நீதிபதிகளும் செயற்கை நுண்ணறிவும்

கி. சீலதாஸ்- விஞ்ஞானத்தின் வியக்கத்தக்க முன்னேற்றம் பல துறைகளில் மனிதர்களின் சேவைகளை தேவையற்றதாகிவிட்டது. அப்படியே அவர்களின் சேவை தவிர்க்க முடியாதது எனினும் அவர்களின் முடிவு சர்ச்சைக்குரியதாகலாம்.

அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் விஞ்ஞானத்தின் துணை தேவைப்படும் அளவுக்கு நிலை மாறிவிட்டது. அதாவது மனிதர்கள் எடுத்த முடிவு சரிதானா என்பதை மறு உறுதி செய்யும் பொறுப்பை விஞ்ஞானம் ஏற்றுக்கொண்டுவிட்டது.

உதாரணத்திற்கு முன்பெல்லாம் விளையாட்டுத் துறைகளில் நடுவர்களின் தீர்ப்பே முடிவானது என்றிருந்தது. குறிப்பாக, ரக்பி, பூப்பந்தாட்டம், டென்னிஸ், காற்பந்தாட்டம், ஹாக்கி ஆகிய விளையாட்டுகளில் நடுவர்களின் முடிவுதான் இறுதி. விளையாட்டாளர்கள் எதிர்த்தாலும் யாதொரு பலனும் கிடைக்காது.

விஞ்ஞானம் பெருத்த மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது. எடுத்துக்காட்டு வேண்டுமானால் 1966ஆம் ஆண்டு நடந்த உலகக் கிண்ண இறுதி காற்பந்தாட்டத்தை எடுத்துக்கொள்ளலாம். இங்கிலாந்தும் மேற்கு ஜெர்மனியும் இறுதி ஆட்டத்தின் பொழுது இங்கிலாந்தின் வீரர் ஜியேவ் ஹரிஸ்ட் அடித்த பந்து ஜெர்மனியின் வலைக்குள் புகுந்ததா என்பதாகும்.

அன்றைய நடுவர்களின் தீர்ப்பு இன்றளவும் சர்ச்சைக்குரியதாக இருக்கிறது. இன்றைய விஞ்ஞானத்தின் துணை இருந்திருக்குமானால் இங்கிலாந்துக்கு அது சாதகமான முடிவாக இருந்திருக்கும். அது இல்லாததால் முடிவு வேறுவிதமாக அமைந்தது. ஆனால், இறுதியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

இந்தக் காலகட்டத்தில் பல விளையாட்டுகளில் மனித நடுவர்கள் இருந்தபோதிலும் மின்னனு சாதனங்களின் துணை தவிர்க்க முடியாததாக மாறிவிட்டது. டென்னிஸ், பூப்பந்தாட்டம், ஹாக்கி, காற்பந்தாட்டம் ஆகியன மின்னனு சாதனங்களைக் கொண்டு நடுவரின் தீர்ப்பு சரிதானா என்பதை உறுதிப்படுத்தும் தகுதியைப் பெற்றுள்ளன. எனவே, முன்பு போல் நடுவர்களின் தவறான முடிவை உடனடியாகவே திருத்த வாய்ப்பு உண்டு.

மனித நடுவர்களின் முடிவுகள் சர்ச்சைக்குரியதாக இருந்ததால் இந்த மின்னனு சாதனங்களின் துணை தேவைப்படுகிறது. மனிதனின் தவறான முடிவை உடனடியாகவே தெளிவுபடுத்தி உண்மையை உறுதிப்படுத்துகிறது என்று சொல்லப்படுகிறது.

இப்படிப்பட்ட முன்னேற்றம் மற்ற துறைகளிலும் குறிப்பாக, அறிவைப் பயன்படுத்தும் பணிகளிலும் புகுந்துவிட்டது. இது செயற்கை நுண்ணறிவு என்றழைக்கப்படுகிறது. இது கணினி அறிவியலின் மேம்பட்ட வளர்ச்சியைக் காட்டுகிறது. இது நுட்பமான கருவிகளைக் கொண்டு மனிதர்களைப் போல் செயல்படும் நுட்பமான முறையாகும்.

செயற்கை நுண்ணறிவு பலவிதமான வினாக்களுக்குப் பதில் நல்கும் ஆற்றலைக் கொண்டிருக்கிறது. இந்தச் செயற்கை நுண்ணறிவு கருவி மனதினால் புகுத்தப்பட்ட செய்திகளைத்தான் விடைகளாக நல்கும். எனவே, அந்தக் கருவி சுயமாகச் சிந்தித்து விடை நல்க முடியுமா என்பதே கேள்வி.

அதே சமயத்தில், விளையாட்டுத் துறைகளில் கையாளப்படும் முறை மின்னனு சாதனங்களில் பொருத்தப்பட்ட புகைப்படக் கருவிகளாகும். பதிவுபெற்ற நிகழ்வுகளை உறுதிப்படுத்துவதோடு அதன் பணி முடிந்துவிடும்.

செயற்கை நுண்ணறிவு வித்தியாசமானது என்பதைக் கவனத்தில் கொண்டிருப்பது நல்லது. ஏனெனில் சில பணிகளில் மனிதனின் மனப்பூர்வமான முடிவு தவிர்க்க முடியாததாகும். இதை விரிவாகச் சொல்ல வேண்டுமானால் நீதிபதிகளை எடுத்துக்கொள்ளலாம்.

