பக்காத்தான் கிராமப்புற மலாய்க்காரர்களைக் கவர வேண்டும்

பக்காத்தான் ரக்யாட் கிராமப்புற மலாய்க்காரர்களின் மனம் கவர வேண்டும். அதைச் செய்யத் தவறினால் அது, 13வது பொதுத்தேர்தலில் அதற்குப் பாதகமாக அமையும் என்கிறார் மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்) சுங்கை சிப்புட் எம்பி டாக்டர் டி.ஜெயக்குமார்.

கிராமப்புற மலாய்க்காரர்கள் அம்னோவின் ‘ஊழல்கள்’ பற்றி அறியாதவர்கள் அல்லர். ஆனால், பக்கத்தானுக்கு வாக்களித்தால் சமுதாயத்தைத் திருத்தி அமைக்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்படும் அதனால் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் பாதிப்புறும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள் என்றவர் நினைக்கிறார்.

கிராமப்புற மலாய்க்காரர்கள் பலரை உறுப்பினர்களாகக் கொண்டிருக்கும் பிஎஸ்எம், சமுதாயத் திருத்த நடவடிக்கைக்கு எதிரானதல்ல என்பதை வலியுறுத்திய ஜெயக்குமார், இதை மலாய் சமூகத்துக்கு உணர்த்த கட்சி  முயல வேண்டும் என்றார்.

“பக்காத்தான் திறமைக்குத்தான் மதிப்பளிக்கும். அதனால் சமுதாயத் திருத்த நடவடிக்கையை ஒழித்துவிடும் என்று மலாய்க்காரர்கள் நினைப்பார்களானால் நாம் (எதிர்வரும் தேர்தலில்) தோற்றுப்போவோம்”, என்றவர் எச்சரித்தார்.

1960ஆம் ஆண்டு அவசரகாலச் சட்டத்தின்கீழ் காவலில் வைக்கப்பட்டு அண்மையில் விடுதலை செய்யப்பட்ட பிஎஸ்எம் அறுவருக்காக நேற்றிரவு பினாங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நன்றிநவிலும் விருந்தில் ஜெயக்குமார் பேசினார்.

கூட்டம் நிரம்பிவழிந்த அந்நிகழ்வில் அவருடன் சூ சொன் காய், சரத் பாபு, எம். சரஸ்வதி (இடம்), எம். சுகுமாரன், ஏ.இலட்சுமணன் உள்ளிட்ட பலரும் பேசினர்.

பெர்சே 2.0 பேரணியுடன் தொடர்புள்ளவர்கள் என்று கூறப்பட்டு அவ்வறுவரும் கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.ஜூலை 29-இல்தான் விடுவிக்கப்பட்டனர்.

அவர்களும் மேலும் 24 பேரும் சட்டவிரோத அமைப்பு ஒன்றில் உறுப்பு வகித்ததுடன் கீழறுப்பு ஆவணங்களைக் கைவசம் வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். வழக்கு விசாரணைக்காக அக்டோபர்10-14இல் அவர்கள் நீதிமன்றம் செல்ல வேண்டும்.

பிஎஸ்ஆம் ஆதரவாளர்கள் மீதான நடவடிக்கையின் விளைவாக கட்சி, அதன் சோசலிசக் கொள்கை பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதாக ஜெயக்குமார் கூறினார்.

21ஆம் நூற்றுண்டு சோசலிசம் கம்யூனிசத்திலிருந்து மாறுபட்டது என்பதைக் கட்சித் தலைவர்கள் விளக்க வேண்டிய அவசியமாகும்.

மலேசிய மக்கள், கட்சியின் போராட்டங்களைப் பற்றித் தெளிவுபெற அதன் கொள்கைகள் நன்கு விளக்கப்பட வேண்டும் என்றாரவர்.

“அந்தக் கொள்கைகளுடன் தொடங்கியவர்கள் அல்லர் நாம்…வறுமை, கல்வி முதலிய விவகாரங்களில் அக்கறை கொண்ட ஓர் என்ஜிஓ-வாகத்தான் தொடங்கினோம்.

“இப்போது நம் கொள்கைகள் பற்றி நிறைய பேச வேண்டியுள்ளது. அப்போதுதான் மக்கள் நம்மைப் பற்றியும் நம் கொள்கை பற்றியும் அறிந்துகொள்ள முடியும்”, என்றவர் கூறினார்.