தமிழ் ஊடகவியலாளர்களும் – நமது இந்திய அரசியல்வாதிகளும்

இராகவன் கருப்பையா – இந்நாட்டில் உள்ள இந்திய அரசியல்வாதிகள் அரசாங்கத்தில் உயர் பதவிகளில் அமர்ந்தவுடன் தமிழ் பத்திரிகையாளர்களை மதிப்பதில்லை எனும் குறை நிலவுவதாகத் தெரிகிறது.

இதற்கு ஒரு காரணம் உள்ளது. பதவியும் அதிகாரமும் அவர்களின் ஆதிக்க தன்மையை அதிகப்படுத்திவதால் அவர்களால் ஊடகங்களை தங்களின் தேவைக்கு ஏற்ற வகையில் விலை பேச இயல்கிறது.

தங்களது தேவைக்கு ஒப்பாதவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். தேர்தல் காலங்களின் போது தமிழ் ஊடகங்களுடன் அணுக்கமாக செயல்பட்டு காரியங்களை சாதித்துக் கொள்ளும் பல அரசியல்வாதிகள் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் ‘ஏறிவந்த ஏணியை எட்டி உதைப்பதைப் போல’ நடந்து கொள்கின்றனர் என குறைகளும்  கூறப்பட்டுள்ளது.

அண்மையில் நடைபெற்ற, ஜ.செ.க.வைச் சேர்ந்த சில துணை அமைச்சர்களுடனான தமிழ் ஊடகவியலாளர்களின் சந்திப்பின் போது இந்த குறைபாடு முன் வைக்கப்பட்டது.

தேர்தலில் வெற்றிபெரும் ஒரு சில சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமின்றி அதன் பிறகு அரசாங்க பதவிகளை ஏற்போரில் சிலரும் இப்படிதான் நடந்து கொள்கின்றனர்.

தமிழ் ஊடகங்களின் சக்தியை உணராமல் அவர்கள் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என மக்கள் ஓசை ஆசிரியர் பி.ஆர்.இராஜன் கடுமையாகச் சாடினார்.

தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலுரைப்பதில்லை, திரும்ப அழைக்குமாறு புலனத்தில் தகவல் அனுப்பினாலும் கண்டு கொள்வதில்லை, போன்றவை அந்த குறைபாடுகளில் சில என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய நிலை இப்போது மட்டுமின்றி கடந்த காலங்களிலும இருந்து வந்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. குறிப்பாக கடந்த 2018ஆம் ஆண்டில் பக்காத்தான் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து வரலாற்றுப்பூர்மாக 4 இந்தியர்கள் அமைச்சரவையில் இடம்பெற்ற சமயத்திலும் இதே நிலைதான். எனினும் அடுத்த 22 மாதங்களில் அவர்களுடைய பந்தா அடங்கியதை நாடறியும்.

இருப்பினும் ஒட்டு மொத்தமாக எல்லா பிரதிநிதிகளையும் அந்தப் பட்டியலில் சேர்த்துவிட முடியாது. ஏனெனில் குறிப்பிட்ட சில அரசியல்வாதிகள் எந்நேரத்திலும் எல்லாரிடமும் தொடர்பில் இருக்கின்றனர். அவர்களை அவசியம் நாம் பாராட்டத்தான் வேண்டும். அவர்களுக்கு கர்வம் தலைக்கு ஏறவில்லை என்பது நல்ல விஷயம்.

ஆனால் நடப்பு அரசாங்கத்தில் பதவி வகிக்கும் சில அரசியல்வாதிகள் தமிழ் ஊடகவியலாளர்களை உதாசினப்படுத்துகின்றனர் என்பதையும் மதிப்பதில்லை எனும் கருத்தையும் நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இந்த குறைபாட்டை எண்ணற்ற தமிழ் ஊடகவியலாளர்கள் அனுபவப்பூர்வமாக எதிர்நோக்கியுள்ளனர்.

தமிழ் பத்திரிகையாளர்களை மட்டும்தான் அவர்கள் இப்படி ஏளனமாகப் பார்க்கின்றார்களா அல்லது மற்ற இன ஊடகவியலாளர்களையும் இப்படிதான் நடத்துகின்றனரா என்று தெரியவில்லை.

எனினும் எந்த மொழியைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் இப்படி நடத்தப்படுகிறார்கள் என்பது முக்கியமில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது பதவி சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் இத்தகையோரின் போக்கு அவர்களுடைய அரசியல் வளர்ச்சிக்கு எவ்வகைறிலும் உதவாது என்பதை அவர்கள் உணரவேண்டும்.

ஊடகவியலாளர்களிடமே இப்படி நடந்து கொள்ளும் அவர்கள் உதவி நாடி வரும் பொது மக்களை எப்படி நடத்துவார்கள் எனும் ஐயப்பாடு இருக்கத்தான் செய்கிறது.

அடுத்த 5 ஆண்டுகளில் அவர்களுடைய பதவி தவணை முடியும் போது பொது மக்களையும் பத்திரிகையாளர்களையும் சந்திப்பதற்கு மீண்டும் கீழே இறங்கி வரத்தானே வேண்டும் எனும் நிதர்சனத்தை அவர்கள் மறந்துவிடக்கூடாது.

அப்போது அவர்களை எப்படி நடத்துவது என்பதை பொது மக்களும் ஊடகவியலாளர்களும்தான் முடிவு செய்வார்கள்!