இழப்புக்களையும் வலிகளையும் நேரடியாக சுமந்தவர்கள் நாங்கள்: முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

நாங்கள் இழப்புக்களையும் வலிகளையும் நேரடியாக சுமந்தவர்கள் எங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு நாளாகவே இந்த மே 18 அமைந்துள்ளது என முள்ளிவாய்க்கால் மண்ணில் வாழும் பலர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

யாரும் அரசியலுக்காக முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை செய்து போகலாம் ஆனால் எங்களது உணர்வுகள் வேறு, புகழுக்கும் பெயருக்கும் நாங்கள் செய்யவில்லை. அந்த மக்கள் பயன்படுத்திய பொருட்கள், பாத்திரங்கள் உயிர் காத்துக் கொள்வதற்காக அன்றைய நாட்களில் அமைத்த பதுங்கு குழிகள் இன்றும் பதினான்கு ஆண்டுகள் கடந்தும் அந்த அவலத்தின் அடையாளங்களாக காணப்படுகின்றன.

அவலத்தின் அடையாளங்கள்

14 ஆண்டுகள் கடந்தும் இந்த போரின் தாண்டவம் அங்கே தடயங்களாகவே காணப்படுகின்றன. இறுதியுத்தம் நடந்தேறி 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வில் எந்த விதமான முன்னேற்றங்களும் இல்லை.

போர் நடந்த அந்த நாட்களில் இரவு பகல் என்றில்லை துப்பாக்கி ரவைகள், எறிகணைகள், விமானத்தாக்குதல் என்பவற்றால் சல்லடை போட்டு பல இலட்சக்கணக்கான மக்கள் கொண்றொழிக்கப்பட்ட சரித்திர பூமியில் காயங்களோடும் இழப்புகளோடும் இன்று நடைபிணங்களாக வாழ்ந்து வரும் அந்த மக்களின் உள்ளத்து உணர்வுகள் இன்றும் எங்களை புல்லரிக்க செய்கின்றன.

மறக்க முடியாத நிகழ்வு

எங்களுக்கு நடந்த கொடுமைகள் போன்று இனி இந்த உலகத்தில் எந்த இனத்திற்கும் நடக்கக்கூடாது. இதைத்தான் நாங்கள் கேட்டு மன்றாடுகிறோம்.

30 வருடங்களாக எங்களை பாதுகாத்து வந்தவர் பிரபாகரன் இப்போது இருக்கின்ற களவுகளோ, சமூக சீர்கேடுகளோ எதுவும் அப்போது இருந்ததாக இல்லை. ஆனால் இப்போது அவையெல்லாம் தலைவிதித்து தாண்டவம் ஆடுகின்றது.

மே-18 என்பது எங்களால் ஒருபோதும் மறக்க முடியாது. அந்த நாட்கள் மிகவும் கொடுமையான நாட்கள் பசி, பட்டினி, துன்பம், இறப்பு மற்றும் காயம் என துன்ப துயரங்களோடு நாங்கள் கடந்து சென்ற அந்த நாள் தான் மே-18.

பலர் இதை மறந்தாலும் இழப்புகளோடும், வலிகளோடும் இந்த மண்ணிலே இருந்து சென்ற எங்களால் ஒருபோதும் மறக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.

 

 

-tw