அன்வார்: “நான் ஜெயிலில் இருக்கும் போது இடைக்காலப் பிரதமர்” பொறுப்பேற்பார்

அடுத்த தேர்தலில் எதிர்த்தரப்புக் கூட்டணி ஆட்சிக்கு வந்து அதன் தலைவர் அன்வார் இப்ராஹிம் ஜெயிலுக்குள் இருந்தால் பக்காத்தான் ராக்யாட் இடைக்காலப் பிரதமர் ஒருவரை நியமிக்கும்.

இவ்வாறு அடுத்த சில நாட்களில் தமக்கு எதிரான குதப்புணர்ச்சி வழக்கில் தீர்ப்பை எதிர்நோக்கியிருக்கும் பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் மலேசியாகினிக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியிருக்கிறார். என்றாலும் தாம் சிறையிலிருந்து வெளியில் வந்ததும் பிரதமர் பொறுப்பை ஏற்கப் போவதை அவர் தெளிவுபடுத்தினார்.

“நான் சிறையில் அடைக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதை பக்காத்தான் தலைமைத்துவம் விவாதித்துள்ளது. ஆனால் அது உண்மையான பிரச்னையா?  இல்லை. நாங்கள் வெற்றி பெற்றால் இடைக்காலப் பிரதமர் ஒருவர் இருப்பார்.”

“நிச்சயமாக, நான் வெற்றி பெற்றதும் நான் நீண்ட காலத்துக்குச் சிறையில் இருக்கக் கூடாது என ஆசைப்படுகிறேன்,” என பெட்டாலிங் ஜெயாவில் உள்ள தமது அலுவலகத்தில் அன்வார் கூறினார்.

துருக்கி போன்ற நாடுகளில் அது நிகழ்ந்திருப்பதை அவர் சுட்டிக் காட்டினார். அங்கு 2002ம் ஆண்டு தேர்தலில் ஏகே கட்சி ஆட்சியைப் பிடித்த போது அதன் தலைவர் ரெசெப் தாயிப் எர்டோகன் சிறையில் இருந்தார்.

“இடைக்காலப் பிரதமர் பதவி எளிதானது..ஆனால் அது எப்படி இருந்தது என அப்போதைய இடைக்காலப் பிரதமர் அப்துல்லா குல்-லை நான் வினவிய போது அவர் சொன்னார்: “நீங்கள் அதனை  எளிதானது என நினைக்கின்றீகள். நான் அன்றாடம் சிறைச்சாலையில் விளக்கமளிக்க வேண்டும் என என் எஜமானர் எதிர்பார்த்தார்,” என அவர் புன்னகையுடன் கூறினார்.

நான்கு மாதங்களில் எர்டோகன் மீண்டும் அரசியலுக்குத் திரும்புவதற்கு அனுமதிக்கும் சட்டங்களை குல் இயற்றியதும் கட்சித் தலைவர் பிரதமராகப் பொறுப்பேற்றார். அதனைத் தொடர்ந்து குல் துணைப் பிரதமராகவும் வெளியுறவு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.

அன்வார் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டால் பாஸ் ஆன்மீகத் தலைவர் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட் அல்லது பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் முதலாவது பக்காத்தான் பிரதமராக இருக்க வேண்டும் என நேற்று பாஸ் மத்தியக் குழுத் தலைவர் ஹசான் அலி கூறியிருந்தார்.

இடைக்காலப் பிரதமர் ஒருவரை தேர்வு செய்வது எளிதான விஷயமல்ல என்பதை ஒப்புக் கொண்ட அன்வார், அந்த நபர் இடைக்காலத்துக்கு மட்டுமே என்றாலும் அது மிகவும் சிக்கலான விவகாரம் என்றார்.

“அடுத்த மூத்த மலாய் தலைவர் ஹாடி என்பதால் அது மிகவும் சர்ச்சைக்குரியதாக இருக்கும். ஒர் இணக்கம் ஏற்படுமா? நாங்கள் எல்லா தீர்வுகளையும் ஆராய்ந்துள்ளோம்,” என்றார் அன்வார்.

அமைதியான பேரணிக்கு அன்வார் உத்தரவாதம் அளிக்கிறார்

அடுத்த திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் போது கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்தில் கூடுகின்றவர்களிடம் “ஆயுதங்கள் இருக்காது” என தாம் உத்தரவாதம் அளிக்க முடியும் என அந்த எதிர்த்தரப்புத் தலைவர் கூறினார்.

“என்றாலும் அமைதிக்கான உத்தரவாதம் உள்துறை அமைச்சிடமிருந்து வர வேண்டும். நான் என்ன உத்தரவாதம் கொடுக்க முடியும்? யாரிடமும் ஆயுதங்கள் இருக்காது.”

அந்தக் கூட்டம் “ஒருமைப்பாட்டைக் காட்டுவதற்காகும்” ஆதரவாளர்களின் “எதிர்ப்புப் பேரணி” அல்ல என்றும் அன்வார் வலியுறுத்தினார்.

“இல்லை. ஆதரவாளர்கள் ஒருமைப்பாட்டைக் காட்ட விரும்புகின்றனர். அவர்களுக்கு நீதிமன்ற முறை தெரியும். அவர்கள் நியாயமான முடிவை எதிர்பார்ப்பதாக நான் எண்ணவில்லை. என்றாலும் அதனை அறியவும் செவிமடுக்கவும் பார்வையிடவும் அவர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்”, என்றார் அவர்.

அமைதியை உறுதி செய்வதற்கு பிகேஆர் இளைஞர் பிரிவு, உறுப்பினர்களுக்கு இடையில்  காவலர்களை’ நியமித்துள்ளது என்றும் அவர்கள் பாஸ் கட்சியின் அமால் என்ற பாதுகாப்புப் பிரிவுடன் அணுக்கமாக ஒத்துழைப்பர் என்றும் அன்வார் தெரிவித்தார்.

“அது அமைதியாக இருக்கும் என நான் தனிப்பட்ட முறையில் நம்புகிறேன். அது அனைவரும் கவலைப்படுவதைப் போன்று நாங்களும் கவலைப்படுகிறோம். நாங்கள் கூடுதல் நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வோம்.”

அந்தப் பேரணி தொடர்பான நிபந்தனைகளை விவாதிக்க உள்துறை அமைச்சு முடிவு செய்துள்ளதையும் அன்வார் வரவேற்றார்.

“901 அன்வாரை விடுதலை செய்க” என கூறப்பட்டுள்ள அந்தக் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை விவாதிக்க கோலாலம்பூர் போலீஸ் படைத் தலைவர் முகமட் சாலே இன்று முற்பகல் 11 மணிக்கு பாஸ் துணைத் தலைவர் அஸ்மின் அலியைச் சந்திக்கிறார்.