“சையட் ஹமிட், 24 மணி நேரத்தில் சுவாவை ஹீரோவிலிருந்து ஜீரோவாக்கி விட்டார்”

கிள்ளான் பள்ளத்தாக்கு எம்ஆர்டி திட்டத்துக்காக ஜாலான் சுல்தானைச் சுற்றிலும் உள்ள நிலம் கையகப்படுத்தப்படும் என ஸ்பாட் என்ற நிலப் பொதுப் போக்குவரத்து ஆணையத் தலைவர் சையட் ஹமிட் அல்பார் உறுதியாகக் கூறியிருப்பது மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக்கிற்கு “கிடைத்துள்ள நெற்றி அடி” என டிஎபி வருணித்துள்ளது.

எம்ஆர்டி சுரங்கப் பாதைக்கு தரைக்குக் கீழே 100 அடி ஆழத்தில் உள்ள சொத்துக்களுக்கான அடுக்குப் பட்டாவை மட்டுமே அரசாங்கம் கையகப்படுத்தும் என்றும் அதனால் அதற்கு மேற்பட்ட நிலமும் கட்டிடங்களும் நடப்பு உரிமையாளர்களிடமே தொடர்ந்து இருக்கும் என்றும் கடந்த செவ்வாய்க்கிழமை சையட் ஹமிட்டுடன் நடத்திய ஒரு மணி நேரச் சந்திப்புக்கு பின்னர் சுவா பெருமிதமாக அறிவித்தார்.

என்றாலும் சுவா அறிவிப்புக்கு முரணாக எம் ஆர் டி முற்றுப் பெற்றதும் தங்களுடைய இடங்களுக்கு வணிகர்கள் திரும்புவதற்கு அனுமதிக்கும் ஒரு தீர்வை ஸ்பாட் தயாரிப்பதாக  நேற்று சையட் ஹமீட்டும் கூறினார். ஆனால் அதற்கு உத்தரவாதம் இல்லை என ஸ்பாட் தலைமை நிர்வாக அதிகாரி முகமட் நூர் இஸ்மால் கமால் கூறினார்.

இது குறித்து கருத்துரைத்த டிஎபி தேசிய பிரச்சாரப் பிரிவுச் செயலாளர் டோனி புவா, துரதிர்ஷ்டவசமாக சுவாவின் ஹீரோ பங்கு “மிகவும் குறுகிய காலத்தில் முடிந்து விட்டது” எனச் சொன்னார். சைனாடவுன், எம்ஆர்டி திட்டத்துக்காக கையகப்படுத்தப்படும் என்றும் உரிமையாளர்களிடம் அது திரும்ப ஒப்படைக்கப்படும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை என்றும் சையட் ஹமிட் வலியுறுத்தியதின் மூலம் அவர் மசீச தலைவருக்கு “நெற்றியடி” கொடுத்துள்ளார் என்றும் புவா குறிப்பிட்டார்.

சையட் ஹமிட்டின் வாதங்கள் அபத்தமானது

“சுவா 24 மணி நேரத்தில் ஹீரோவிலிருந்து ஜீரோவாகி விட்டார். இதில் வருத்தமளிக்கும் விஷயம் என்னவெனில் சாதாரண மனிதனுடைய வாழ்க்கையையும் வாழ்வு ஆதாரத்தையும் பாதிக்கின்ற வகையில் இந்த நிர்வாகம் அன்றாடம் முரணான முடிவுகளை எடுப்பது தான்.”

சட்டத்தின் கீழ் தரைக்கு கீழே உள்ள நிலமும் உரிமையாளர்களுக்குச் சொந்தமானது என்பதால் ஜாலான் சுல்தான் மனைகளை கையகப்படுத்துவது கட்டாயம் என சையட் ஹமிட் கூறுவது “முற்றிலும் அபத்தமானது” என அந்த பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி குறிப்பிட்டார்.

1965ம் ஆண்டுக்கான நிலச் சட்டம், தரையில் உள்ள சொத்துக்களைப் பாதிக்காமல் பாதாள நிலத்தை கையகப்படுத்துவதற்கு அனுமதிக்கும் வகையில் 1990ம் ஆண்டு திருத்தப்பட்டது.

அதற்காக தேசிய நிலச் சட்டத்தின் மூன்றாவது விதியின் கீழ் பகுதி 5 (ஏ) (92ஏ முதல் 92ஜி வரை) சிறப்பாகச் சேர்க்கப்பட்டன.

“சுரங்கப் பாதைகள், கார் நிறுத்துமிடங்கள் ஆகியவற்றை அமைக்கவும் குழாய்களைப் பொருத்தவும் அந்த “பாதாள நிலத்தை” எடுத்துக் கொள்வதற்கு அல்லது குத்தகைக்கு எடுப்பதற்கு அந்தத் திருத்தம் உதவுகிறது.”

ஊடகங்களில் தாம் தெரிவித்த அந்த விவரத்தை சுவாவும் ஒப்புக் கொண்டதை புவா சுட்டிக் காட்டினார்.

“சைனா டவுனில் உள்ள பாரம்பரிய கடை வீடுகளை ஆதாய நோக்கத்துக்காக பிராசாரானா கடத்த விரும்புகிறதே தவிர 100 அடிக்குக் கீழே எம் ஆர் டி-யைக் கட்டுவதற்காக அல்ல. ஆதாய நோக்கம் கொண்ட அந்த  நடவடிக்கை  அரசாங்கத்தின் தீய நோக்கத்தைக் காட்டுகிறது”, என புவா இன்று விடுத்த அறிக்கை கூறியது.