படியாக்கம் செய்யப்பட்ட வாக்காளர்கள் அம்னோ உறுப்பினர்கள், பாஸ் கண்டுபிடிப்பு

வாக்காளர் பட்டியலில் இரண்டு தடவை வாக்காளர்களாக பதிவுசெய்யப்பட்டிருக்கும் சிலர், அம்னோ உறுப்பினர்கள் என்பதை பாஸ் கண்டுபிடித்துள்ளது. இதனால் ஆளும் கட்சி இந்த மோசடிக்குப் பின்னணியில் இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஜோகூர் பாஸ் இளைஞர் தலைவர் சுஹாய்சான் கயாட், படியாக்கம் செய்யப்பட்ட மேலும் மூவரின் பெயர்கள் இன்னமும் வாக்காளர் பட்டியலில் இருப்பதைக் கண்டுபிடித்து  இன்று அம்பலப்படுத்தினார்.

மலேசியாகினி,  அம்மூவரும் ஒரே பெயரில், ஒரே முகவரியில், ஒரே தொகுதியில் இரண்டு தடவை வாக்காளர்களாக பதிவாகியுள்ளதை உறுதிப்படுத்திக்கொண்டது. அவர்களின் மைகார்ட் எண்கள் மட்டும் மாறுபடுகின்றன.

அவர்களின் பழைய அடையாளக் கார்ட் எண்கள் குறிப்பிடப்படவில்லை.

ஆனால் அவர்கள் அம்னோ உறுப்பினர்கள்தாம் என்பதை மலேசியாகினியால் உறுதிப்படுத்திக்கொள்ள முடியவில்லை.

அவர்கள் அம்னோ உறுப்பினர்கள்தாம் என்று கூறிக்கொண்ட சுஹாய்சான் அம்மூவரும் அம்னோ புத்ரி, அம்னோ இளைஞர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றார்.

‘படியாக்கம் செய்யப்பட்ட வாக்காளர்கள்’,போலி மைகார்ட்,போலி வாகனமோட்டும் அனுமதி போன்றவற்றைக் கொண்டும், உண்மையான மைகார்ட்டையே காண்பித்து எண்களில் மட்டும் சிறு தவறு நேர்ந்துவிட்டதாகக் கூறியும், வாக்காளர் பட்டியலில் காணப்படுவது தனது  பெயரே என்று படிவம் 11-ஐப் பூர்த்திசெய்து பிரகடனம் செய்தும், இன்னும் வேறு பொருத்தமான வழிமுறைகளைப் பின்பற்றியும் தேர்தல் அதிகாரிகளை நம்ப வைத்து இரண்டு தடவை வாக்களித்திருக்கலாம் என்று அவர் சந்தேகிக்கிறார்.

“இந்த ஆதாரம், அம்னோ தேர்தலில் சூழ்ச்சி செய்ய முற்பட்டிருப்பதைக் காண்பிக்கிறது. இதற்கு அம்னோ தலைவர் என்ற முறையில் பிரதமர் விளக்கமளிக்க வேண்டும்”, என்றவர் கேட்டுக்கொண்டார்.

பட்டியலில் “படியாக்க வாக்காளர்கள்” இருப்பதைத் தற்செயலாக நிகழ்ந்த ஒன்று என்று ஒதுக்கித்தள்ளிவிடக் கூடாது என்பதை வலியுறுத்திய அவர் இந்த மூவரைப் போல் பலர் இருப்பதைத் தம் கட்சி கண்டுபிடித்திருப்பதாகக் கூறினார்.

இன்று பாஸ் கண்டுபிடித்த மூன்று “படியாக்க வாக்காளர்கள்” பற்றிய விவரங்கள் வருமாறு:

1. Mohd Bahar bin Omar

First MyKad: 800105025489 (valid)

Second MyKad: 800105025459 (invalid)
Umno Membership no: 02914008
State: Kedah
Division: Kulim Bandar Baharu
State seat: Kulim
Branch: Jalan Junjung

2. Faten Diana binti Hassan

First MyKad: 810822035400 (valid)

Second MyKad: 810522035400 (invalid)
Umno Membership no: 03252506
State: Kelantan
Division: Tumpat
State seat: Kelaboran
Branch: Dalam Rhu Pantai

3. Sharina binti Mat Ariff

First MyKad: 800727095094 (valid)

Second MyKad: 800729095094 (invalid)
Umno Membership no: 02999301
State: Perlis
Division: Padang Besar
State seat: Santan
Branch: Kampong Petal

இசி தலைவர்: மனித தவறுதான் காரணம்

இதனிடையே இன்னொரு நிலவரத்தில், சின் சியு நாளேட்டிடம் பேசிய இசி தலைவர் அப்துல் அசிஸ் யூசுப், ஒருவர் இரண்டு தடவை வாக்காளராக பதிவு செய்யப்பட்டதற்கு மனித தவறுகள் காரணமாகும் என்று கூறியுள்ளார்.

சில வாக்காளர்கள் இரண்டு தடவை தங்களைப் பதிந்து கொண்டிருக்கலாம் என்றவர் விளக்கினார். முதலில் பதிவு செய்துகொண்டபோது  மைகார்ட் எண்கள் சரியாகப் பதியப்படாத காரணத்தால் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்கள் இடம்பெறாததைக் காணும் அவர்கள் திரும்ப ஒருமுறை பதிவு செய்துகொண்டிருக்கலாம். இதனால் அவர்கள் இரண்டு தடவை வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று விடுகிறார்கள்.

மைகார்ட் தொலைத்தவர்கள் திரும்பவும் வந்து பதிவுசெய்துகொள்ளும்போதும் இவ்வாறு நிகழ்கிறது என அப்துல் அசிஸ் கூறினார்.

வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் தவறுகளைக் களைவது தொடர்பில் இசி, தேசியப் பதிவுத்துறையுடன் கலந்து பேசும் என்றும் அவர் குறிப்பிட்டார்.