சாவால்களை எதிர்கொள்ளும் போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள்

இலங்கையில் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் விசயத்தில் அரசாங்கம் காட்டும் அக்கறை திருப்திகரமானதாக இல்லை என போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பின் தலைவியான விசாகா தர்மதாச தெரிவித்துள்ளார்.

பெண்கள் தொடர்பான கருத்தரங்கு மற்றும கண்காட்சியொன்றில் கலந்து கொள்வதற்காக மட்டக்களப்பு சென்றிருந்த அவர், போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக விசேட கவனம் செலுத்த வேண்டியிருப்பதாகவும் சுட்டிக் காட்டினார்.

பெண்களின் பிரச்னைகளை பெண்களிடம் மட்டுமே கூற முடியும், பெண்களாலேயே அறிந்து கொள்ள முடியும், இதன் காரணமாகவே போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் காவல்துறை மற்றும் இராணுவத்தில் போதியளவு பெண் அதிகாரிகளை கடமையில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அரசாங்கத்திடம் தாம் வலியுறுத்துவதாகவும் விசாகா தர்மதாச கூறினார்.

“போர் சமாதான பேச்சுவார்த்தைகளில் முடிவடைந்திருந்தால் இப்படியான பிரச்னைகளுக்கு இடமிருந்திராது, தற்போது போர் முடிவிற்கு கொண்டு வரப்பட்டிருந்தாலும் இன்னும் அரசியல் தீர்வு என்பது எட்டப்படவில்லை, இந்நிலையில் விரைவாக அரசியல் தீர்வொன்று காணப்பட வேண்டும்” என்றும் விசாகா தர்மதாச குறிப்பிடுகின்றார்.

கிழக்கு மாகாணத்தில் மீள்குடியேற்ற பிரதேசத்தில் பெண்கள் சுயதொழில் மூலம் உற்பத்தி செய்த பொருட்களை சந்தைப் படுத்துவதில் பிரச்னைகளை எதிர்நோக்குகின்றனர்.

அவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டியதன் அவசியம் குறித்து மகளிர் விவகார துணை அமைச்சரின் நேரடிக் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.