்ட மன்ற அலுவலகத்திலும், ஆகக் கடைசியாக இன்று காலை நாடாளுமன்ற வளாகத்திலும் அடுத்தடுத்து நிகழ்ந்த சம்பவங்கள் நமக்கு வியப்பூட்டுவது மட்டுமின்றி எரிச்சலையும் ஏற்படுத்துகிறது.

காஜாங் காவல் நிலையத்தில் வாகன விபத்து சம்பந்தமாக புகார் செய்யச் சென்ற ஒரு பெண், குட்டையாக கால்சட்டை அணிந்துள்ளார் என்பதன் அடிப்படையில் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

தான் அணிந்திருந்த “பெர்முடா” எனப்படும் கால்சட்டை முழங்காலுக்கு கீழ் வரையில் இருந்த போதிலும் உடையை மாற்றிய பிறகுதான் புகார் செய்ய தான் அனுமதிக்கப்பட்டதாக அப்பெண் பிறகு கூறினார்.

பொதுவான, நிர்ணயிக்கப்பட்ட ஒரு நடைமுறை இல்லாத பட்சத்தில் இத்தகைய முடிவு அந்தந்த காவல் நிலையங்களைப் பொருத்தது என காவல் படைத் தலைவர் அக்ரில் சானி நழுவியது வியக்கத்தக்க ஒன்றுதான்.

ஆபத்து அவசரத்திற்கு உதவி நாடி காவல் நிலையத்திற்கு ஓடி வருபவர்களை இப்படிதான்  உடையை மாற்றிக் கொண்டு வர வேண்டும் என்று பணிப்பார்களா, என்ற கேள்வியும் எழுகிறது.

இது குறித்து கருத்துரைத்த காவல் படையின் முன்னாள் தலைவர் மூசா ஹசான், காவல் நிலையத்திற்கு வருபவர்களுக்கு சேவையாற்றுவதுதான் முக்கியமேத் தவிர அவர்களுடைய உடை எப்படி இருக்கிறது என்று ஆராய வேண்டிய அவசியமில்லை என்றார்.

புகார் செய்ய வருபவர்களை திருப்பி அனுப்பக்கூடாது என்று எச்சரித்த உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன், அதே சமயம் அங்கு செல்பவர்கள் பண்பார்ந்த உடையணிந்து செல்ல வேண்டும் என்று குறிப்பிட்டதும் குழப்பமாகத்தான் உள்ளது.

ஏனெனில் அவரவர் தங்களுடைய கலாச்சாத்திற்கு ஏற்றவாறுதானே உடையணிந்து செல்கிறார்கள்! அப்படியா ஆபாசமாகத்திரிகிறார்கள் எனும் கேள்வியும் எழவேச் செய்கிறது.

கம்பார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்குச் சென்ற ஒரு இளம் பெண்ணும் கூட இதே போல நடத்தப்பட்டிருப்பது கொடுமையான விஷயம். சுமார் 21 வயதுடைய அந்தப் பெண் குட்டையாக கால்சட்டை அணிந்திருப்பதாகக் கூறி சிகிச்சை மறுக்கப்பட்டுள்ளது.

“அப்படியென்றால் இரவில் படுக்கைக்குச் செல்லும் போதே முழுக்கை சட்டையும் நீண்ட கால்சட்டையும் அணிந்து உரங்கச் செல்ல வேண்டும். இரவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டாலோ நோய்வாய் பட்டாலோ சிகிச்சைக்கு ஏதுவாக இருக்கும்” என பொது மக்கள் சமூக வலைத் தளங்களில் கிண்டலடிக்கின்றனர்.

எனினும் சுகாதார அமைச்சர் ஸலிஹா முஸ்தஃபா, கம்பார் மருத்துவமனையின் அறிவிலித்தனமான அச்செயலை பிறகு கண்டித்துள்ளார்.

பாசிர் கூடாங்கில் நடந்த சம்பவத்தில் முழங்காலுக்குக் கீழ் பாவாடை அணிந்திருந்த 60 வயதுடைய பெண்மணி ஒருவரை, உடை சரியில்லை என்று கூறி அங்குள்ள ஒரு காவலாளி மின்தூக்கியில் அவரை ஏற அனுமதிக்கவில்லை. இதனால் அக்காவலாளிக்குத் தெரியாமல் 2 மாடிகளுக்கு அவர் படிகளில் ஏறிச்சென்றதாகக் கூறப்படுகிறது.

இவர்கள் எல்லாருமே செய்ய வேண்டிய வேலைகளை விட்டு ஏன் கேவலமாக பெண்களின் கால்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என வலைத்தளவாசிகள் கடுமையாகச் சாடுகிறார்கள்.

இன்று காலையில் குட்டையாக பாவாடை அணிந்திருக்கிறார் எனும் குற்றச்சாட்டின் பேரில், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உதவியாளர் அவ்வளாகத்தை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார்.

இது போன்ற அநாவசிய கெடுபிடிகளுக்கு அரசாங்கம் ஒரு தீர்வு காணாவிட்டால் அவரவர் தங்களுக்கு ஏற்றவாறு சுயமாக விதிமுறைகளை ஏற்படுத்திக் கொண்டு, ஆஃப்கானிஸ்தானின் தலிபான் ஆட்சியைப் போன்ற அபாயகரமான ஒரு சூழலுக்கு வழிவகுக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது.