எந்த வேலையிலும் லட்சியத்தை தேடுவதும் நாடுவதும் நலமே!

கி.சீலதாஸ் – எங்கள் ஊரில் நடுத்தர வயதுடைய இந்தியப் பெண்மணி ஒருவர் வாகனங்களைக் கழுவும் தொழில் செய்கிறார். சில நாட்களில் உதவிக்கு ஆள் இல்லை என்ற காரணத்தால் கடையைத் திறக்க மாட்டார். எவரும் இந்த விதமான தொழிலில் நிரந்தரமாக இருக்க மாட்டார்கள். அதே சமயத்தில், ஒரு சில வாகனம் கழுவும் நிறுவனங்கள்  நவீனக் கருவிகளைப் பயன்படுத்தி அந்தத் தொழிலை மிகச் சிறப்பாகச் செய்கின்றன. வெளிநாட்டவர்கள் அப்படிப்பட்ட நிறுவனங்களில் வேலை செய்வதைக் காணலாம்.

அந்தத் தொழிலாளர்கள் நிரந்தரமாக அங்கே வேலை பார்க்கிறார்கள். அப்படிப்பட்ட பெரிய அளவில் வாகனம் கழுவும் தொழிலை நடத்த நான் குறிப்பிட்ட பெண்மணிக்கு இல்லை. அதாவது எவரையும் நிரந்தரமாக, பலவிதமான பாதுகாப்புடன் ஒரு தொழிலாளரை வேலையில் வைத்திருக்க அவரிடம் வசதியில்லை. எனவே, அவர் வேலையில்லாமல் சுற்றித் திரிபவர்களுக்கு நல்ல ஊதியம் தருவார்.

அவரிடம் வேலைக்கு வருபவர்களும் நிரந்தரமாகத் தங்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டிருக்க மாட்டார்கள். அந்தப் பெண்மணியிடம் தற்காலிக வேலைக்கு வருபவர்களில் மாணவர்களே பெரும்பான்மை. பள்ளி விடுமுறைகளின் போது கை செலவுக்காகச் சில நாட்கள் வேலை செய்ய முன்வருவார்கள். இதில் எந்தக் குற்றமும் இல்லை.

நான் அந்தக் கடைக்குப் போகும்போது இளம் சிறுவர்களைப் பார்த்தால், “இன்று பள்ளிக்கூடத்திற்குப் போகவில்லையா?” என்று கேட்பது வழக்கம். அதுபோலவே சாப்பிட உணவகங்களுக்குப் போனால் அங்கே சில சமயங்களில், அதிலும் குறிப்பாக சனி, ஞாயிறுகளில் சீனச் சிறுவர்களும், சிறுமிகளும் வேலை செய்வார்கள். அவர்களிடம் நலன் விசாரித்து, “பள்ளிக்கூடம் போகவில்லையா?“ என்பேன். விடுமுறை என்று விளக்குவார்கள். சீனர்களின் கடையில் காணப்படும் சிறுவர்களும், சிறுமிகளும் நெடுங்காலம் தற்காலிக வேலையில் இருப்பார்கள். படிப்பு முடிந்ததும் வேறு வேலைக்குப் போய்விடுவார்கள்.

நான் மேலே குறிப்பிட்ட இந்தியப் பெண்மணியின் நிறுவனத்தில் எவரும் நெடுங்காலம் நீடிக்காததற்குக் காரணம் வேலை பாதுகாப்பு இல்லை என்று கூட சொல்லலாம். பள்ளி மாணவர்களின் வரவும் திடீரென நின்றுவிடுவதும் சர்வசாதாரணம். இதைப்பற்றி வினவியபோது, கையில் காசு வந்ததும், “ஊர் சுற்ற போய்விடுகிறார்கள்!” என்று சங்கடப்படுவார். நான் பார்த்த பல மாணவர்கள் புகைப் பிடிக்கும் பழக்கத்தில் சூரர்களாக இருந்தார்கள்.

ஒரு நாள் வாகனத்தைக் கழுவச் சென்றபோது ஓர் இளைஞனைப் பார்த்து அவரைப் பற்றி விசாரித்தேன். அவர் எஸ்.பி.எம் வரை படித்தவர். காவல்துறையில் சேர ஆர்வமாக இருந்தார்.  காற்பந்து விளையாட்டின் போது கால் எலும்பு முறிந்து நிரந்தர ஊனத்திற்கு ஆளாகிவிட்டார். அதனால் காவல்துறையில் சேரும் வாய்ப்பை இழந்து விட்டதால் விரக்தி அடைந்துவிட்டார். கல்வியில் சிறந்தவர், எனினும் படிப்பைத் தொடர நோக்கம் இல்லையாம்.

