பிகேஆர்: முறையீட்டின் நோக்கமே அன்வாரை சிறைக்குள் தள்ளுவதுதான்

அன்வார் இப்ராகிம்  குதப்புணர்ச்சிக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டதை எதிர்த்து முறையீடு பதிவு செய்யப்பட்டிருப்பது, அரசின் அதிகாரம் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு என்கிறார் பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன்.

“முறையீட்டின் நோக்கமே அன்வாரைச் சிறையிடுவதும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் பக்காத்தான் ரக்யாட் ஆட்சியைக் கைப்பற்றுவதைத் தடுப்பதும்தான்”, என்று சுரேந்திரன் கூறினார்.

இந்த முறையீடு, பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மாற்றம், சீரமைப்பு என்று பேசுவதெல்லாம் மக்களை ஏமாற்றும் வித்தைதான் என்பதைக் காட்டுகிறது என்றாரவர்.

ஜனவரி 13-இல், வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் அன்வார் விடுவிக்கப்பட்டது பற்றிக் கருத்துரைத்த பிரதமர், “நாம் முன்னோக்கிச் செல்வது முக்கியம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும்,“குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டதானது அரசாங்கம் அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் அரசாங்கம் தலையிடுவதில்லை என்பதை விமர்சகர்களுக்கு உணர்த்தியிருக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

சுரேந்திரன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், சாட்சியங்களின் அடிப்படையில் மேல்முறையீடு செய்ய முடிவுசெய்யப்பட்டதாக சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் கூறிக்கொள்வது குறித்து கேள்வி எழுப்பினார்.

“உண்மையில் முறையீடு அரசியல் நோக்கம் கொண்டது. சட்ட ரீதியில் வலுவற்றது. ஆளும் பிஎன்தான் முறையீடு செய்யும்படி தூண்டியுள்ளது.”

பிஎன்னின் ஊழலும் ஏதேச்சாதிகாரப் போக்கும் நிறைந்த 54 ஆண்டுக்கால ஆட்சியில்  அதிகார அத்துமீறல் அதன் அடையாளமாகிவிட்டது என்று சுரேந்திரன் மேலும் கூறினார்.

இதனிடையே அலிரான் இன்று விடுத்த அறிக்கையொன்றில், மேல்முறையீடு செய்யும் முடிவு வியப்பளிக்கவில்லை என்றும் நீதித்துறை கடந்தகாலத்தில் நடந்துகொண்டுள்ள விதத்தை வைத்து முடிவு என்னவாக இருக்கும் என்பதையும் முன்னறிந்து கூறிவிட முடியும் என்றும் குறிப்பிட்டிருந்தது.

தேர்தலில் பரப்புரை செய்ய அன்வாருக்குக் கொஞ்சமும் அவகாசமும் கொடுக்கக்கூடாது என்பதுதான் நோக்கமாகும் என்று அலிரான் தலைவர் பி.இராமகிருஷ்ணன் கூறினார். அதாவது அன்வாருக்கு அவருடைய  அடிப்படை உரிமை மறுக்கப்பட்டு பின் பிழைத்திருக்க வழி வகுக்கப்படுகிறது.

“பக்காத்தான் ரக்யாட் வழி பிஎன் ஆட்சியைத் தவிடுபொடியாக்கும் ஆற்றல் படைத்த ஒரே மனிதர் அன்வார்தான். எனவேதான் அவரைப் பூட்டிவைக்க வேண்டும். 

“மலேசியர்கள் எதிர்த்துக் கேள்வி கேட்பார்கள் என்பதால், இந்த அரசியல் சதிக்குச் சட்டப்பூர்வ தோற்றம் தர வேண்டும் என்பதற்காகவே, 1988-இலிருந்து ஏவல் செய்தே பழகிப்போன நீதித்துறையையும் ஒரு பங்காற்ற (முறையீட்டில்) வைத்திருக்கிறார்கள்”, என்று இராமகிருஷ்ணன் கூறினார்.