பிரம்படிக்கு உட்பட்ட பெண்கள் – அரசியலமைப்புக்கு முரண்பாடானது

 கி.சீலதாஸ் – 2018-இல்  இரு முஸ்லிம் பெண்கள் ஓரினக் காதலில் ஈடுபட்டார்கள் எனத் திரங்கானு ஷரியா உயர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர். அவ்விரு பெண்மணிகளும் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். அவர்களுக்குத் தலா மூவாயிரத்து முன்னூறு ரிங்கிட் அபராதமும் தலா ஆறு பிரம்படியும் தண்டனையாக ஷரியா நீதிமன்றம் விதித்தது.

பிரம்படி தண்டனையை நீதிமன்ற வளாகத்திலேயே சுமார் நூறு பொது மக்களின் முன்னிலையில் நிறைவேற்றப்பட்டது. இந்தப் பெண்கள் மீது சுமத்தப்பட்ட குற்றம் திரங்கானு இஸ்லாமியச் சட்டத்துக்கு உட்பட்டதாகும். இங்கே ஒரு சட்டப் பிரச்சினை எழுந்துள்ளது என்பதைக் கவனிக்கும் முன் இந்தப் பிரம்படி நிறைவேற்றம் பல சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளதையும் கவனிக்க வேண்டும்.

இதைப் பற்றிப் பிரதமர் அன்வர் இபுராஹீம் குறிப்பிடும்போது பிரம்படி குறித்த முறையான விதிகள் பின்பற்றப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளதோடு இதைச் சில தரப்பினர் அரசியலாக்கிவிடும் சாத்தியம் உண்டு என்பதால் இந்தப் பிரச்சினையைக் கவனத்துடன் அணுக வேண்டும் என்றார்.

ஆனால், முஸ்லிம் பெண்களைப் பிரம்படிக்கு உட்படுத்தலாமா என்ற கேள்வியைத் தவிர்த்துவிட்டார். இதைக் கவனித்த சிலர் பிரதமரின் பதில் அல்லது விளக்கம் அரசியல் சாயல் இருப்பதைக் காணலாம் என்கின்றனர். இந்தப் பிரச்சினையை அரசியலாக்கி லாபம் காண முற்படுவோரின் முயற்சிகளைப் பற்றிப் பிரதமர் கவலைப்படுகிறார் எனின் அது தவறான கருத்தாகாது.

பிரம்படி தண்டனையை நிர்வகிக்கும்போது விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. நடப்பில் இருக்கும் குற்றவியல் நடைமுறை தொகுப்பின் 289ஆம் பிரிவு பெண்களுக்குப் பிரம்படி வழங்கக்கூடாது என்கிறது.

குற்றவியல் சட்டம் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டதாகும். அதுவே பிரதான சட்டம். அது எல்லா பெண்களையும் இன, சமயப் பேதங்களைப் பாதுகாக்குகிறது.

ஷரியா சட்டம் மாநிலங்களைப் பொறுத்தது. ஆனால், மாநில சட்ட அவை எப்படிப்பட்ட சட்டங்களை இயற்றும் அதிகாரத்தைப் பெற்றிருக்கிறது என்பதை அரசமைப்புச் சட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள மாநில அதிகாரப் பட்டியல் விளக்குகிறது.

குற்றவியல் எனும்போது அதைக் குறித்த சட்டங்களை இயற்றும் அதிகாரத்தை நாடாளுமன்றம் மட்டும்தான் கொண்டிருக்கிறது. இதைக் கவனத்தில் கொண்டு பார்க்கும்போது அரசமைப்புச் சட்டத்தின் நான்காம் பிரிவின்படி மாநிலச் சட்டம் கூட்டரசு சட்டத்துக்கு முரணாக இருக்கும் பட்சத்தில் கூட்டரசு சட்டம்தான் பின்பற்றப்பட வேண்டும் என்ற நிலை உறுதியாக உள்ளது.

எனவே, குற்றவியல் சட்ட அமலாக்கம் நாடாளுமன்றத்தைப் பொறுத்தது என்பதோடு பெண்களுக்குப் பிரம்படி வழங்கும் தண்டனை அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானது என்ற பிரச்சினை எழுந்துள்ளதைக் கவனிக்க வேண்டும். முஸ்லிம் பெண்களைத்தான் இந்தச் சட்டம் குறிவைக்கிறது என்ற கருத்து ஏற்புடையது அல்ல.