நீதிபதிகள் வழக்கை விசாரிக்கும்போது அவர்களிடம் வழங்கப்பட்ட சாட்சியங்களை, ஆவணங்களைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். வழக்குரைஞர்களின் வாதத் தொகுப்புகளை உன்னிப்பாக ஆய்ந்துப் பார்த்து, பல முன்மாதிரிகளை அலசிப் பார்த்து தீர்ப்பு வழங்க வேண்டும்.

இதுவே இன்று வரை கடைப்பிடிக்கப்பட்டு வரும் முறை. ஆனால், இந்தச் செயற்கை நுண்ணறிவின் அறிமுகமானது பல நாடுகளில் அதன் செல்வாக்கு மிகுந்து காணப்படுவதாகச் சொல்லப்படுகிறது. அதாவது, நீதிபதி தமது தீர்ப்பை வழங்கியப் பிறகு தாம் செய்தது சரிதானா என்பதை அறியும் பொருட்டு செயற்கை நுண்ணறிவு கருவியின் துணையை நாடுவது முறையா என்ற கேள்வி எழும்பியுள்ளது.

ஒரு வழக்கில் நீதிபதி தமது தீர்ப்பை வழங்கியப் பிறகு அதை மாற்றும் அதிகாரத்தைப் பெற்றிருக்கவில்லை. அதை மாற்றும் அல்லது உறுதிப்படுத்தும் அதிகாரத்தை மேல்முறையீட்டு நீதிமன்றம் மட்டும் தான் பெற்றிருக்கிறது.

இதுவரையில் வந்த செய்திகள் யாவும் தீர்ப்பளித்தப் பிறகு நீதிபதிகள் செயற்கை நுண்ணறிவு துணையை நாடியதாகச் சொல்லப்படுகிறது. அது தவறு என்று சொல்ல முடியாது தான். ஆனால், தமது தீர்ப்பை வழங்குவதற்கு முன் அந்தத் துணையைப் பெறுவது நியாயமாகுமோ என்ற கேள்வி எழுந்துள்ளதையும் கவனிக்க வேண்டும்.

நீதிபதிகள் தங்களின் சொந்த முயற்சியில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை அலசிப் பார்த்து முடிவெடுக்க வேண்டும். அவர்களுக்குச் சந்தேகம் எழுமானால் அவர்கள் முன்னே வாதாடும் வழக்குரைஞர்களின் கருத்தைக் கோரலாம். போதாது என்றால் நீதிமன்ற நண்பர்கள் எனக் கருதப்படும் அனுபவம் வாய்ந்த வழக்குரைஞர்களின் துணையை நாடலாம்.

இவையாவும் ஏற்புடையவையே. ஆனால், செயற்கை நுண்ணறிவின் மீது நம்பிக்கை வைப்பது, அதன் துணையை நாடுவது நீதிபதிகளின் அந்தஸ்த்துக்குப் பொருத்தமானதாகாது.

சில நீதிபதிகள் தங்களின் தீர்ப்பை வழங்கும் போது இரு தரப்பு வழக்குரைஞர்களின் எழுத்து வழியான வாதத் தொகுப்பைப் படித்துவிட்டு ஒன்றிலிருக்கும் கருத்துக்களை ஏற்றுக்கொள்வது இயல்பு. இதில் குற்றம் காண முடியாது. ஆனால், ஒரு சிலர் வழக்குரைஞரின் எழுத்து வடிவ வாதத்தை முழுவதும் தனதாக்கிக் கொண்டு அதையே தமது தீர்ப்பாக அறிவிக்கும்போது சங்கடம் ஏற்படலாம். இதைக் கருத்து திருட்டு என்று வர்ணிக்கப்படுவதும் உண்டு.

என்னுடைய சொந்த அனுபவத்தில் நான் சமர்ப்பித்த வாதத் தொகுப்பை முழுமையாக ஏற்றுக்கொண்ட நீதிபதி எனக்கு எதிராகவே தீர்ப்பு வழங்கினார். இது போல் பல முறை.

ஆகமொத்தத்தில், நீதிபதிகள் தங்களின் சொந்த முயற்சியால் தீர்ப்பை வழங்க வேண்டும். மேலே சொன்னது போல் அவர் முன் வாதிடும் வழக்குரைஞர்களின் கருத்துகளுக்கு, வியாக்கியானங்களுக்கு மதிப்பளிக்க வேண்டுமே அன்றி அதற்கு அப்பால் செல்வது கடமையைச் சரிவர செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு இடமளிக்கும்.

அமெரிக்காவில் சில நீதிபதிகள் தீர்ப்பு வழங்குவதில் ஏற்படும் சங்கடத்தில் இருந்து தப்பிக்கும் பொருட்டு நாணயத்தைச் சுண்டிவிட்டு, அதன்படி வழங்கப்படும் தீர்ப்பைக் கடுமையாகக் கண்டிக்கப்பட்டிருக்கிறது. இது ஸ்பெயின் நாட்டு இலக்கியப் படைப்பாளரின் நாவலில் [டான் குயிக்சோட் (Don Quixote)] தம் நீதிபதி நாணயத்தைச் சுண்டிவிட்டு அதன்படி தீர்ப்பு வழங்கியதாக அமைந்திருந்தது. இப்படிப்பட்ட செயல்கள் நீதியை அவமதிப்பதாகும்.

இன்று தகவல் சாதனங்கள் வழியாகப் பல செய்திகளைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்புகளுக்குக் குறைவில்லை. அவற்றைப் பயன்படுத்தி நல்ல தீர்ப்பு வழங்க வேண்டுமே அல்லாது தீர்ப்பை வழங்கும் பொறுப்பைப் பிறரிடம் ஒப்படைக்கக்கூடாது.