முகைதின்: பாரிசான் வளர்த்த ஒற்றுமையை அழித்து விடாதீர்

பாரிசான் மிகச் சிரமப்பட்டு உருவாக்கிய நாட்டின் ஒற்றுமையை கீழறப்புச் செய்யும் நடவடிக்கைகளுக்கு எதிராக துணைப் பிரதமர் முகைதின் யாசின் இன்று கடும் எச்சரிக்கை விடுத்தார்.

“நாம் என்றுமே உதாசீனப்படுத்தாத அடிப்படை முயற்சிகளில் ஒன்று வலுவான ஒற்றுமைக்கான  சூழ்நிலையை உருவாக்கியதாகும்.

“கடந்த 54 ஆண்டுகளாக நாம் உருவாக்கிய இதற்கான அடித்தளம் வலுப்படுத்தபட வேண்டும்.

“பாரிசான் கோட்பாட்டின் மூலம் பல்வேறு இன மற்றும் சமய பின்னணிகளைக் கொண்ட தலைவர்களின் ஒத்துழைப்போடு நாம் உருவாக்கிய இந்த அடித்தளத்தை அழிக்க முயற்சிக்காதீர்”, என்று காஜாங்கில் இன்று பின்னேரத்தில் நடந்த தேசிய கிறிஸ்துமஸ் திறந்த இல்ல உபசரிப்பில் முகைதின் கூறினார்.

வேறுபட்ட பின்னணிகளைக் கொண்டிருந்த போதிலும் பல்வேறு கலாச்சார மற்றும் சமய பெருநாள்களை மக்கள் கொண்டாடும் ஒரே நாடு மலேசியாதான் என்று அவர் கூறினார்.

“இதுதான் நாம் காப்பாற்றி பாதுகாக்க வேண்டியது”, என்று முகைதின் மேலும் கூறினார்.