வாசிக்கும் பழக்கம் இல்லையெனில் சுயமறியாதையை இழந்துவிடுவோம்!

இராகவன் கருப்பையா – மனிதாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் வாசிக்கும் பழக்கம் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக அதனை நாம் அமைத்துக் கொள்ளவில்லை என்றால் சுயமறியாதையை நாம் இழந்துவிடுவோம் என்கிறார் பிரபல வழக்கறிஞரும் சமூக நல ஆர்வளருமான கீ.சீலதாஸ்.

ஒருவர் தனது வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்திற்கு வெற்றிகரமாக நகர்வதற்கு வாசிக்கும் பழக்கம் உருதுணையாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை என்றார் அவர்.

மலேசியா இன்றுவில் தொடர்ச்சியாக அரசியல், சமூக ஆய்வுக் கட்டுரைகளை படைத்துவரும் சீலதாஸ் கடந்த வார இறுதியில் ‘சிந்தனை செய் மனமே’ எனும் ஒரு நூலை ஜொகூர் குளுவாங்கில் வெளியிட்டடார். அந்நிகழ்வில் உரையாற்றிய போதே மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டார்.

மிக ஆழமாக ஆய்வு செய்து சமூகத்திற்குத் தேவையான கருத்துகளை துள்ளியமாக எடுத்துரைக்கும் நோக்கத்தில் எழுதப்பட்ட இந்நூலை வெளிக் கொணருவதற்கு 7 ஆண்டுகள் பிடித்ததாகக் கூறும் அவர் சிந்திக்கும் தன்மையையும் நாம் வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

பகுத்தறிவோடு நாம் சிந்திக்கத் தவறினால் நமக்கு மட்டுமின்றி நமது எதிர்கால சந்ததியினருக்கும் அது பாதகமாக அமைந்துவிடும் என்றார் அவர்.

“சிந்திக்கும் ஆற்றலையும் துணிவையும் ஒருபோதும் நாம் கைவிடக்கூடாது. நம் மூதாதையர் சிந்தித்தார்கள்,  அச்சிந்தனையை பிறகு நம்மிடம் பகிர்ந்தார்கள். அவ்வாறே நாமும் செய்வது அவசியமாகும்,” என்று சீலதாஸ் குறிப்பிட்டார்.

சட்டம் தொடர்பான நூல்கள் உள்பட 20கும் மேற்பட்ட நூல்களை இதுவரையில் எழுதியுள்ள அவர் நாவல் ஒன்றையும் வெளியிடத் திட்டமிட்டுள்ளார்.

எதிர்பாராத அளவுக்கு பல வகையில் நம் சிந்தனையைத் தூண்டும் ஆற்றலைக் கொண்ட மொத்தம் 133 கட்டுரைகளை உள்ளடக்டிய இந்த நூலின் 2ஆம் பாகமும் தயார் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குளுவாங் இந்திய சமூக நல மேம்பாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நூல் வெளியீட்டு விழாவில் பேராசிரியர் என்.எஸ். இராஜேந்திரன், எதிர்கட்சித் தலைவர் லிம் கிட் சியாங், குளுவாங் நாடாளுமன்ற உறுப்பினர் வொங் ஷூ கி,     தென்றல், வானம்பாடி ஆசிரியர் வித்யாசாகர், சங்கரலிங்கம் அறவாரியத்தின் தலைவர் சரவணன், சிங்கப்பூர் எழுத்தாளர் கமலா தேவி ஆகியோர் உள்பட 200கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.