தமிழர்களை கொச்சைப்படுத்திய தினமலர் தமிழகத்தில் எரிக்கப்பட்டது

ராஜீவ் கொலை வழக்கில் குற்றஞ் சாட்டப்பட்ட  மூன்று தமிழர்களின் தூக்குத் தண்டனையை இரத்து செய்யக்கோரி உயிர்த்தியாகம் செய்துக்கொண்ட தோழர். செங்கொடியின் தியாகத்தை கொச்சைப் படுத்தி கட்டுரை வெளியிட்ட தினமலர் நாளேட்டை எரித்து தமிழகத்தின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

அண்மையில் தீக்குளித்து உயிர் தியாகம் செய்த தோழர். செங்கொடி காதல் தோல்வியினாலேயே தற்கொலை செய்து கொண்டார் என்று தினமலர் நாளிதழ் வெளியிட்ட பொய்யான கருத்தை எதிர்த்தே இவ்வாறு நாளிதழ் எரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆர்பாட்டங்களின்போது “தமிழகத்தை விட்டு தினமலரைத் துரத்துவோம்.  தமிழினத் துரோகியே வெளியேறு” என்று முழக்கங்கள் எழுப்பப்பட்டன.  சென்னை உயர்நீதிமன்றத்திற்கு முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். புதுச்சேரியில் தினமலர் பத்திரிகையை எரித்த ஐம்பதுபேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத்தண்டனை குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருந்த முருகன், பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்டவர்களின் உயிரை காக்குமாறு கோரிக்கை விடுத்து தீக்குளித்து உயிரை மாய்த்திருந்த செஞ்கொடியை தினமலர் பத்திரிகை அவதூறாக செய்தி வெளியிட்டிருந்ததாக பத்திரிகையை எரித்ததாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
 
ஈழத்தமிழர்களுக்கும் ஈழப் போராட்டத்திற்கும் எதிரான செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வரும் தினமலர் பத்திரிகை முருகன், சாந்தன், பேரறிவாளன் முதலியோரை கொலைக்குற்றவாளிகள் என்றும் அவர்களை தூக்கிலிட வேண்டும் என்றும் கருத்து வெளியிட்டுள்ளது. இதேவேளை தூக்குத் தண்டனையை இரத்துச் செய்யக்கோரும் வகையில் மீண்டும் தமிழகத்தில் எழுச்சி அலை உருவாகி வருகிறது.