அந்த இளைஞனின் சோக கதையைக் கேட்டதும் அவர் இவ்வளவு எளிதில் விரக்தி அடைந்து வாழ்க்கையைப் பற்றித் தவறான கருத்தைக் கொள்வது சரியா என்று எண்ணிக் கொண்டிருந்தபோது என் நூல் நிலையத்தில் வேலை காலி இருந்தது. இந்த இளைஞனைச் சேர்த்துக் கொள்ளலாமே என்ற எண்ணத்தில் பேசுவதற்காக அழைத்தேன். வர மறுத்துவிட்டார். என் மனதில் உள்ளதைச் சொல்லி அவரை ஒரு நல்ல வழிக்குக் கொண்டு வரலாம் என்ற என் நோக்கம் எடுபடவில்லை.

நூல் நிலையப் பணி எளிதானது அல்ல. அதைக் கற்றுக்கொண்டால் நல்ல பயனடையலாம். அதே சமயத்தில், நூலகப் பொறுப்பாளரின் கல்வியைப் பெற பல்கலைக்கழகத்தில் இடம் உண்டு. நூலகப் பொறுப்பாளர்களுக்கு நல்ல வரவேற்பு உண்டு. இதை விளக்க முயன்று தோல்வி கண்டேன்.

நூலகப் பொறுப்பாளரைப் பற்றிப் பேசும்போது அது எப்படிப்பட்ட உயர்தர தொழில் என்பது பலருக்குத் தெரியாது. நூலகப் பொறுப்பாளர் ஒவ்வொரு நூல் எப்படிப்பட்ட பொருளை விளக்குகிறது என்பதை அறிந்திருப்பதோடு அதே பொருளைப் பற்றி எழுதியவர்களின் பட்டியலைத் தயாரித்து வைத்திருக்க வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட தலைப்புடைய நூல் வேண்டுமானால் அது எங்கே இருக்கிறது என்பதை உடனே அறிவிக்கும் திறன் கொண்டால்தான் நூலகப் பொருளாளர். சில பல்கலைக்கழகங்களில் இது ஒரு பாடமாகக் கற்றுக் கொடுக்கப்படுகிறது. எவ்வளவு உயர்கல்வி, உயர் பதவி வகித்தாலும் ஒரு நூல் எங்கே பாதுகாப்பாக வைக்கப்படுகின்றது என்பதை அறிய நூலகப் பொருளாளரின் உதவி தேவைப்படும்.

நான் லண்டனில் சட்டம் படித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் அடிக்கடி கிங் லிங்கன்ஸ் இன் நூலகத்துக்குச் சென்று படிப்பது உண்டு. லிங்கன்ஸ் இன் பதினான்காம் நூற்றாண்டில் அமைக்கப்பெற்று அதன் நூலகம் அக்காலத்திலிருந்தே இயங்கிக் கொண்டிருக்கிறது. பல்லாயிரம் நூல்களைக் கொண்ட மாபெரும் நூலகம் அது.

ஒரு நாள் மதியம் நான் நூலகத்தில் அமைதியாகப் படித்துக் கொண்டிருந்த போது சட்டம், நீதி ஆகிய துறைகளில் பெரும் மதிப்பிற்குரியவரும், புகழ்மிக்கவருமான டென்னிங் பிரபு கட்டை விரல் நுனி ஊன்றி நடந்து வந்தார். அப்போது பலர் நூலகத்தில் புத்தகத்தில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தனர்.

அவர் யாருக்கும் தொல்லை தராத வகையில் கவனமாக நடந்து வந்து, நான் அமர்ந்திருக்கும் பக்கமிருந்த அலமாரியில் அடுக்கி வைத்திருந்த புத்தகங்களைப் பார்த்துக் கொண்டு நின்றார். அப்போது நூலகப் பொறுப்பாளர் வேகமாக வந்து, “எந்தப் புத்தகத்தைத் தேடுகிறீர்கள் பிரபு?” எனக் கேட்க, டென்னிங் பிரபு ஒரு தலைப்பையும் ஆசிரியரின் பெயரையும் குறிப்பிட்டு, “அந்தப் புத்தகம் இந்த அலமாரியில்தான் இருந்தது! இப்போது காணோம்!” என மெதுவாகப் பிறர் காதில் விழாதவாறு சொன்னார்.

நூலகப் பொறுப்பாளர், “நான் தேடி கொண்டு வருவேன். நீங்கள் தங்கள் அறையில் போய் இருங்கள்” என்றார்.

