ராயிஸ்: அன்வார் தீர்ப்பு நீதிமன்றங்கள் சுதந்திரமானவை என்பதைக் காட்டுகின்றது

அரசியல் முலாம் பூசப்பட்ட குதப்புணர்ச்சி வழக்கிலிருந்து எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் எதிர்பாராத வகையில் விடுவிக்கப்பட்டுள்ளது மலேசிய நீதிமன்றங்கள் சுயேச்சையாக இயங்குவதைக் காட்டுவதாக அரசாங்கம் இன்று கூறியது.

“மலேசியா சுதந்திரமான நீதித் துறையைப் பெற்றுள்ளது. நீதிபதிகளுடைய முடிவுகள் மீது அரசாங்கம் செல்வாக்குப் பெற்றிருக்கவில்லை என்பதையும் அந்தத் தீர்ப்பு மெய்பிக்கிறது,” என தகவல் அமைச்சர் ராயிஸ் யாத்திம் வெளியிட்ட அறிக்கை கூறியது.

அன்வாரை உயர் நீதிமன்றம் குதப்புணர்ச்சி குற்றச்சாட்டிலிருந்து விடுவித்த பின்னர் அவர் அந்த அறிக்கையை வெளியிட்டார்.

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு நீடித்த விசாரணைக்குப் பின்னர் அன்வார் குற்றம் புரியவில்லை என நீதிபதி தீர்ப்பளித்தார்.

அந்தக் குற்றச்சாட்டு வலுப்பெற்று வரும் எதிர்த்தரப்பை முடக்கும் அரசாங்கத்தின் முயற்சி என அன்வார் வருணித்துள்ளார்.

அந்தத் தீர்ப்பு அன்வார் உட்பட பலருடைய எதிர்பார்ப்புக்களுக்கு முரணாக அமைந்துள்ளது. காரணம் அந்த வழக்கு விசாரணையை நாடகம் என்றும் குற்றவாளி என்ற தீர்ப்பு ஏற்கனவே நிர்ணயம் செய்யப்பட்டு விட்டது என்றும் அன்வார் கூறியிருந்தார்.

2008ம் ஆண்டு பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு பல வெற்றிகளை தாம் ஈட்டித் தந்த பின்னர் அரசியல் மருட்டல் என்னும் முறையில் தம்மை அகற்றுவதற்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் அரசாங்கம் முனைந்துள்ளது என்றும் கூட அன்வார் குற்றம் சாட்டியிருந்தார்.

நஜிப் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் புதிய தேர்தல்களை நடத்தியாக வேண்டும்

அந்தப் பொதுத் தேர்தல் முடிவுகளைக் கருத்தில் கொண்டு ஒடுக்குமுறையானது எனக் கருதப்பட்ட பல சட்டங்களைத் தாம் நீக்கப் போவதாக நஜிப் அண்மையில் அறிவித்தார். ஆனால் சிவில் உரிமைகளை மேம்படுத்துவதற்கான அவரது முயற்சிகளை எதிர்க்கட்சிகள் சந்தேகத்துடன் நோக்குகின்றன.

“பிரதமர் அறிமுகம் செய்து வரும் துணிச்சலான ஜனநாயக சீர்திருத்தங்கள் மலேசிய வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் வெளிப்படையான போக்கு விரிவடைய உதவும்,” என்றும் ராயிஸ் சொன்னார்.

ஏஎப்பி

.