பொதுவாகவே உடலுறவு குறித்த குற்றங்களைத் தண்டனை சட்டம் விளக்குகிறது. அதற்கான தண்டனையையும் குறிப்பிடுகிறது. எனவே, ஓரினக் காதலில் ஈடுபட்டவர்களுக்குத் தண்டனை வழங்கும் அதிகாரத்தை திரங்கானு மாநில சட்டமன்றம் கொண்டிருக்கவில்லை என்ற வாதமும் நியாயமானதே.

அதுபோலவே மாநில சட்டமன்றம் இப்படிப்பட்ட சட்டத்தை இயற்றி அமலாக்குவது அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானதாகும். சட்டத்தின் நிலை அதுவே என்றால் மிகையாகாது. எனவே, திரங்கானு ஷரியா நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்கள் தவறாகத் தண்டிக்கப்பட்டார்கள் என்பதிலும் நியாயம் உண்டு.

இதுபோன்ற தவறான முறையில் மக்கள் தண்டிக்கப்படுவதைத் தவிர்க்க வேண்டும். அரசியல் நெருக்கடியைத் தவிர்க்கும் பொருட்டு இந்தத் தவறான அணுகுமுறையைப் பார்த்தும் பார்க்காமல் இருந்தால் காலப்போக்கில் தவறுகளுக்குத் தான் மதிப்பளிக்கப்படும் நாடாக நாம் காணப்படுவோம்.

நாம் இருபத்தொன்றாம் நூற்றாண்டில் இருக்கிறோமே அல்லாது அதில் வாழாமல் பல நூற்றாண்டுகளுக்கு முன் வகுக்கப்பட்டதும் இக்காலத்திற்குப் பொருந்தாத நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். மனித உரிமைகளுக்காகப் போராடும் இயக்கங்கள் நீதியைக் கோருகின்றன. இங்கே பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட பிரம்படி தண்டனையைக் கண்டிக்கின்றனர்.

பிரதமர் அன்வர் இபுராஹீம் சீர்த்திருத்தத்தின் பிரதிநிதி என்று போற்றப்படுகிறார். எனவே, இந்தப் பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட பிரம்படி தண்டனை அரசியலாக்கப்படும் என்ற காரணத்தை வைத்து அநீதி களையத் தவறுவது அரசியல் சாணக்கியமாக இருக்கலாம்.

ஆனால், அது சமுதாய நீதியாக ஏற்றுக்கொள்ள முடியாது. அதிலும், சீர்த்திருத்தம் பேசுவோர் அதன் அமலாக்கத்தில் கரிசனம் கொண்டிருக்க வேண்டும்.

மலேசியர்கள் புதுமையை நாடுகின்றனர் என்பதை விட கொடுமையான, மக்களை நிந்திக்கும், அவமதிக்கும் யாதொரு நடவடிக்கையும் ஏற்றுக்கொள்ளாதவர்கள் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்.

அரசியல் அதிகாரம் இன்று இருக்கும்; நாளை போகும். ஆனால், நல்ல வாழ்வு முறைக்கு மதிப்பளிக்காமல், வழிவகுக்காமல் இருந்துவிட்டால் அதிகாரத்தில் இருக்கும்போது அந்த நல்ல செயல்களைச் செய்யாவிட்டால் சாதாரண சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளின் வரிசையில் சேர்க்கப்படும் நிலை ஏற்படலாம். அதைத் தவிர்க்க வேண்டும்.

மக்களை நல்வழியில் இட்டுச் செல்லும் சட்டங்கள், திட்டங்கள் அமல்படுத்தப்பட்டால் மக்கள் உங்கள் பக்கம் தான் நிற்பர். தயங்காது எதற்கும் அஞ்சாமல் எடுத்த காரியத்தை முடிக்க வேண்டும். அந்த வாய்ப்பு இப்பொழுது பிரதமர் அன்வருக்கு உண்டு; அதை நழுவவிடக்கூடாது.