டென்னிங் பிரபு எவரின் கவனத்தையும் கலைக்காத வகையில் மெதுவாக நடந்து சென்றார். இது எதைக் குறிக்கிறது? டென்னிங் பிரபு சட்ட மேதை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், ஒரு நூல் எங்கே பாதுகாப்பாக வைக்கப்படும் என்பதை நூலகப் பொறுப்பாளர்களுக்கு மட்டும்தான் தெரியும். அதுவே அவர்களின் தொழில்.

அந்தச் சம்பவத்தை நினைத்து காவல் துறையில் வேலை கிடைக்கவில்லை என்ற சினத்தில் படிப்பு வேண்டாம் என்று ஒருவர் பிடிவாதமாக இருப்பதும், நான் வலிய போய், “உனக்கு வேலை தருகிறேன். வா!” என்று அழைத்தும் அதைப் பொருட்படுத்தாதவரை நினைத்து வருந்தினேன். நம் இளைஞர்கள் எங்கே போக நினைக்கிறார்கள்? எப்படிப்பட்ட எதிர்காலத்தை விரும்புகிறார்கள்? என்பதைக் காலங்காலமாக நான் சிந்தித்துக் கொண்டிருக்கும் கேள்விகளாகும். அவர்கள் ஒரு தடுமாற்றத்தில் இருக்கிறார்கள், தவிக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை.

வாழ்க்கையில் ஏமாற்றங்கள் சகஜம். அதையே நினைத்துக் கொண்டு, வாழ்க்கையை வீணாக்குவது நியாயமான நடவடிக்கையாகக் கருத முடியாது. யாரும் அப்படிப்பட்ட போக்கைப் பாராட்ட மாட்டார்கள். இந்த உண்மையை நம் இளைஞர்கள் உணர வேண்டும். வெறுப்புணர்வை, கோப உணர்வை வளர்த்துக் கொள்ளும் கலாச்சாரத்தைக் கைவிட்டு ஒரு தொழில் கிடைக்கவில்லை எனில் வேறொரு தொழில் இருக்கும் என்பதை நம்பி வாழ வேண்டும்.

என் இளவயதில், அப்பொழுது தமிழ் சிறுகதை படைப்பாளர்களில் ஒருவரான பி.பி.காந்தம், இவர் மலேசியா தமிழ் இலக்கியப் படைப்பாளர். காலஞ்சென்ற இலக்கியப் படைப்பாளர் சந்திரகாந்தனின் அண்ணன். சிங்கப்பூர் துறைமுக காவல் துறையில் பணிபுரிந்து கொண்டிருந்தார்.

ஒரு நாள் என்னிடம் ஒரு படிவத்தைக் கொடுத்து, “இதைப் பூர்த்தி செய்து காவல் நிலையத்தில் கொடுத்து விடு. காவல் துறையில் சேர்ந்து விடு” என்றார். அவர் சொன்னபடியே செய்தேன். எழுத்துப் பரீட்சையைக் கடந்து விட்டேன். அடுத்து நேர்காணல். எல்லாம் வெள்ளைக்கார அதிகாரிகள். பல கேள்விகள் கேட்டனர். எல்லாவற்றிற்கும் சரியாகப் பதிலளித்தேன்.

இறுதியாக, “நீ ஏன் காவல் துறைக்கு வருகிறாய்?” என்ற கேள்விக்கு, “வேறு வேலை கிடைக்கவில்லை! இங்கு வந்ததேன்!” என்றதும் அதிகாரிகள் ஒருவரை ஒருவர் மாறி மாறி பார்த்து, “நீ போய் முயற்சி செய். வேலை கிடைக்கும்! என்றார்கள். காந்தனிடம் இதைச் சொன்னதும், “அடப்பாவி மனுஷா! குற்றத்தைத் தடுக்க விரும்புகிறேன் என்று சொல்லக்கூடாதா?” என்றார்.

ஒரு ஏமாற்றத்தை நினைத்துக் கொண்டும், வெறுப்புணர்வை வளர்த்துக் கொண்டும் கோபமாக வாழ்க்கையை மேற்கொள்கின்றனர் என்பதை நினைத்தால் வேதனையாக இருக்கிறது. இந்த எண்ணத்தை மாற்ற வேண்டும். ஒரு தொழில் போனால் வேறொரு தொழில் இருக்கிறது என்று துணிவோடு வாழ வேண்டும். அப்பொழுதுதான் வாழ்க்கையின் அர்த்தம் புரியும். வாழ்வு எலுமிச்சம் பழங்களைத் தந்தால் எலுமிச்சை பழச் சாறு செய்யலாமே என்பது வாய்மொழி.  சொந்த திறத்தால் வாழ முடியும் என்ற நம்பிக்கை எப்பொழுதும் நம்மிடம் இருக்க வேண்டும். அதை ஒரு போதும் கைவிடக்கூடாது.