வான் அஜிஸாவின் மெய்க்காவலர் மயங்கி விழுந்தார், விஷமா?

பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அஜிஸா வான் இஸ்மாயிலின் மெய்க்காவலர் கூர்மையான விஷம் தோய்க்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பொருள் ஒன்றினால் தாக்கப்பட்டதாக கூறப்பட்ட பின்னர் நேற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

பினாங்கில் அன்வாருடைய சொந்த ஊரான செரோக் தோக் குன்-னில் சொற்பொழிவு முடிவடைந்த நேரத்தில் அந்த மெய்க்காவலர் மயங்கி விழுந்ததாக பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிமின் உதவியாளர் ஒருவர் கூறினார்.

சொற்பொழிவு நிகழ்ந்த இடத்திலிருந்து இரவு பத்து மணி வாக்கில் வான் அஜிஸாவுக்கு காவலாக மெய்க்காவலர் பாயாட் அபிக் அல்பாக்ரி சென்று கொண்டிருந்த போது அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

பேராக் பாரிட் புந்தாரில் இன்னொரு நிகழ்வுக்கு பாயாட், வான் அஜிஸாவுடன் சென்று கொண்டிருந்த வேளையில் அவர் நோய்வாய்ப்பட்டு பாதி வழியில் மயங்கி விழுந்தார்.

அதனைத் தொடர்ந்து வான் அஜிஸா காரை செபராங் ஜெயா மருத்துவமனையில் பாயாட்டை அனுமதிக்கும் பொருட்டு அங்கு செல்லுமாறு ஓட்டுநருக்கு ஆணையிட்டார்.

“தொடக்கத்தில் கையில் கூர்மையான பொருள் ஒன்றினால் ஏற்பட்ட காயத்திலிருந்து ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. அதற்கு மருந்து போட்ட பின்னர் நாங்கள் பாரிட் புந்தாருக்குத் தொடர்ந்து செல்ல முடிவு செய்தோம். ”

ஆனால் அவர் நோய்வாய்ப்பட்டதும் தாக்குதலின் போது அவருக்கு விஷம் செலுத்தப்பட்டிருக்கலாம் என நாங்கள் சந்தேகித்தோம்,” என பினாங்கு பிகேஆர் இளைஞர் பிரிவு குழு உறுப்பினர் சையட் மிக்காயில் ரிஸால் அய்டிட் கூறினார்.

அந்தத் தாக்குதல் குறித்த செய்தி டிவிட்டரில் வெளியானதும் வான் அஜிஸா மீதான தாக்குதலை பாயாட் தடுத்திருக்க வேண்டும் என சில தனிநபர்கள் கூறிக் கொள்ளத் தொடங்கினர்.