அண்ணா ஹசாரேவின் உடல் நிலை மோசம்!

கடந்த 10 நாட்களாக உண்ணாநோன்பு இருந்து வரும் காந்தியவாதி அண்ணா ஹசாரேவின் உடல் நிலை மோசம் அடைந்துள்ளது.

அவரை எந்நேரத்திலும் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் ராம்லீலா திடலில் விரைவு அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஊழலுக்கு எதிரான ஜன் லோக்பால் மசோதாவை எந்தவித மாற்றுமும் இன்றி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக் கோரி அண்ணா ஙசாரே ராம்லீலா திடலில் கடந்த 10 நாட்களாக உண்ணாநோன்பு இருந்து வருகிறார்.

பிரபல இருதய நோய் சிகிச்சை நிபுணர் நரேஷ் டிரேகன் தலைமையிலான மருத்துவர்கள் அவரது உடல் நிலையை அவ்வப்போது பரிசோதனை செய்து வருகின்றனர்.

நேற்று பரிசோதித்த அவர்கள் அண்ணாவின் உடலில் நீர்ச்சத்து வெகுவாக குறைந்துள்ளதாகவும் உடனே அவருக்கு ஊசி வழியாக உணவு அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். ஆனால் அண்ணா எதற்கும் உடன்படவில்லை.

இந்நிலையில் அவரை வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லுமாறு டெல்லி காவ்துறையினருக்கு இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதையடுத்து ராம்லீலா திடலில் விரைவு அதிரடிப்படை குவிக்கப்பட்டுள்ளது.

தன்னை யாரும் வலுக்கட்டாயமாக தூக்கிச் செல்லாமல் காக்குமாறு அண்ணா தனது ஆதரவாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து அண்ணா ஹசாரே கூறியதாவது: “என்னால் இன்னும் 9 நாட்கள் கூட உண்ணாநோன்பு இருக்க முடியும். உங்கள் ஆதரவு தான் என் சக்தி. நம் முயற்சி வெற்றி பெறுவதற்கு முன்பு உண்ணாநோன்பை முடிக்க என் மனம் இடம் கொடுக்கவில்லை; எனவே என்னை யாரும் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதை அமைதியான வழியில் செய்யுங்கள். யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம்” என்றார்.