இந்தியாவில் இன்ஃப்ளூயன்சா எச்1என்1 பாதிப்பு – தமிழகம் முதலிடம்

இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் வரை இன்ஃப்ளூயன்சா எச்1என்1 பாதிப்பு அதிகம் கண்டறியப்பட்ட மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

இந்தியா முழுவதும் இன்ஃப்ளூயன்சா ஏ வகை வைரஸான எச்3என்2 தொற்று பரவத் தொடங்கியுள்ளது. சுமார் 100 பேருக்கு இந்த புதிய வைரஸ் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஏராளமானோர் காய்ச்சல் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 15 வயதுக்கு குறைவானவர்களும், 65 வயதுக்கு மேற்பட்டவர்களும் காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். நோயாளிகள், இணை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வைரஸ் பாதிப்பின் தீவிரம் அதிகமாக உள்ளது.

இதற்கிடையில், திருச்சி மலைக்கோட்டையைச் சேர்ந்த 27 வயது இளைஞர் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார். பெங்களூரில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர், நண்பர்களுடன் கோவாவிற்கு சுற்றுலா சென்றுவிட்டு குடும்பத்தினரை பார்ப்பதற்காக கடந்த 9ம் தேதி திருச்சி வந்தார். அவருக்கு 10ம் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மேலும், வாந்தி, வயிற்றுப்க்கு உள்ளிட்ட பல்வேறு உடல்நலக்கோளாறுகளும் ஏற்பட்டன.

தொடர்ந்து நான்கு நாட்கள் மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பயனளிக்காமல் அவர் உயிரிழந்தார். அவரது மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்ததில் உயிரிழந்த நபருக்கு கோவிட் மற்றும் இன்ஃப்ளூயன்சா எச்1என்1 பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இதன் மூலம் தமிழகத்தில் முதல் இன்ஃப்ளூயன்சா உயிரிழப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், நாடு முழுவதும் இன்ஃப்ளூயன்சா எச்1என்1 பாதிப்பு அதிகம் கண்டறியப்பட்ட மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. பிப்ரவரி 28ம் தேதி வரை நாடு முழுவதும் எச்1என்1 தொற்றால் 955 பேர் பாதிக்கபட்டுள்ளனர். இதில் தமிழகத்தில் 545, மகாராஷ்டிராவில் 170, குஜராத்தில் 74, கேரளாவில் 42, பஞ்சாப்பில் 28 பேருக்கு இந்த நோய் தொற்று கண்டறியபட்டுள்ளது.

-th