மேலும் இரண்டு சாத்தியமான சாட்சிகள் இன்று பேட்டி காணப்பட்டனர்

குதப்புணர்ச்சி வழக்கு விசாரணையில் சாட்சியமளிக்கக் கூடிய சாத்தியமுள்ளவர்கள் எனக் கருதப்படும் மேலும் இருவரை அன்வார் இப்ராஹிமின் வழக்குரைஞர்கள் இன்று பேட்டி கண்டனர்.

அன்வாருடைய மெய்க்காவலர் மொக்தார் முஸ்தாபா, அவருடைய காரோட்டி அப்துல்லா சானி சைட் ஆகியோரே அவர்கள்.

வழக்குரைஞர்களான கர்பால் சிங்கும் சங்கர நாயரும் அவர்களை ஒரு மணி நேரத்துக்கு மேல் பேட்டி கண்டனர்.

அந்தப் பேட்டிகளின் போது அன்வாரும் உடனிருந்தார்.

நாளை மேலும் இரண்டு சாட்சிகள் பேட்டி காணப்படுவர் என கர்பால் சிங் சொன்னார். ஆடம்பர அடுக்கு மாடி வீட்டின் உரிமையாளர் ஹாசானுடின் அப்துல் ஹமிட், நூர் ஷாம் அப்துல் ஹமிட் ஆகியோரே அவர்கள்.

“பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கையும் அவரது துணைவியார் ரோஸ்மா மான்சோரையும் நாங்கள் எப்போது பேட்டி காண முடியும் என்பதற்கு இது வரை எந்த அறிகுறியும் இல்லை,” என்றும் அவர் சொன்னார்.

“அன்வாருடைய எதிர்வாதம் தொடங்குவதற்கு முன்னதாக பிரதிவாதித் தரப்பு கோரியுள்ள சாட்சிகளை வழங்குவதற்கு அரசாங்கத் தரப்புக்கு ஒரு வார அவகாசத்தை நீதிமன்றம் வழங்கியுள்ளது. ஆகவே பொறுத்திருந்து பார்ப்போம்,” என்றார் கர்பால்.