அமானாவை அரசியல் கட்சியாக்குமாறு அழுத்தம் அதிகரிக்கிறது

புதிதாக அமைக்கப்பட்டுள்ள அரசு சாரா அமைப்பான அமானா என்ற Angkatan Amanah Merdeka வை அரசியல் கட்சியாக மாற்றி எதிர்வரும் பொதுத் தேர்தலில் எதிர்த்தரப்புடன் இணைய வேண்டும் என அதன் உறுப்பினர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

என்றாலும் அம்னோவைச் சேர்ந்த குவா மூசாங் எம்பி தெங்கு ரசாலி ஹம்சா தலைமை தாங்கும் பல மூத்த பிஎன் அரசியல்வாதிகள் தோற்றுவித்த அமானா அமைப்பின் மத்திய மன்றம் அது குறித்து எந்த முடிவும் செய்யவில்லை என அதன் துணைத் தலைவர் அப்துல் காதிர் ஷேக் பாட்சிர் கூறுகிறார்.

“நாங்கள் குறிப்பாக சபா, சரவாக்கை சேர்ந்த உறுப்பினர்களால் நெருக்கப்படுகிறோம். மூன்றாவது சக்தியாக அல்லது அது போன்ற ஒர் அமைப்பாக மாறாமல் ஒர் அரசியல் கட்சியாக மாறி எதிர்த்தரப்பில் சேர வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர்,” என அவர் மலேசியாகினிக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

முறையான திட்டங்கள் ஏதும் இல்லாத போதும் அமானாவில் இதுவரை 10,000 உறுப்பினர்கள் சேர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அவர்களில் பெரும்பாலோர், சிலாங்கூரையும் சபாவையும் சரவாக்கையும் சார்ந்தவர்கள்.

தேர்தல் நெருங்கும் வேளையில் அமானா  அமைப்பு உருவாகியுள்ளது, அது பிஎன் தவிர்த்து மற்ற கொடியின் கீழ் தேர்தலில் போட்டியிடுமா என்னும் கேள்வியை எழுப்பியுள்ளது.

தேர்தலில் அமானாவுக்கு வாய்ப்புக்கள் பற்றிக் கேட்ட போது, அது குறித்து தலைமைத்துவம் இன்னும் சிந்திப்பதாகவும் ஆனால் பிஎன்- னுக்கு அது திரும்பும் சாத்தியம் மிகவும் குறைவு என காதிர் பதில் அளித்தார்.

பக்காத்தான் ராக்யாட்டுக்கு வெளிப்படையாக அவர் ஆதரவு தெரிவிக்கவில்லை என்றாலும் இரண்டு அமைப்புக்களும் பல விஷயங்களில் ஒருமித்த கருத்தக்கொண்டிருப்பதாக சொன்னார்.

“எதிர்த்தரப்புப் போராடும் விஷயங்களில் கிட்டத்தட்ட 80 விழுக்காட்டில் எங்களுக்கு இடையில் உடன்பாடு இருப்பாதாக தோன்றுகிறது.”

பக்காத்தானில் அமானா இணையுமானால் சில “பெரிய பெயர்கள்” இருப்பதால் எதிர்த்தரப்புக் கூட்டணிக்கு வலிமை அடையும் என அவர் கருதுகிறார்.

பக்காத்தானையும் பிஎன் னையும் ஒப்பிட்டுப் பேசிய காதிர், இரண்டுமே பல இனத் தன்மையைக் கொண்டுள்ளன, அரசமைப்பை மதிக்கின்றன, வர்த்தகத்துக்கு நட்புறவான கொள்கைகளைப் பின்பற்றுகின்றன, உயர்ந்த வருமானத்தை பெறும் சமூகமாக மாற்ற முயலுகின்றன என தெரிவித்தார்.

“ஆனால் பிஎன்-னில் அம்னோ மிகவும் ஆதிக்கம் செலுத்துகிறது. அந்த நிலை மற்ற உறுப்புக்கட்சிகள் அதனை கண்காணிக்க முடியாத நிலையை தோற்றுவித்துள்ளது. ”

“அதே வேளையில் பக்காத்தான் ராக்யாட்டில் மூன்று கட்சிகளும் வலிமை அடிபப்டையில் சமமாக இருக்கின்றன. பாஸ் கிராமப்புற மலாய்க்காரர்களையும் பிகேஆர் தாராளப் போக்குடைய நகர்ப்புற மலாய்க்காரர்களையும் டிஏபி சீனர்களையும்   பிரதிநிதிப்பதாகத் தோன்றுகிறது.”

“அவை சம நிலையில் உள்ளன. அவை உண்மையில் ஒன்றையொன்று ஏற்றுக் கொள்ளவும் நியாயமாக நடந்து கொள்ளவும் முயலுகின்றன. எந்தக் கட்சியும் ஆதிக்கம் செலுத்தவில்லை. அதனால் நாம் நியாயமான முடிவை எதிர்பார்க்கலாம்,” என்றார் காதிர்.

“நடப்பு ஆட்சிக்கு மாற்றாக விளங்கக் கூடிய பல ‘நன்கு தேர்ச்சி பெற்ற இறைவனுக்கு அஞ்சும் தலைவர்கள்”  இருப்பதாகவும் காதிர் குறிப்பிட்டார்.

அனுபவம் இல்லாதது பக்காத்தானை நிராகரிப்பதற்கு ஒரு காரணமாக இருக்கக் கூடாது என வலியுறுத்திய அவர் தாய்லாந்தில் ‘அரசியல் கற்றுக்குட்டியான’ பிரதமர் யிங்லுக் ஷினாவாத்ரா “சிறந்த முறையில்” நிர்வாகம் செய்து வருவதைச் சுட்டிக் காட்டினார்.