இராமசாமி அரசியல் விழிப்புணர்வுக்கு வித்திட்டவர்!

இராகவன் கருப்பையா – இந்நாட்டில் நமக்கென குரல் எழுப்பி நம் சமூகத்திற்கு தேவையானவற்றை நியாயமாகப் பெற்றுத் தருவதற்கு உருப்படியான ஒரு தலைமைத்துவம் இல்லாத நிலையில் பினேங் மாநில துணை முதல்வர் இராமசாமி அந்த குறைபாட்டை ஓரளவு நிறைவு செய்து வருகிறார்.

நமக்கான அரசாங்கத்தின் அனுகூலங்கள் முறையாக வந்தடையாத நிலைகேட்டில் குறைந்த பட்சம் அது பற்றி அவர் மட்டும்தான் மாறுபட்ட வகையில் தொடர்ந்து கருத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

எனினும் அவருடைய பதவி காலத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்து அவரை முடக்குவதற்கான வேலைப்பாடுகள் தற்போது  மும்முரமாக நடைபெற்று வருவதாகத் தெரிகிறது.

மூன்று தவனைகளுக்கு பினேங் மாநிலத்தின் பிராய் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் அம்மாநிலத்தின் துணை முதல்வராகவும் இருந்து வரும் இராமசாமிக்கு எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்காது என அரசல் புரசலாக வெளியாகியுள்ள செய்தி உண்மையாகுமானால் அது வருந்தத்தக்க ஒன்று.

அதற்கு கொடுக்கப்படும் காரணங்கள் நமக்கு ஏற்புடையதாக இல்லை என்பது ஒருபுறமிருக்க எரிச்சலூட்டும் வகையிலும் உள்ளது. அவர் நீண்ட நாள் அப்பதவியில் இருந்துவிட்டதாகவும் இளையோருக்கு வழிவிட வேண்டியத் தருணம் வந்துவிட்டது என்றும் கூறப்படுகிறது.

இதுதான் கட்சியின் எழுதப்படாத விதிமுறை என்றால் அவரைவிட நீண்டநாள் மக்கள் பிரதிநிதிகளாக இருக்கும் கட்சித் தலைவர் லிம் குவான் எங், துணைத் தலைவர் கோபிந் சிங், உதவித் தலைவர் குலசேகரன், தலைமைச் செயலாளர் அந்தோனி லொக் மற்றும் புக்கிட் பிந்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஃபொங் குய் லான், செப்புத்தே தொகுதி உறுப்பினர் தெரேசா கோக்,  செராஸ் உறுப்பினர் தான் கொக் வாய் போன்ற இதர பிரதிநிதிகளை என்னவென்று சொல்வது?

இவர்கள் எல்லாம் தங்களுக்கு ஏற்றவாறு உறுதியானத் தளத்தை அமைத்துக் கொண்டு கிடைத்துள்ள பதவிகளை ‘உடும்புப் பிடியாக’ பிடித்துக் கொண்டு அரசியல் நடத்துகின்றனர்.

ஆனால் இராமசாமியின் பதவி மட்டுமே கட்சி தலைமைத்துவத்தின் கண்களை உறுத்தத் தொடங்கிவிட்டது வேடிக்கையாக உள்ளது.

பினேங் மாநிலம் மட்டுமின்றி தேசிய நிலையில் எழும் இந்தியர்கள் பிரச்சினைகளோடு அனைத்து சமூகங்களின் நலனுக்கும் போராடும் வகையில் நியாயமானக் கருத்துகளை அவர் வெளியிட்டு வருவது எல்லாருக்கும் தெரியும். வெளிப்படையாக அவர் எழுப்பும் உரிமைக் குரலுக்கு ஒருசில வேளைகளில் இனச்சாயம் பூசப்படுகிறது, சர்ச்சையாகவும் மாற்றப்படுகிறது.

அவருடைய புகழை முடக்கும் வகையில் அவரையும் ஆதரவாளர்களையும் ஒட்டு மொத்தமாக களையெடுப்பதற்கான மேகா திட்டம் ஒன்று திரைமறைவில் வரையப்பட்டு வருவதாக நம்பப்படுகிறது. இதற்கு நம் இனத்தைச் சேர்ந்த சில எட்டப்பன்களும் உடந்தையாக இருந்து செயல்படுவதாக கூறப்படுகிறது.

“அப்படியொன்றும் இல்லை,” என அந்தோனி லொக் மறுத்துள்ள போதிலும் இராமசாமிக்கு இன்னும் ஒரு தவனை வாய்ப்பு வழங்கப்படுமா இல்லையா என அவர் தெளிவாக எதனையும் குறிப்பிடவில்லை.

அரசு ஊழியர்கள் தொடர்பாக அண்மையில் இராமசாமி வெளியிட்ட ஒரு  நியாயமான கருத்து சர்ச்சையாக்கப்பட்ட போதும் கூட அவரை தற்காத்துப் பேச துணிச்சல் இல்லாமல், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று லொக் கூறியது ஒரு வாயடைப்பு நடவடிக்கையே ஒழிய வேறொன்றும் இல்லை.

கடந்த வாரத்தில் அது குறித்து மீண்டும் கருத்துரைத்த அவர், “அதனை கவனத்தில் வைத்துள்ளோம்” என்றுதான் குறிப்பிட்டாரேத் தவிர “இராமசாமி மீது நடவடிக்கை இல்லை” என்று அறிவிக்கவில்லை.

இந்தியர்கள் சார்ந்த வகையிலும் பொதுவாகவும் சமூக அரசியல் நிலைப்பாட்டை ஒரு விழிப்புணர்வை உண்டாக்கும் விவாதமாக முன்வைத்தவர் இராமசாமி.