நாம்மிடையே இருக்கும் ‘சண்டை’ குணம் மாறுமா?

இராகவன் கருப்பையா – கடந்த சுமார் ஒரு மாத காலமாக நாடலாவிய நிலையில் சமூக வலைத்தளங்களில் மிக அதிகமாகப் பகிரப்பட்டு வரும் ஒரு விஷயம் ‘அக்கா நாசி லெமாக் கடை’. புலனக் குழுக்கள், முகநூல், வலையொளி, படவரி, கீச்சகம் மற்றும் தொலைவரி போன்ற பல்வேறு வலைத்தளங்களில் புகழின் உச்சத்திற்கே சென்றுள்ளது அந்த உணவுக்கடை.

நம் சமூகத்தினர் மட்டுமின்றி மற்ற இனத்தவரிடையேயும் அதிக அளவில் பகிரப்பட்டு வரும் அக்கடை குறித்த தகவல்களை எண்ணற்ற ஊடகங்களும் கூட தொடர்ந்து வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தலைநகர் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கிலிருந்து ஏறத்தாழ 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தாமான் புஞ்சாக் ஜாலிலில் 32 வயது சங்கீதா தமது கடுமையான உழைப்பினால் தோற்றுவித்த அந்த அங்காடிக் கடை தற்போது சிங்கப்பூர் வரையிலும் கூட உள்ள வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளதாக கூறப்படுகிறது.

அவருடைய ‘நாசி லெமாக்’ உணவை வாங்கி சுவைப்பதற்கு வரிசை பிடித்து நிற்கும் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் சில வேளைகளில் 6 மணி நேரம் வரையில் கூட காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுவது உண்மைதான்.

சங்கீதா ஒவ்வொரு நாளும் காலை 6 மணிக்கு கடையைத் திறக்கிறார். ஆனால் முதல் நாள் நல்லிரவு 12 மணிக்கே வாடிக்கையாளர்கள் வரிசை பிடிக்கத் தொடங்கிவிடுகின்றனர். வார இறுதி நாள்களில், மலாய்க்காரர்கள், சீனர்கள் உள்பட 900 பேர் வரையிலும் கூட வரிசையில் நிற்கின்றனர்.

எல்லாருக்கும் ‘நாசி லெமாக்’ கிடைப்பதை உறுதி செய்வதற்கு ‘டோக்கன்'(token) எனப்படும் குறி அடையாளத்தையும் அண்மையில் அவர் அறிமுகம் செய்துள்ளார். அதாவது ஒவ்வொரு வாடிக்கையாளரும் கூடிய பட்சம் 5 பொட்டலங்களை மட்டுமே வாங்க முடியும்.

கிட்டதட்ட 10 ஆண்டுகளாக அத்தொழிலை செய்து வரும் அவர் இப்போது புகழின் உச்சத்தை எட்டியுள்ளது நமக்கெல்லாம் பெருமை தரும் ஒரு விஷயம்தான். இத்துறையில் மென்மேலும் வளர்ச்சியடைந்து அடுத்தக் கட்டத்திற்கு அவர் நகர வேண்டும் என்று வாழ்த்துவதில் தவறே இல்லை.

ஆனால் எல்லாருடைய எண்ணங்களும் அப்படி இருப்பதில்லை என்பது மிகவும் வருத்தமான ஒன்று. சங்கீதாவின் தொழிலுக்கு பாதகம் ஏற்படும் வகையில் நம் இனத்தைச் சேர்ந்த பொறுப்பற்ற சிலர் அந்த இடத்தில் சண்டை சச்சரவுகளில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர்.

நம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தொழிலில் முன்னேறும் போது அவருக்கு ஆதரவு கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை,  உபத்திரவமாக இருக்கக் கூடாது. கீழ்த்தரமான எண்ணங்களை வளர்த்துக் கொண்டு அவருடைய முன்றேத்திற்கு தடங்களாக இருப்பது முட்டாள்தனமான ஒரு செயல் என்று சொல்வதில் தவறே இல்லை.

இந்த அளவுக்கு ஊடகங்களின் கவனத்தையும் வாடிக்கையாளர்களையும் ஈர்த்துள்ள சங்கீதா, அதற்குக் காரணமான உணவு வகைகளை தயார் செய்வதற்கு திரைக்குப் பின்னால் எவ்வாறெல்லாம் பாடுபட வேண்டியுள்ளது என்பதை சற்று நினைத்துப் பார்க்க வேண்டும், உழைப்பை பாராட்டவும் வேண்டும்.

அதனை விடுத்து பொறாமை குணத்திற்கு இடமளித்து ஒட்டு மொத்த சமூகத்திற்கும் இழுக்கு ஏற்படும் வகையில் கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடக்கூடாது.

கடந்த 2 வாரங்களில் குறைந்தது 3 தடவை அவ்விடத்தில் நம் இனத்தவரிடையே சண்டை முண்டுள்ளது மிகவும் கேவலமான ஒன்றாகும். சங்கீதாவின் ஆற்றலை போற்றி புகழ்ந்து செய்திகள் வெளியிட்ட ஊடகங்கள் இப்போது அங்கு நிகழும் சண்டைகளை பிரசுரம் செய்வது நம் இனத்திற்கு அவமானத்தைதான் ஏற்படுத்துகிறது.

பிற இனத்தவர் எள்ளி நகையாடும் வகையில் நிகழ்ந்துள்ள   இச்சம்பவங்களை நினைத்துப் பார்த்தால் ‘நண்டுக் கதை’ நம் சமூகத்திற்கு உண்மையிலேயே பொருந்துமோ என்று கூட நினைக்கத் தோன்றுகிறது.

‘இந்தியர்கள் ஒன்று கூடும் இடங்களில் எல்லாம் நிச்சயம் சண்டை ஏற்படும்’ எனும் அவப்பெயரை ஏற்கெனவே நம் சமூகம் சுமந்து நிற்கிறது. சங்கீதாவின் கடையில் ஏற்படும் இடையூறுகள் இதனை உறுதிப்படுத்துவதாகத்தான் உள்ளன.

அந்த வளாகத்தில் குறைந்தது 50 மலாய்க்காரர்கள் இதுபோன்றக் கடைகளை நீண்ட நாள்களாக நடத்தி வருகின்றனர். ஆனால் ஒரு நாள் கூட அங்கெல்லாம் சண்டை நிகழ்ந்ததாகத் தெரியவில்லை.

ஆனால் சங்கீதாவின் தொழிலை கீழறுப்பு செய்யும் வகையில் அங்கு வந்து சண்டையிட்ட அறிவிலிகள் நம் காதுகளில் ஊசி குத்துவதைப் போலான கொச்சை வார்த்தைகளை பயன்படுத்தியது மிகவும் கேவலமான ஒரு செயல்.

இது போன்ற அவலங்களிலிருந்து நம் சமூகம் விடுபடும் காலம் எப்போதுதான் வரும் எனும் ஏக்கம் நம் மனங்களை வருடிக் கொண்டே இருக்கிறது.

இது ஒரு வறுமை பண்பாட்டின் பிரதிபலிப்பா? அல்லது நம்மிடையே ஊறிப்போன ஒரு நடைமுறையா? எப்படியானாலும் நம்மிடையே தகுந்த மாற்றம் உருவாக ஆர்வம் கொண்ட அனைத்து தரப்பினரும் தகுந்த வழிமுறைகள் என்ன பற்றி சிந்திக்கவும் அவை சார்ந்து செயல் படவும் வேண்டும்.