இடைநிலைப்பள்ளிகளில் மீண்டும் இண்டர்லோக்; தொடர்கிறது போராட்டம்!

கிள்ளான் மாவட்டத்தின் நான்குக்கும் மேற்பட்ட இடைநிலைப்பள்ளிகளில் சர்சைக்குரிய இண்டர்லோக் நாவல் மீண்டும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதை பெற்றோர் ஆசியர் சங்கம் உட்பட இந்திய அமைப்புகள் கண்டித்துள்ளன.

கிள்ளான் மாவாட்டத்தில் எஸ்எ.ம்.கே ராஜா மஹாடி, எஸ்எம்கே ஷா பண்டார் மற்றும் எஸ்.எம்.கே ஸ்ரீஅண்டளாஸ் ஆகிய மூன்று பள்ளிகளும் இண்டர்லோக் நாவலை மாணவர்களுக்கு வழங்கியவையாகும் என்று சிலாங்கூர் நடவடிக்கைக் குழு (Selangor Action Team) தலைவரான எல். சேகரன் கடந்த 8-ம் தேதி கிள்ளான் ஸ்மைலிஸ் உணவக அரங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தின்போது தெரிவித்தார்.

இண்டர்லோக் நாவலை கல்வி அமைச்சு மீட்டுக்கொண்டுள்ளது என்று மார்தட்டிய இந்திய அரசியல் தலைவர்கள், மீண்டும் இண்டர்லோக் நாவல் இடைநிலைப்பள்ளிகளில் வழங்கப்பட்டுள்ளது குறித்து என்ன பதில் கூறப்போகிறார்கள்? என சேகரன் கேள்வியெழுப்பினார்.

தேசிய முன்னணி அரசாங்கம் இண்டர்லோக் விஷயத்தில் இந்தியர்களை தொடர்ந்து சோதித்துப் பார்த்துவருவதாக கூறிய முன்னாள் நகராண்மைக்கழக உறுப்பினரான சேகரன், இடைநிலைப்பள்ளிகளில் மீண்டும் இண்டர்லோக் நாவல் வழக்கப்பட்டுவருவது நிறுத்தப்படாவிட்டால் பெற்றோர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கம் உட்பட அனைத்து இந்திய அரசுசார அமைப்புகளையும் ஒன்றுதிரட்டி போராட்டம் நடைபெறும் என கூறினார்.

இச்செய்தியாளர் கூட்டத்தில் கலந்துகொண்ட நியாட் இயக்கத்தின் செயலாளர் அருண் துரைசாமி, கிள்ளான் மாவட்டத்திலுள்ள இடைநிலைப்பள்ளிகளில் இண்டர்லோக் நாவல் அமலில் இருப்பது வேதனையளிக்கும் நடவடிக்கை என்றாலும் அதனை முற்றாக அகற்றும்வரை நியாட் இயக்கம் தொடர்ந்து போராடும் என தெரிவித்தார்.

(செய்தியாளர் கூட்டம் குறித்த காணொளி சற்று நேரத்தில் பதிவேற்றமாகும்)

 

சிறப்பு வகுப்புத் திட்டத்தில் (KRK) தமிழ்ப்பள்ளி மாணவர்கள் புறகணிப்பு!

யூபிஎஸ்ஆர் தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெற்ற தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இடைநிலைப்பள்ளியிலுள்ள KRK எனப்படும் சிறப்பு வகுப்புத் திட்டத்திலிருந்து புறக்கணிக்கப்படுவதாக இச் செய்தியாளர் கூட்டத்தின்போது பெற்றோர் ஆசிரிய சங்கத் பிரதிநிதிகளினால் தெரிவிக்கப்பட்டது.

பலருக்கு இடைநிலைப்பள்ளியிலுள்ள சிறப்பு வகுப்புத் திட்டம் (KRK- Kelas Rancangan Khas) குறித்த விளக்கங்களும் வழங்கப்படாமல் மறைக்கப்படுவதாக பெற்றோர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள்.

KRK குறித்து விளக்கம்கோரும் பெற்றோர்களுக்கு இடைநிலைப்பள்ளிகளிலுள்ள தலைமையாசிரியர்கள் அவர்களின் இஷ்டத்திற்கு வெவ்வேறான தகவல்களை வழங்குவதாகவும் இதுபோன்ற சிறப்பு வகுப்புத் திட்டம், ஆரம்பக் கல்வியை மலாய்ப் பள்ளியில் படித்தவர்களுக்கு மட்டும்தான் என ஒரு தரப்பினரும், மலாய் மாணவர்களின் எண்ணிக்கை நிறைவானதும் மீதம் இருந்தால் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு வழங்குவோம் என ஒருசாரார் கூறுவதாகவும் அக்கூட்டத்திற்கு வருகை தந்திருந்த பெற்றோர்கள் தங்களது உளக்குமுறல்களை வெளிப்படுத்தினர்.

கிள்ளானில் கடந்த 8-ம் தேதி காலை 10 மணியளவில் நடைபெற்ற இச்செய்தியாளர் கூட்டத்தில் சுமார் 80-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்துகொண்டு இண்டர்லோக் குறித்து தங்களது அதிருப்தியை வெளியிட்டனர்.

TAGS: