ரஷியாவால் உக்ரைனை வீழ்த்த முடியாது – ஜோ பைடன் உறுதி

ரஷியாவால் உக்ரைனை ஒருபோதும் வீழ்த்த முடியாது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உறுதிபட தெரிவித்தார்.

உக்ரைன் மீதான ரஷியா போர் நாளை (வெள்ளிக்கிழமை) ஓர் ஆண்டை நிறைவு செய்கிறது. ஆனால் போர் முடிவுக்கு வருவதற்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை. மாறாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் திடீர் பயணமாக உக்ரைன் சென்றதும், அங்கு ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசிய அவர் கூடுதலாக ரூ.4 ஆயிரம் கோடிக்கு ராணுவ உதவிகளை வழங்குவதாக அறிவித்ததும் போரை மேலும் தீவிரப்படுத்துவதாக அமைந்துள்ளது.

போரை தொடங்கியது அவர்கள்தான் இந்த நிலையில் ரஷிய அதிபர் புதின் நேற்று முன்தினம் அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். சுமார் 2 மணி உரையில் பெரும்பாலும் உக்ரைன் போர் குறித்து அவர் பேசினார். அப்போது அவர், “போரை தொடங்கியது அவர்கள்தான். போரை நிறுத்துவதற்காகவே நாங்கள் பலத்தை பயன்படுத்துகிறோம்.

அமைதியான முறையில் விட்டுக் கொடுத்துச் செல்வதற்கே முயன்றோம். ஆனால், நமது முதுகில் குத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகள் மேற்கொண்டன ரஷியாவுக்கு எதிராக உக்ரைனை பகடைக்காயாக மேற்கத்திய நாடுகள் பயன்படுத்துகிறார்கள். உக்ரைன் போருக்கு மேற்கத்திய நாடுகள்தான் முழுப் பொறுப்பாகும்” என கூறினார்.

ரஷியாவை தோற்கடிக்க முடியாது மேலும் அவர், “உள்ளூர் மோதலை உலகளவில் வளர்க்க மேற்கத்திய நாடுகள் விரும்புகிறார்கள். அதற்கேற்ப நாங்கள் சரியான முறையில் பதிலளிப்போம். ரஷியாவை தோற்கடித்துவிட முடியும் என்று தப்புக் கணக்கு போட்டு இந்த மோதலை அவர்கள் தொடங்கிவிட்டார்கள்.

ரஷியாவை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது” எனவும் தெரிவித்தார். இந்த நிலையில் புதினின் இந்த உரைக்கு பதிலளித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ரஷியாவால் உக்ரைனை வீழ்த்த முடியாது என உறுதிபட கூறினார். தொடர்ந்து ஆதரவு அளிப்போம் உக்ரைனை தொடர்ந்து அதன் அண்டை நாடான போலந்து சென்ற ஜோ பைடன் தலைநகர் வார்சாவில் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:- ரஷியா தாக்குதல் ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில், உக்ரைன் வலிமையுடன் போராடுகிறது. பெருமையுடன் நிற்கிறது. முக்கியமாக சுதந்திரத்திற்காக போராடுகிறது. நாடுகளின் இறையாண்மைக்காகவும், ஆக்கிரமிப்பு இல்லாமல் வாழும் மக்களின் உரிமைக்காகவும், ஜனநாயகத்திற்காகவும் நாங்கள் நிற்போம். அதை செய்வோம். எந்த தடையாக இருந்தாலும், இந்த விஷயங்களுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவு அளிப்போம். சுதந்திர உலகம் எதற்கும் அஞ்சவில்லை உக்ரைனை ஒரு போதும் ரஷியா வெற்றி கொள்ள முடியாது. உக்ரைன் இன்னும் சுதந்திரமாகவும், தன்னம்பிக்கையுடனும் உள்ளது. அமெரிக்காவோ அல்லது ஐரோப்பிய நாடுகளோ, ரஷியாவை கட்டுப்படுத்தவோ அல்லது அழிக்கவோ நினைக்கவில்லை. புதின் கூறியபடி, ரஷியாவை தாக்கும் திட்டம் ஏதும் மேற்கத்திய நாடுகளிடம் இல்லை என்று ஜோ பைடன் கூறினார்.

முன்னதாக வார்சாவில் ஜோ பைடனை வரவேற்ற போலாந்து அதிபர் ஆண்ட்ரெஜ் துடா, ஜோ பைடன் உக்ரைனுக்கு பயணம் செய்ததன் மூலம் சுதந்திர உலகம் எதற்கும் அஞ்சவில்லை என்பதை சுட்டிக்காட்டியதாக கூறினார். மேலும் சுதந்திர உலகத்தையும் உக்ரைனையும் பாதுகாப்பதும், ஆதரவளிப்பதுமே நேட்டோவின் பங்கு என அவர் தெரிவித்தார்.

-dt