பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டதற்கு காரணம் இந்தியா – இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி புகழாரம்

கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீண்டதற்கு இந்தியாவே காரணம் என்று அந்த நாட்டு வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் கடந்த ஆண்டு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அந்நிய செலாவணி இருப்பு குறைந்து, உணவு தானியங்கள், பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. நாள்தோறும் பல மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டது. மக்களின் கொந்தளிப்பால் அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகினர். அந்தச் சூழ்நிலையில் இலங்கையில் பொதுமக்கள் பெரும் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். அதிபர் மாளிகையையும் கைப்பற்றினர்.

எனினும் பல்வேறு திருப்பங்களுக்குப் பிறகு தற்போது இலங்கை அதிபராக ரணில் விக்ரமசிங்க, பிரதமராக தினேஷ் குணவர்த்தன பதவி வகிக்கின்றனர். பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த இலங்கைக்கு, இந்தியா உதவிக் கரம் நீட்டியது. இந்தியாவில் இருந்து போதுமான அளவு உணவு தானியம், பெட் ரோல், டீசல் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்தியாவின் உதவியால் இலங்கை படிப்படியாக மீண்டெழுந்து வருகிறது.

இந்த சூழலில் டெல்லியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி பங்கேற்றார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த ஆண்டு மே, ஜூன் மாதங்களில் இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அதன்பிறகு நெருக்கடியில் இருந்து மீண்டு படிப்படியாக முன்னேறி வருகிறோம். இப்போது பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. ரூபாய் மதிப்பு ஸ்திரமாக இருக்கிறது. உணவு, எரிபொருளுக்காக நாட்டின் எந்த பகுதியிலும் மக்கள் கூட்டம் அலைமோதவில்லை. சுற்றுலா தொழில் மீண்டெழுந்து வருகிறது. இலங்கை இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. சர்வதேச செலாவணி நிதியத்தின் நிதியுதவி இந்த மாத இறுதியில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அப்போது நிலைமை மேலும் மேம்படும்.

ரூ.32 ஆயிரம் கோடி உதவி: பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீண்டதற்கு இந்தியாவே காரணம். மற்ற நாடுகள் செய்த உதவிகளைவிட இந்தியா எங்களுக்கு செய்த உதவி மிக அதிகம். 3.9 பில்லியன் டாலர் (ரூ.32 ஆயிரம் கோடி) கடனுதவியை இந்தியா எங்களுக்கு வழங்கியிருக்கிறது. இதுவே எங்களின் வாழ்வாதாரமாக இருந்தது. இந்தியாவுக்கு எப்போதும் நன்றிக் கடன்பட்டிருக்கிறோம். ரூபாய் பயன்பாடு இந்தியா, இலங்கை இடையிலான பொருளாதார பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயை பயன்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இந்தியா வளர்ச்சி அடைந்து வருகிறது. நாங்களும் இந்தியாவோடு இணைந்து முன்னேறுவோம். இவ்வாறு இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

 

 

-th