கர்பால்: ராமசாமி விவகாரம் மீது டிஏபி-யே முடிவெடுக்கட்டும்

டிஏபி துணைத் தலைமைச் செயலாளர் பி.ராமசாமியுடன் பொதுவில் வாய்ச்சண்டையில் ஈடுபட்ட கட்சி தேசியத் தலைவர் கர்பால் சிங், அந்நெருக்கடிக்குக் கட்சிக்குள் தீர்வு காண்பதையே விரும்புவதாகக் கூறுகிறார்.

“கட்சிக்குள்ளேயே இதற்குத் தீர்வு காண்போம்”, என்ற அவர், உயர்ந்த பதவியில் இருந்தாலும் கட்சியின் உத்தரவை மீறிப் பேசினால் கடும் நடவடிக்கையிலிருந்து தப்ப முடியாது என்றார்.

நேற்று செய்தியாளர் கூட்டமொன்றில் கர்பால் இதனைத் தெரிவித்தார்.

டிஏபி கட்சி மாநாட்டுக்கு முன்னதாக, ராமசாமி கர்பாலை(வலம்) “ஞானாசிரியர்” என்று குத்தலாகக் குறிப்பிட இருவருக்குமிடையில் வாக்குவாதம் முற்றியது.பதிலுக்கு கர்பால் ராமசாமியை “வார்லார்ட்” என்று வருணித்தார். தமிழ்  நாளேடான மக்கள் ஓசை தவறாக ஒரு செய்தியை வெளியிட்டதுதான் இம்மோதலுக்குக் காரணம்.

முடிவில் மூவர் கொண்ட குழு ஒன்று தலையிட்டு அதை முடித்து வைத்தது.

மீண்டும் ஒரு  புகைச்சல்

ஒரு வாரம் கழித்து, த ஸ்டார் நாளேடு ராமசாமி தம்மை மாநில அரசிலிருந்து அகற்ற சதி நடப்பதாகக் கூறினார் என்று செய்தி வெளியிடப்போக மீண்டும் புகைச்சல் ஏற்பட்டது.

இச்செய்தி வெளியானதும் கர்பால் கொதித்துப் போய், கட்சியைப் பற்றியோ தலைவர்களைத் தாக்கியோ பொதுவில் பேசக்கூடாது என்ற டிஏபி மத்திய செயல்குழு(சிஇசி) உத்தரவை ராமசாமி மீறிவிட்டார் என்றும் அதனால் அவர் பினாங்கு துணை முதல்வர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ராமசாமி(இடம்) தாம் அவ்வாறு கூறவில்லை என்று மறுத்தார்.தாம் சொன்னதைச் செய்திதாள்  திரித்துக் கூறிவிட்டதாகக் கூறினார். 

இதன் தொடர்பில் அவர், நேற்று அச்செய்தித்தாளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்டு ஏழு நாள்களுக்குள் த ஸ்டார் மன்னிப்பு கேட்டு திருத்தம் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன் பிறகாவது ராமசாமி பதவிவிலக வேண்டும் என்று கூறியதைத் திரும்பப் பெற்றுக்கொள்வாரா என்று கர்பாலிடம் வினவியதற்கு, தாமும்கூட “கட்சியின் வாய்ப்பூட்டு உத்தரவை மீறக்கூடாது” என்று கூறிக் கேள்விக்குப் பதில் சொல்லாமல் நழுவினார்.