பெருங்கடல்களில் மிதக்கும் பிளாஸ்டிக் பொருள்கள் – 16 டிரில்லியனிலிருந்து 171 டிரில்லியனாக உயர்வு

உலகின் பெருங்கடல்களில் 171 டிரில்லியனுக்கும் அதிகமான பிளாஸ்டிக் பொருள்கள் மிதப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

PLOS ONE அறிவியல் சஞ்சிகையில் வெளிவந்த ஆய்வில் 2005ஆம் ஆண்டில் பெருங்கடல்களில் சுமார் 16 டிரில்லியன் பிளாஸ்டிக் பொருள்கள் இருந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டது.

அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லையென்றால் அந்த எண்ணிக்கை மேலும் 3 மடங்கு உயரக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

சென்ற வாரம் நாடுகள் இணைந்து UN High Seas ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டதாக BBC தெரிவித்தது. அதில் உலகப் பெருங்கடல்களில் 30 விழுக்காட்டைப் பாதுகாக்க நாடுகள் உறுதியெடுத்தன.

171 டிரில்லியன் பிளாஸ்டிக் பொருள்களில் அண்மையில் வீசப்பட்ட பொருள்களும் சிறிய துகள்களாக உடைக்கப்பட்ட பழைய பொருள்களும் அடங்கும் என்று ஆய்வாளர் ஒருவர் BBCஇடம் கூறினார்.

ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருள்கள் நீண்ட காலம் கழித்து சிறு பாகங்களாக உடைக்கப்படும். அதற்குக் காரணம், சூரிய ஒளியும் இயந்திரச் சிதைவுமாகும். கடல்வாழ் உயிரினங்கள் பிளாஸ்டிக் பொருள்களை உணவாய் எண்ணி அவற்றை உன்ணும்போது பிளாஸ்டிக் அவற்றின் வயிறுகளில் நிறைகின்றன. அதன் விளைவாக உணவு உண்ண முடியாமல் அவை இறக்கின்றன.

குடிநீரிலும் பிளாஸ்டிக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மனிதர்களின் உடல் பாகங்களிலும் அது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக BBC தெரிவித்தது. அது மனிதர்களின் உடல் நலத்தை எவ்வாறு பாதிக்கிறது என்ற விவரங்கள் விஞ்ஞானிகளிடம் போதிய அளவில்  இல்லை.

 

-SM