முடிவிற்கு வரும் அரசியல் பயணம் -தங்கத்துடன் கைதான நாடாளுமன்ற உறுப்பினர்

தனது அரசியல் வாழ்க்கை இத்துடன் நிறைவுக்கு வருவதாக புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தெரிவித்தார்.

ஊடகமொன்றுக்கு அளித்த விசேட நேர்காணலில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மோசடிக் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை

தான் எவ்வித மோசடிக் குற்றச் செயல்களிலும் ஈடுபடவில்லை என்றும், நேற்று முன்தினம் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் சமூக மத்தியில் அதிகளவுக்கு பேசுபொருளாக தான் மாறியதாகவும் இத்துடன் தனது அரசியல் பயணம் முடிவுக்கு வரும் எனவும் தெரிவித்தார்.

எனினும், புத்தளம் பெரிய பள்ளிவாசல், சிவில் அமைப்புக்கள் மற்றும் புத்தளம் மக்கள் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் தான் மீண்டும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் என்றும், அது தவிர புத்தளம் மாவட்டத்தில் எவர் தேர்தலுக்கு முன்னின்றாலும் தான் அதற்கு ஆதரவாக இருப்பதாவும் தெரிவித்தார்.

மூன்றரை கிலோ தங்கம் மற்றும் – கையடக்க தொலைபேசி

இவர் வெளிநாட்டிலிருந்து இலங்கை திரும்பியபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து மூன்றரை கிலோ தங்கம் மற்றும் ஒரு தொகை கையடக்க தொலைபேசிகளுடன் சுங்க அதிகாரிகளால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

-ib